ரோமாபுரிப் பாண்டியன்
513
ரோமாபுரிப் பாண்டியன் 513 பாண்டிய நாட்டுத் தூதுவனும், வெறும் முகத்துதிக்காக அவனைப் பாராட்டிடவில்லை. தான் தமிழகத்தை விட்டுக் கிளம்பும்பொழுது தனக்குத் துணையாகக் கொற்கைப் பட்டினத்து இளவரசரின் துணை மெய்க்காவலனாகப் பணியாற்றிடும் வடிவம்பலம் என்னும் மற வனையே தன்னோடு அழைத்து வந்திடுவதற்கு எண்ணியிருந்தான் அவன். ஆனால், தாமரையைத் தேடிடும் வேலையில் ஈடுபடுத்திட வேண்டி, அவனை அனுப்பி வைக்க இசைந்திடவில்லை இளம் பெருவழுதி, தன்னுடைய முழு நம்பிக்கைக்கும் உரியவனாக வேறு யாரைத் தேர்ந்தெடுப்பது என்று செழியன் குழம்பிக் கொண்டிருந்த வேளையில், "நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? உங்களைப் போலவே தமிழ் மட்டுமே அறிந்த ஒருவரைத் துணைக்கு அழைத்துச் செல்வதை விடத் தமிழ் இலத்தீன் இரண்டு மொழிகளும் அறிந்த ஒருவர் துணையாக வந்தால் நல்லதுதானே? எங்கள் நாட்டிலிருந்து வணிகத்தின் பொருட்டு அயல்நாடு களுக்கெல்லாம் சென்று அனுபவங்கள் நிறையப் பெற்ற இளைஞன் ஒருவன் என்னுடன் இங்கே வந்துள்ளான். அவன் பெயர் 'சிப்பியோ' என்பதாகும். அவனை உங்களுக்குத் துணையாக அனுப்பி வைக்கிறேன். நீங்கள் விரும்பினால், ரோமாபுரி சென்ற பிறகும் உங்களுடைய மொழிபெயர்ப்பாளனாக அவனைப் பயன்படுத்திக் கொண்டிடலாம்” என்றார் பாண்டிய நாட்டுக்கு வந்திருந்த ரோமாபுரி யின் தூதுவர். அவருடைய வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டே, சிப்பியோ என்னும் அந்த இளைஞன் செழியனுக்கு இதுகாறும் வழித்துணையாக வந்ததோடு, அவனுக்குத் தேவையான பற்பல வசதிகளையும் கவனித்துக் கொண்டான். மரக்கலம் கடந்திட்ட ஒவ்வொரு நிலப் பகுதியைப் பற்றியும் அவன் அளித்திட்ட விளக்கங்கள் - வரலாற்று உண்மைகள் - கற்பனைக் கதைகள் யாவற்றிலும் சுவை கூட்டித் தன்பால் ஈடுபாடு கொள்ளுமாறு செய்துவிட்டான் செழியனை. செழியனிடம் அசைத்திட முடியாத ஓர் அன்புப் பிணைப்பு உண்டாயிற்று சிப்பியோவுக்கு! அதனால்தான் ரோமாபுரி மன்னர் மற்றும் அரசாங்க அதிகாரிகளுடன் தான் உரையாடுவதற்கு உரிய பாலமாக - மொழி பெயர்ப்பாளராக உதவிடவேண்டும் என்ற செழியனின் கோரிக்கையை அவனால் உதறித் தள்ளிட -புறக்கணித்திட முடிந்திட வில்லை. காலைச் சிற்றுண்டியை ஒருவழியாக முடித்துக்கொண்டு செழியன், அந்த அறையிலேயே முடங்கிக் கிடந்திடாமல் வழக்கம் போல், அந்த மரக்கலத்தின் மேல்தளத்திற்குச் சென்றிட்டான். சிப்பியோவும் அவனைப் பின் தொடர்ந்தான்.