உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒத்திவைப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

ஒத்திவைப்பு, கவன ஈர்ப்பு தீர்மானங்களின் மீது

உரை : 10

மாநிலத்திற்கு தனிக் கொடி

நாள் : 26.08.1970

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : தலைவர் அவர்களே, நம்முடைய மாநிலத்திற்கு ஒரு தனிக் கொடி வேண்டுமென்கிற கோரிக்கையின் அடிப்படையில் இன்று தமிழ் நாட்டு சட்ட மன்றத்திலும் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு டெல்லி நாடாளுமன்றத்திலும் நேற்றையதினம் டெல்லி மாநிலங்கள் அவையிலும் பெரும் விவாதங்கள் நடைபெறுகிற நிலை உருவாகியிருக்கிறது. நம் தமிழ் நாட்டுக்கு என்று, நம்முடைய மாநிலத்திற்கு என்று கேட்கிற இந்தத் தனிக் கொடி பிரிவினை எண்ணத்தோடோ அல்லது தமிழ் நாடு தனியாக இந்தியாவிலிருந்து துண்டித்துக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தோடோ கேட்கப்படுவதல்ல என்பதை நான் மிகுந்த உறுதியோடு பல முறையும் எடுத்துச் சொல்லியிருக்கிறேன்.

மாநிலங்கள் அவையில் இந்தக் கொடி பற்றிய பிரச்சினை வந்தபோது பதில் உரை ஆற்றிய இந்திய பிரதமர் அவர்கள் நாட்டை பலவீனப்படுத்துவதான எந்த முயற்சியும் எதிர்க்கப்படும் என்றும் தேசியக்கொடி அல்லது தேசிய கீதத்தின் முக்கியத் துவத்தை குறைக்கக்கூடிய எதுவும் அனுமதிக்கப்படமாட்டாது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். பிரதமர் அவர்கள் ராஜ்ய சபையில் கூறிய இந்த வாசகத்தை எழுத்துக்கு எழுத்து இந்த அரசு அப்படியே ஒப்புக்கொள்கிறது என்பதை நான் இங்கு மிகுந்த மரியாதையோடு தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் இதைக் கூறிய பிரதமர் அவர்கள் மற்றொன்றையும் கூறியிருக்கிறார்கள். கவர்னர்களுக்கும், மாநிலங்களுக்கும் தனிக்கொடி வைத்துக்கொள்ளும் பழக்கம் புதியதல்ல. அமெரிக்கா உட்பட பல நாடுகளில் இது இருக்கிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இதையும் நாம் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.