கலைஞரின் சட்டமன்ற உரைகள்
451
கொண்டு, அரசையும் வற்புறுத்துகின்ற நிலை இருப்பதை நாம் காண்கின்றோம்.
நாட்டின் பாதுகாப்புக்காக, சமுதாயத்தின் பாதுகாப்புக்காக சமுதாயத்திலே நல்லொழுக்கம் ஒளிவிட வேண்டும் என்று சொல்லப்பட்ட நோக்கத்தோடு, பிரிட்டிஷார் காலத்திலே காவல் துறை அமைக்கப்பட்டது. அப்போது சுதந்திர தாகம் கொண்டவர்களால் காவல்துறையில் இருக்கும் நல்லவர்கள் கூட எள்ளி நகையாடப்பட்டார்கள். அவர்கள் எல்லாம், நம்மை அடிமைப்படுத்திக் கொண்டிருக்கின்ற ஒரு ஆட்சிக்குக் காவலாக இருக்கின்றார்களே என்ற ஆத்திரத்தின் காரணமாக, வெறுப்பின் காரணமாக அவர்களைத் தீக்குச்சிகள் என்றும், அவர்களைச் செந்தலைப் பூச்சிகள் என்றும் வர்ணித்த காலம் ஒன்று உண்டு.
இந்திய நாடு சுதந்திரம் பெற்ற பிறகு பிரிட்டிஷார் அமைத்த காவல் துறைக்கு விடை கொடுத்துவிட வேண்டுமென்று, பொறுப்பேற்ற யாரும் கருதவில்லை. காவல்துறை நீடிக்க வேண்டுமென்ற அந்த எண்ணத்தோடு அதை நீடித்தார்கள். இந்தியாவிலே உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் காவல்துறை தங்களுடைய கடமையைச் செய்வதற்கும் சமுதாயப் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்துவதற்கும் ஏற்றவகையில் பல திருத்தங்கள் செய்யப்பட்டு, காவல்துறை இயங்கி வருகின்றது. தமிழகத்தைப் பொறுத்தவரையிலே, பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் காலத்திலே, இந்தக் காவல்துறையிலே இருக்கின்ற சீர்கேடுகளை, குறைபாடுகளைச் சுட்டிக்காட்டிய பொதுமக்கள் காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இருக்கவேண்டிய தொடர்பு இல்லாத நிலைமை இவைகளை எல்லாம் எண்ணிப் பார்த்து, அப்போதிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர், "உங்கள் நண்பன்" என்ற ஒரு படத்தையே எடுத்துக்காட்டி, காவல் துறையிடம் எப்படி மக்கள் நடந்துகொள்ள வேண்டும், மக்களிடம் எப்படிக் காவல் துறை நடந்துகொள்ளவேண்டும், ஒருவர் அதிகாரம் செலுத்துபவ ராகவும், இன்னொருவர் அதிகாரத்திற்கு அடிபணிபவராகவும் இருக்கக் கூடாது, நட்பு முறையில் அந்த உணர்வோடு, பொது மக்களும் காவல் துறையும் பழகிட வேண்டும், இயங்கிட வேண்டும் என்பதற்காக அத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்டது