ரோமாபுரிப் பாண்டியன்
295
ரோமாபுரிப் பாண்டியன் 295 இந்தக் கேள்வியைக் கரிகாலன் கேட்கும்போது முகத்தில் ஆத்திரத்தின் சாயலும் இருந்தது; அன்பின் தேக்கமும் தெரிந்தது. தன் மீதுள்ள அன்பினால் அல்லவா தலை நகரத்து மக்கள் இத்தகைய கொதிப்படைந்திருக்கிறார்கள் என்பதை அவன் புரிந்து கொள்ளாமல் இல்லை. ஆனால், நாட்டு மக்கள் புரிந்து கொள்ளாத ஒன்றை அவன் யாரிடம் போய்ச் சொல்லுவான்? தமிழனுக்கு வீரம் எப்படிச் சொந்தமோ அதைப் போல் பெருந்தன்மையும் அவன் கூடப் பிறந்ததாயிற்றே! இருங்கோவேள் எதிரிதான். ஆனால் இன்று உயிர்த்துணைவியைப் பறி கொடுத்துவிட்டு நிற்கும் பரிதாபத்திற்குரியவன். பெருந்தேவி எதிரியின் மனைவிதான். ஆனால் அரச குடும்பத்தில் பிறந்து வாழ்க்கையில் பெரும்பகுதியில் கசப்பையே சுவைத்து, இன்று அந்த வாழ்க்கையை முடித்துக் கொண்டு விட்டாள். இந்த நிலையில் பெருந்தன்மையுள்ள எந்த மனிதன் தான் கரிகாலன் செய்ததை மகத்தான தவறு என்று சொல்ல முடியும்? இருங்கோவேளைக் களத்தில் சந்திப்பதற்கும், கட்டிய மனைவியின் சவத்தருகிலே சந்திப்பதற்கும் வேறுபாடு இல்லையா? கரிகாலன் இப்போது மிகவும் இக்கட்டான நிலைமையில் சிக்கிக் கொண்டிருந்தான். சோழ மண்டலத்திலுள்ள மக்களின் தலைவனாக - தந்தையாக - அண்ணனாக - தம்பியாகப் போற்றித் துதிக்கப்படுகிற மாமன்னனை உறவாடிக் கெடுப்பதற்கான கடைசி முயற்சியில் இறங்கி இருக்கும் இருங்கோவேளி டத்திலே மரியாதை வைப்பதும், மதிப்புக் காட்டுவதும் சோழ நாட்டை அழிப்பது போலாகும் என்று கருதிவிட்ட பெருங்குடி மக்களின் இதயக் கொந்தளிப்பை எப்படி அடக்க முடியும் என்று தெரியாமல் தவித்துத் துடித்தான் கரிகாலன். ஒரு கணம் கண்களை மூடி நினைத்துப் பார்த்தான். பூம்புகார்த் தெருக்களிலே மக்கள் நடமாட்டமில்லை. வீடுகளிலே விளக்கொளி இல்லை. விருந்தினரை வரவேற்கத் திறந்து கிடக்கும் வாயிற்கதவுகள் எல்லாம் தூங்குமூஞ்சியின் இமைகளைப் போலக் கிடக்கின்றன. இல்லத்து எதிரில் ஏந்திழையர் தீட்டிய எழிற்கோலங்கள் இல்லை. பட்டினப்பாக்கமும், மருவூர்ப்பாக்கமும் மௌன நிலையில் இருக்கின்றன. திரைகடலின் நுரையொதுங்கும் காட்சியைச் சுவைத்தவாறு மணற் படுக்கையைவிட என்னுடையவனின் மடிப்படுக்கையே சுகமானது என்று கூறி அவ்வண்ணமே படுத்திருக்கும் காதலர்கள் காணப் படவில்லை.