உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

331

நானும் நம்முடைய முதலமைச்சரும் சண்டைபோட்டுக்கொள் கிறோம் என்றால் வேறு விஷயம். நானும் நாவலரும் சண்டை போட்டுக்கொள்கிறோம் என்றால் வேறு விஷயம். எங்களுக்குள்ள நீண்டகால உறவு, நீண்டகால நட்பு, நீண்டகாலமாக இந்த இயக்கத்திலே நாங்கள் ஆற்றிய பணி, இவைகள்மூலம் நாங்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொள்கிற நேரத்தில் ஏற்படுகிற விளைவுகளும், அதே நேரத்திலே இப்படிப்பட்ட அமைச்சர்கள் சிலபேர்கள் இவ்வளவு வேகமாக வார்த்தைகளை பொழிகின்ற இந்த காட்சிகளையும் காணுகின்ற நேரத்தில் அமைச்சர்கள் கொஞ்சம் அடக்கத்தோடு பணியாற்றினால் நல்லது என்பதை நான் தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்தப் பிரச்சினையைப் பொறுத்த வரையில் அதுவும் நம்முடைய முதலமைச்சரவர்களுடைய தலைமையில் இயங்குகின்ற ஒன்று என்ற காரணத்தால் ஒரு முக்கியமான விஷயத்தை இங்கே சொல்ல விரும்புகிறேன். மதுரை மாவட்டத்தினுடைய கல்வி அலுவலர் அதாவது டீ. ஈ. ஓ. திரு. ஸ்டான்லி சாமுவேல் என்பவர் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் ஆணையாளருக்கு மிகமிக அவசரம் என்று ஒரு உத்தரவை பதிவு அஞ்சலில் 23-5-1979 இல் அனுப்புகிறார். அந்த உத்தரவினுடைய எண் 12472 என்பதாகும். அது அனுப்பப்பட்ட தேதி 23-5-1979. அப்படி கமிஷனருக்கு அனுப்பப்பட்ட அந்த உத்தரவை அவர் செயல்படுத்த வேண்டும். என்ன உத்தரவு என்றால் ஆசிரியர்களுடைய பொது மாறுதலுக்குரியது, அதாவது 10, 15 ஆசிரியர்களை பல இடங்களுக்கு மாற்றுதல் குறித்து அந்த உத்தரவை டீ. இ. ஓ. மதுரை மாவட்ட கல்வி அதிகாரி அவர்கள் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் கமிஷனருக்கு அனுப்புகிறார் தேதி 23-ல். 7 நாட்களுக்குள்ளே எவ்வளவு பெரிய மாறுதல் பாருங்கள். அப்போது 1979இல் இருந்த ஆளும் கட்சி எம். எல். ஏ. அவர்கள் அதிலே தலையிடுகிறார். நிர்வாகத்திலே தலையீடே இல்லை, நேர்மை நியாயம் நீதி தர்மம் தழைத்து ஓங்குகிறது என்றெல்லாம் பேசப்படுகிறதே அது இல்லை என்பதைச் சுட்டிக்காட்ட கோடிட்டுக்காட்ட நான் ஒன்றிரண்டு உதாரணங்களை மட்டும் பல உதாரணங்கள் அல்ல, நேரத்தைக் கருதி ஒன்றிரண்டு மட்டும் இங்கே சொல்ல விரும்புவதால் குறிப்பிடுகிறேன்.

-