உள்ளடக்கத்துக்குச் செல்

கண்ணாயிரத்தின் உலகம்/ரொட்டித் துண்டு

விக்கிமூலம் இலிருந்து

ரொட்டித் துண்டு

ரொட்டித் துண்டு

(நாடகம்)

காட்சி—1.

இடம்: செல்வபுரி ரயில் நிலையம்

இருப்போர்: ராம்லால் வணிகர், பணியாள், வேறு பலர்.

நிலைமை: இரயில் வந்து நிற்கிறது. இறங்குவோரும் ஏறுவோரும் வேலை செய்வோரும் வழி அனுப்ப வத்தவர்களும், பண்டங்கள் விற்போரும்.

ராம்லால் முதல் வகுப்பு வண்டியிலிருந்து இறங்குகிறார்...

ராமலிங்கம் என்பது அவருடைய பெயர். வடநாட்டு வியாபார தொடர்பு காரணமாக ராம்லால் என்று பெயரை மாற்றிக் கொண்டார்.

பணியாள் ஓடிச் சென்று, அவருடைய பெட்டி படுக்கையை எடுத்துக் கொண்டு அவர் பின்னால் அடக்கமாக வருகிறான்.

ராம்லால் வருவது கண்டு, பலர் தொலைவில் இருந்தபடியே வணக்கம் கூறுகிறார்கள்.

அவர்கள் வணக்கம் கூறுவது கடமைக்காகவே! பாசத்துடன் அல்ல என்பது விளக்கமாகத் தெரிய வருகிறது.

ராம்லால் யாரையும் குறிப்பிடத்தக்க முறையில் பார்த்து வணக்கம் கூறவில்லை. எல்லோருக்குமாகச் சேர்த்து, பொதுவாகத் தலையைச் சிறிதளவு சாய்த்துவிட்டு நடக்கிறார். செருக்கு மிக்க சீமான் என்பதைக் காட்டும் நடை உடை.

பாட்டாளிகள் சிலர், ராம்லாலைக் கேலியாகப் பார்க்கிறார்கள்!

இரண்டு, மூன்று இளைஞர்கள், ஏதோ பேசிக்கொண்டும், கைகொட்டிச் சிரித்துக் கொண்டும் ஒருபுறம் இருக்கிறார்கள்.

ரயிலடியில், மிக எடுப்பான இடத்தில் கண்ணைக் கவரும் வகையில் "வாங்கி விட்டீர்களா? ரொட்டித் துண்டு" என்ற விளம்பரத்தாள் ஒட்டப்பட்டிருக்கிறது.

ராம்லாலின் கண்களில் அது படுகிறது, ஒரு கணம். வெளிப்புறம் வருகிறார், மோட்டார் தயாராக இருக்கிறது. பணியாள் பெட்டி, படுக்கையை வைக்கிறான். மோட்டார் ஓட்டி, பயந்தபடி மோட்டார் கதவைத் திறக்கிறான். ராம்லால் மோட்டாரில் அமருகிறார். பணியாள், முன் பக்கம் உட்காருகிறான். மோட்டார் கிளம்புகிறது.

நெடுஞ்சாலைகள் வழியாக மோட்டார் செல்கிறது. கண்களை மூடிக் கொண்டு ஏதோ யோசனையில் இருக்கிறார் ராம்லால்.

ராம்லால்: சின்னவர் வந்தாரா...?

பணியாள்: இல்லீங்க.

ராம்: ஏனாம்? வந்திருக்க வேண்டுமே! லீவுதானே இப்பொழுது...

பணி: (புன்னகையுடன்) லீவு தானுங்க,..ஆனா அவருக்கு ஓய்வு ஏதுங்க...

[ராம்லால் கண்களைத் திறக்கிறார். 'ரொட்டித் துண்டு' விளம்பரம் பல இடங்களில் இருக்கக் காண்கிறார்.]

பணி: (பொங்கும் மகிழ்ச்சியை அடக்கிக் கொண்டு) நிறைய மீட்டிங்குங்க சின்னவருக்கு...அதனாலேதான் வர முடியல்லே...

[மோட்டார் ஆலை அலுவலகத்தில் சென்று நிற்கிறது]

ராம்லால் வருவதைக்கூடக் கவனிக்காமல், கணக்காளர் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறார்.

