404
நிதிநிலை அறிக்கை மீது
காரணமோ சுப்பராயன் அவர்கள் பேசும்போது அழுத்தம் திருத்தமான கருத்துக்கள் எடுத்து கூறக்கூடிய ஆற்றல் படைத்தவர். எதிர்ப்பான கருத்துக்களை அவர் சொன்னாலும் கூட அவற்றை நான் ஆழ்ந்து கவனிப்பது என்னுடைய வாடிக்கை. காரணம் அந்த அளவிற்கு சொல் வேகம், சொல்லில் அழுத்தம் - சொல்கின்ற வார்த்தையில் ஒரு கனம் இத்தனையும் வாய்ந்த பேச்சு நண்பர் சுப்பராயன் அவர்களுடைய பேச்சாகும். ஆனால், அன்றைக்கு நான் அந்தப் பேச்சைக் கேட்டபோது - எங்கிருந்து கேட்டாய் என்றெல்லாம் என்னைக் கேட்கக் கூடாது - நான் கேட்டபோது, அவருடைய பேச்சில் 'தொங்கு சதை', 'மூச்சுத் திணறல்', 'கவர்ச்சித் திட்டங்கள்' போன்ற அவரே பிறகு நினைத்துப் பார்த்தால் இப்படியா பேசிவிட்டோம் என்று எண்ணக்கூடிய சொற்றொடர்களையெல்லாம் பயன்படுத்தி யிருந்தார். தொடக்கத்திலேயே மூச்சுத் திணறலோடு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். உண்மைதான். என்னுடைய நிலையை அவர் உணர்ந்ததற்காக நான் உள்ளபடியே பாராட்டுகிறேன்.
திரு. கே. சுப்பராயன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நான் அன்றும், இன்றும் பெரிதும் மதிக்கத்தக்க ஒரு தலைவர் கலைஞர் அவர்கள். நான் மூச்சுத் திணறல் என்று சொன்னதனுடைய பொருள் பட்ஜெட் தாக்கலில், நிதிப் பற்றாக்குறையால் பட்ஜெட் மூச்சுத் திணறுகிறது என்று குறிப்பிட்டேன். மிக எச்சரிக்கையோடுதான் அதைக் குறிப்பிட்டேன் அவைக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.
என்பதை
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: நான் அதை முழுமையாக சொல்லி முடிப்பதற்குள் சுப்பராயன் அவர்கள் குறுக்கிட்டு விளக்கம் அளித்துவிட்டார். அந்த விளக்கத்தையும் இந்த உரையிலே, என்னுடைய உரையோடு சேர்த்துக் கொள்கின்றேன். மூச்சுத் திணறல் ஏற்படுவது சில நேரங்களில் தோழமைக் கட்சிகளாலும் ஏற்படுகிறது. எப்படியென்றால் ஒரு வரியைப் போடும்போது, அந்த வரி கூடாது என்று சொல்வதும் தோழமைக்கட்சிகள்தான். ஏன் வருவாயைப் பெருக்கி நல்ல திட்டங்களை நிறைவேற்றக்கூடாது என்று கேட்பதும் தோழமைக்கட்சிகள்தான்.