ரோமாபுரிப் பாண்டியன்
555
ரோமாபுரிப் பாண்டியன் 555 "உன் கேள்வியைக் கேட்டு எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது பல்லாயிரக்கணக்கான கற்களுக்கு அப்பால் இருக்கும் உங்கள் நாட்டிலே உளவு அறிவதால் எங்கள் நாட்டுக்கு என்ன ஆகப்போகிறது? அத்துடன் அகஸ்டஸ் பெருமகனைப் புரிந்துகொள்ளாமல் இருப்பது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். நாலா திக்குகளிலும் புகழொளி வீசிடும் உங்கள் நாட்டின் நாயகன், உட்பகையென்னும் நரிகளால் - நச்சரவங்களால் தீண்டப்படக்கூடாதே என்னும் நல்லெண்ணத்தால்தான், நான் மேசனசைப்பற்றி அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டினேனேயன்றி வேறல்ல; ஆகவே எனக்கு ஏதோ உள்நோக்கம் இருப்பதாக நீ எண்ணிக் கொண்டால் அது முழுக்க முழுக்கக் கற்பனைதானே தவிர, உண்மை ஆகாது! இந்த விளக்கத்திற்குப் பிறகும் என் மீது எழுந்த ஐயப்பாடு விலகிடவில்லையென்றால் நீயே ஒற்றர்களை வைத்து என்னைக் கண்காணிக்கலாம்.” செழியன் இங்ஙனம் உணர்ச்சிப்பெருக்குடன் உரைத்திடவும் ஜூனோவோ கடகடவென்று வாய்விட்டுச் சிரித்திட்டாள்; தன் உடம்பு குலுங்கிட அவள் சிரித்த சிரிப்பில் விழிகளிலிருந்து கண்ணீர்கூட வழியலாயிற்று. "உங்கள்மீது எனக்கு ஐயப்பாடு என்றால், இத்துணைக் கலகலப்பாக உங்களுடன் மனம்விட்டு பேசிடுவேனா? பழகிடுவேனா? நீங்கள் உளவு அறிவதாகக் கொஞ்சம் தெரிந்தாலும் அதை உங்களிடமா நேரிலேயே கேட்பேன். ஆட்களை வைத்துக் கையுங்களவுமாகப் பிடித்திட மாட்டேனா? நல்ல வேடிக்கை!... இந்த ஆண்கள் மிகவும் மோசம்! உடனே உணர்ச்சி வசப்பட்டுவிடுவதுதான் உங்களுக்கு வாடிக்கை!' ஜூனோவின் இந்தச் சொற்களைக் கேட்டதும் செழியன் வெட்கித் தலைகுனிந்தான். 'வெளித்தோற்றத்தில் - பேச்சில் -விளையாட்டுப் பெண் போல இருக்கிறாள் ஆனால் எல்லா வகையிலும் என்னை மடக்கி விடுகிறாளே! பொல்லாத குறும்புக்காரிதான் இவள்; இவளைக் கட்டிக் கொள்கிறவன் படாதபாடுதான் பட வேண்டும்' என்று உள்ளூர எண்ணிக் கொண்டான் அவன். இதற்குள் அவன் தங்கியிருக்கும் மாளிகை வாசலுக்கு வந்து விட்டது அந்தத்தேர். அதனின்றும் இறங்கிய அவனிடம் "என்மேல் கோபமா?" என்று செல்லமாகக் கேட்டாள் ஜூனோ. இல்லை,' என்று சொல்லாமலே தலையை மட்டும் அசைத்திட்டான் செழியன்.