உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

ஆக்கபூர்வமான யோசனையைச் சொல்லவேண்டும் என்ற அக்கறையோடு நான் அன்றைய தினம், இந்த மன்றத்திலே பேசும்போது இதிலே உள்ள சிக்கல்களை, சிரமங்களை எண்ணிப் பார்த்து தக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று எடுத்துச் சொன்னேன். பிறகு முதலமைச்சர் அவர்கள் பதிலளிக்கும்போது எல்லா விஷயங்களையும் அதிகாரிகளைக் கலந்து கொண்டுதான் செய்கிறோம் என்கின்ற வகையில் அளித்த பதில், ஏற்கனவே திட்டவட்டமாக பரிசீலித்து எல்லா நடவடிக்கைகளையும் செய்து விட்டார்கள் என்ற இனிப்பான உணர்வு எனக்கு வந்தது. பிறகு நிதிநிலை அறிக்கையின்மீது நடைபெற்ற விவாதத்தில், எதிர்க் கட்சித் தலைவரே இதில் உள்ள சிரமங்களை எல்லாம் எடுத்துக் கூறிவிட்டார்கள். ஆகவே, இவைகளை எல்லாம் தொடர்ந்து பரிசீலித்துக் கொண்டிருக்கிறோம் என்று உணவமைச்சர் அவர்கள் சொன்னார்கள்.

பிறகு முதலமைச்சர் சொன்னார், இந்தக் கூட்டத்தொடர் முடிவுற்றதும் உடனடியாக அதிகாரிகளை கலந்து இந்த 16,000 நியாய விலைக் கடைகளை திறக்கும் முயற்சியில் அரசு இறங்கும் என்ற உறுதிமொழியினை இந்த மாமன்றத்தில் அவர்கள் தெளிவாக திட்டவட்டமாக அறிவித்தார்கள். ஆனால் இப்போது அளிக்கப்பட்டுள்ள துணை நிதி நிலை அறிக்கையில் என்ன கூறப்பட்டது? 16,000 ரெவின்யூ கிராமங்களில் நியாய விலைக் கடை திறக்கப்பட தொடங்கிவிட்டோம் என்றா? இல்லை. சில மாவட்டங்களில், நெல்லை, இராமநாதபுரம், மதுரை போன்ற மாவட்டங்களில் 442 நியாய விலைக் கடைகளை தொடங்கப் போவதாக அறிவித்து இருக்கிறார்கள். அவர்கள் அறிவித்தது 16,000 நியாய விலைக் கடைகள். இப்போது தொடங்குவதாக சொல்லி இருப்பது 442 கடைகள். கடல் வருகிறது என்று சொல்லி விட்டு கடுகு வந்து விட்டது என்று சொல்வதைப்போல் இன்றைக்கு இந்தக் கடுகைக் காட்டி பாருங்கள், பாருங்கள் நாங்கள் 442 நியாய விலைக் கடைகளைத் திறக்கத் தொடங்கி விட்டோம் என்று கூறியிருக்கிறார்கள்.

நியாய விலைக் கடைகளைத் திறக்க இதைவிட ஏற்றதொரு காலம் என்ன என்பதை தயவு செய்து எண்ணிப் பார்க்க வேண்டும். புயல் வீசி, வெள்ளத்தால் மக்கள் தவித்து,