326
காவல்துறை பற்றி
அது மாத்திரமல்ல. இந்தச் சூழ்நிலையில் அவர் துடித்துக்கொண்டிருக்கும்போது அவர் வீட்டிலே 10,000 ரூபாய் பெருமானமுள்ள நகைகள் களவு போகின்றது. அதுபற்றி புகார் செய்கிறார், நடவடிக்கை எடுக்கவில்லை. நாங்கள் நடவடிக்கை எடுக்க கருதினோம். ஆனால் மேலே உள்ள அதிகாரிகள் குறுக்கிடுகிறார்கள் என்று நடவடிக்கை எடுக்கவேண்டிய அதிகாரிகள் அவருக்குத் தெரிவிக்கிறார்கள். அதைத் தொடர்ந்து அவருடைய மகன் கை கெடிகாரம் திருடிக்கொண்டு போகிறார்கள். அதைத் தொடர்ந்து அவருடைய மோட்டார் சைக்கிள் திருடப்படுகிறது. ஒரு இன்ஸ்பெக்டர் வீட்டில் 10,000 ரூபாய் பெறுமான நகைகள் களவு போகிறது. அதற்கு நான்கு நாளைக்குப் பிறகு மகன் கைக்கெடிகாரம் களவாடப்பட்டு இருக்கிறது. அதற்குப்பிறகு சில நாட்களுக்கு பின்பு அவருடைய மோட்டார் சைக்கிள் திருடுபோகிறது. இதைப்பற்றி எவ்வளவு புகார் செய்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
பிறகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுபடி 23-6-1980 அன்று அவர் வேலைக்கு ஆஜராகிறார். 23-ம் தேதி அன்று முதலமைச்சர் உத்தரவுப்படி வேலையில் சேர்ந்த அவரை 27-6-1980-ம் தேதி அன்று வேலை நீக்கம் செய்கிறார்கள். டிஸ்மிஸ் செய்கிறார்கள். டிஸ்மிஸ் செய்துவிட்டு அவர் தலைமறைவாக இருக்கிறார் என்று சொல்லி அவர்மீது போலீஸ் ஸ்டேஷனைத் தாக்க வந்ததாக வழக்கு இருப்பதாகச் சொல்லி போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் செய்யப் போனார் அல்லவா, கெடிகாரம் காணாமல் போய்விட்டது, நகைகள் காணாமல் போய்விட்டது, சைக்கிள் மோட்டார் காணாமல் போய்விட்டது என்று அதனால் போலீஸ் ஸ்டேஷனைத் தாக்க வந்தார் என்று குற்றம்சாட்டி அவர்மீது பிடி வாரண்ட் எடுக்க வேண்டும் என்று நீதி மன்றத்திற்குச் சென்று, அவர் தலைமறைவாக இருப்பதாகச் சொல்லி பிடிவாரண்டை கோர்ட் மூலமாக எடுக்க முயற்சி எடுக்கப்பட்டு அந்த முயற்சியில் இந்த அரசு அல்லது காவல் துறை வெற்றி பெற்று இருக்கிறார்கள். எனவே பழிவாங்கும் படலம் முடியவில்லை. தனிப்பட்ட ஒரு இன்ஸ்பெக்டரைக் (ஆய்வாளர்) கூட எவ்வளவு படுமோசமாக அது துரத்திக்கொண்டு இருக்கிறது என்பதை அவையின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காகச் சொல்கிறேன்.