உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

231


ரோமாபுரிப் பாண்டியன் 231 அந்த வார்த்தைகள் முத்துநகையின் காதுகளில் பேரிடி முழக்கமென அதிர்ந்தன. கண்களைப் பொத்திக் கொண்டு ஓவென அழுதாள். தான் செத்துவிட்டோம் என்று நினைத்துத் தனக்கெதிரே ஒருத்தி நின்று அழுவதைப் பார்த்து இருங்கோவேள் மனமுருகினான். திடீரென வேடத்தைக் கலைத்து வீரபாண்டியாக வெளிப்பட்டு விடலாமா என்று ஒருகணம் எண்ணினான். ஆனால் அவன் நிலைமை அவனைக் கட்டுப்படுத்தி எச்சரித்து விட்டது. எதிரே இருங்கோவேள் மன்னன் நிற்கிறான் என்பதையும் மறந்து " அத்தான்! அத்தான்!!" என்று கதறிக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள் முத்துநகை. இருங்கோவேளும் தன்னை மறந்து அவளருகே சென்று . 'அழாதே கண்ணே!" என்று அவள் தோளைப் பிடித்தான். அவள் சோகமெல்லாம் எங்கேயோ பறந்து போயிற்று. "சீ!" எனத் திரும்பினாள். திரும்பிய வேகத்தில் இருங்கோவேளின் கன்னத்தில் 'பளார்' என ஓர் அறை கொடுத்து விட்டாள். அந்த அடி அவனைக் கலங்க வைத்து விட்டது. ஆனாலும் சமாளித்துக் கொண்டு புலிபோலக் குரலெழுப்பி, “என்ன துணிச்சல் உனக்கு? என் கையில் சிக்கிய பிறகு உன்னைச் சும்மா விட்டுவிடுவேன் என்று கனவு கூடக் காணாதே?” என்று கையைப்பிடித்து இழுத்துக் கட்டித் தழுவிட முயன்றான். வழியேதுமறியாத முத்துநகை, அங்குமிங்கும் ஓடித் தன்னையும் கற்பையும் காப்பாற்றிக் கொள்ள முயன்றாள். உன்னை இன்று நான் விடப்போவதில்லை!” என்று இருங்கோவேள் அவளைத் தழுவிக் கொண்டான். அவனது முரட்டுப் பிடியிலிருந்து முத்துநகை தன்னை விடுவித்துக் கொண்டு அவனது இடையில் இருந்த கட்டாரியைத் தன் கையிலே எடுத்துக் கொண்டு அவனை எதிர்ப்பதற்குத் தயாரானாள். தன் அருமைக் காதலியின் மன உறுதியையும் - கற்பின் திண்மையையும் வீரத்தையும் கண்ட இருங்கோவேள் பூரித்துப் போனான். இருந்தாலும் மேலும் அவளுடன் விளையாட வேண்டும் என்ற எண்ணத்தில் தீக்கண்களுடன் அவளை நெருங்கினான். முத்துநகை அவனை நோக்கிக் கட்டாரியை ஓங்கிவிட்டாள். தன் காதலனைத் தானேகொன்று சாய்க்க வேண்டிய சூழ்நிலை அவளையறியாமலே உருவாகிக் கொண்டிருந்தது. அவனும் அவளிடம் பாய்ந்துவிட்டான். அவள் கட்டாரியை அவன் மார்புக்கு நேரே கொண்டுவந்து விட்டாள்.