உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சங்கிலிச்சாமி

“சங்கிலியானந்த சாமிக்கு ஜே!”

“சங்கிலியானந்த சாமிக்கு ஜே! ஜே! ஜே!”

பக்தர்கள் குதித்தார்கள்; பரவசத்தால் நர்த்தனமாடினார்கள்; பரமானந்த கீதம் பாடினார்கள்.

‘அஷ்டமா சித்துபுரி ஐயனே போற்றி! துஷ்டர் தம் துடுக்கடக்கும் தூயனே போற்றி! கஷ்டங்கள் தீர்த்திடும் எங்கள் கண்கண்ட தெய்வமே போற்றி, போற்றி!’

இந்தப் பாடலை, சாமியாரின் சிஷ்யன் சம்பந்தம் உரக்கப் பாடினான். சம்பந்தத்தின் முக விகாரங்கள்... தானே வரவழைத்துக் கொண்ட அங்க சேஷ்டைகள்... போற்றிப் பாடலுக்குப் புது மெருகு கொடுத்து பக்தர் கூட்டத்தைப் புளகாங்கிதத்தில் ஆழ்த்தின.

“நமப்பார்வதி பதே” ஒரே பேரொலி; திடீரென அமைதி. சின்னப்பண்ணை முதலியார் சாமியாரின் பாதங்களைத் தொட்டுக் கும்பிட்டு மலர்களைத் தூவினார். பக்தர்களும் பண்ணையாரைப் பின்பற்றிப் பாதபூசை செய்து... மலர்... காசு... பணம்... இவைகளால் அர்ச்சித்து நின்றனர். “ஓம் சங்கரா சிவ” இந்த முணுமுணுப்போடு சங்கிலிச்சாமி தம்மை வணங்கி எழுந்தவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கினார்.