உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

23

மறந்து விடுவதற்கில்லை, நான் சொல்வதை யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம், போலீஸ்காரர்கள் அதிகாரிகளால் மட்டும், ஆட்டி வைக்கப்படவில்லை, அமைச்சர்களாலும் ஆட்டி வைக்கப்படுகின்றார்கள் என்கிற செய்தியை இந்த மன்றத்தில் சொல்வதின் மூலமாக அதற்கொரு நீதி கிடைக்கும் என்ற எண்ணத்தில் கூற விரும்புகிறேன். தென்னாற்காடு மாவட்டத்தில் 'இருப்பு' என்ற கிராமத்தில் அரசியம்மன் கோவிலில் பழைய தர்மகர்த்தாவாக இருந்தவர் நீக்கப்பட்டார். அதன் பேரில் புதிய தர்மகர்த்தாவும் நியமித்தாகிவிட்டது. புதிய தர்மகர்த்தாவிடம் பழைய தர்மகர்த்தா உடனடியாக பொறுப்பை ஒப்படைக்க வேண்டியது நியாயம். ஆனால் பழைய தர்மகர்த்தா நியாயமான முறையில் பொறுப்பை ஒப்படைக்கவில்லை. இதனால் புதிய தர்மகர்த்தா இப்பிரச்சினையை நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றார். நீதிமன்றத்தில் புதிய தர்மகர்த்தாவிடம் பொறுப்பு உடனடியாக ஒப்படைக்கப்பட வேண்டும்; அதற்கு போலீஸ் சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப் பட்டது. ஆனால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதற்கும் பின்னால் பழைய தர்மகர்த்தாவிடமிருந்து பொறுப்பை வாங்கித் தருவதற்கு போலீஸார் நடவடிக்கை எடுக்கத் தயங்கியதன் காரணமாக புதிய தர்மகர்த்தா, திரும்பவும் நீதிமன்றத்திற்கு இதைக்கொண்டுபோனபோது நீதி மன்றத்தில் போலீசாரை அழைத்து, “உடனடியாக இதன் மீது நடவடிக்கை எடுக்கிறீர்களா, அல்லது உங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாமா?” என்று கேட்டு கடுமையான கட்டளையை பிறப்பித்த பின்னால் போலீசாரால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏன் போலீசார் தயங்கினர் என்று கேட்டால், கனம் அமைச்சர் திரு. பூவராகவன் அவர்கள் இதில் தலையிட்டார் என்று செய்தி நம்பத் தகுந்த இடங்களிலிருந்து கிடைத்திருக்கிறது. இதில் அவர்கள் தலையிட்டதற்குக் காரணம், பழைய தர்மகர்த்தாவாக இருந்தவர், அமைச்சர் திரு. பூவராகவன் அவர்களுடைய அண்ணன் என்றும் தெரியவந்தது. இவ்விதம் அமைச்சர்களால் கூட போலீஸ் ஆட்டி படைக்கப்படுவது நியாயம்தானா, தர்மம்தானா, நீதிதானா - நீதி நிலைக்குமா என்பதை இந்த மன்றத்தில் தங்கள் மூலமாக கேட்டுக் கொள்ள ஆசைப்படுகிறேன்.