மற்றவர்கள், ராம்லால் உள்ளே வரக் கண்டதும், எழுந்து நிற்கிறார்கள்.

அருகே சென்று ராம்லால் கணைத்த பிறகுதான் கணக்காளர் பதறி எழுந்திருக்கிறார். புத்தகத்தை மூடி, கையிலே வைத்துக் கொண்டே...

கணக்காளர்: வாங்க...

[ராம்லால் கூடத்திலே வேறோர் பக்கம் இருக்கும் சோபாவில் போய் உட்கார்ந்தபடி...]

ராம்: என்னய்யா விசேஷம்...இந்த ஒரு மாதமா...

[கணக்காளர் ராம்லாலின் எதிரே நாணிக் கோணி நின்றபடி]

கணக்: நல்ல விசேஷம்தாங்க...

ராம்: (ஒரு கணக்கேட்டை புரட்டியபடி) வசூல் வேலை?

கண: முறைப்படி நடக்குதுங்க...சின்னவரை பார்த்திங்களா!

ராம்: இல்லையே! ஏன்?

கண: (பூரிப்புடன்) கேட்டேனுங்க...நாங்க இங்கே பத்து நாளா, சின்னவரு வருவாருன்னு காத்துகிட்டு இருக்கிறோம்...

ராம்: (கணக்காளரின் பூரிப்பைக் கவனிக்காமல்) லீவுக்குக்கூட வராமல் இருக்கிறான்...

கண: வேலைத் தொந்தரவுதானுங்க...ஏகப்பட்ட கூட்டமாம்...சின்னவருக்கு....

ராம்: (கணக்காளர் பேச்சை கவனிக்காமல்) ஏன்யா! நல்ல கூட்டம்தானா நம்ம கொட்டகையிலே...

கண: பரவாயில்லிங்க...மோசம் இல்லை...மத்த கொட்டகைக் கூட்டத்தைவிட இங்கே ஐம்பது, நூறு அதிகம்தானுங்க...

ராம்: (சலிப்புடன்) கொட்டகை புதிதா கட்டு, ஊரே திரண்டு வரும்...கொட்டகை கொள்ளாத கூட்டம் வரும்னு சொன்னே...அப்பொ...என் பணத்துக்கு வேட்டு வைக்க இப்ப, பரவாயில்லை...மோசமில்லைனு பேசறே...சரி,சரி ...தபாலெல்லாம் எடுத்துகிட்டு...

கண: காலையிலே பங்களாவுக்கு அனுப்பி விட்டேனுங்க

[ராம்லால் எழுந்திருக்கிறார், வெளியே புறப்பட]


காட்சி—2.

இடம்: ஆலை அலுவலகம் உட்புறக்கூடம்.

இருப்போர்: கணக்காளர், அலுவலர்கள், பணியாட்கள்.

நிலைமை: கணக்காளர் மெத்தை போட்ட நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, 'ரொட்டித்துண்டு' என்ற புத்தகத்தை சுவையுடன் படித்துக் கொண்டிருக்கிறார். மற்றவர்கள், எழுதுவதும் ஏடுகளை ஒழுங்கு படுத்துவதுமாக உள்ளனர்.

காட்சி—3.

இடம்: ராம்லால் மாளிகை. 'அயோத்யா' என்ற பெயர் கொண்டது. பெரிய நுழைவு வாயிலில் கூர்க்கா காவல் நிற்கிறான். முன்புறம் அழகான தோட்டம்—நிறைய மலர்ச்செடிகள், கொடிகள்.

இருப்போர்: இரண்டு வேலையாட்கள்.

நிலைமை: செடிகளுக்கு தண்ணீர்ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள். சிமெண்ட் பெஞ்சுகள் இங்கும் அங்கும் அமைக்கப்பட்டிருக்கின்றன. அணில்கள், அவைகளின் மீது தாவுவதும் கீழே குதிப்பதுமாக உள்ளன.

ஒருவேலையாள்: அண்ணே...இந்த அணில்களுக்கு, முதுகிலே இருக்கிற கோடு இருக்கே மூணு கோடு, அது அந்தக் காலத்திலே இராமரு தடவிக் கொடுத்ததால வந்ததாமே...நெஜமா?...

மற்றவன்: ஏண்டா, அது நெஜமா இல்லையான்னு அணிலைக் கேட்கணும், இல்லையானா ராமரைக் கேட்கணும்; என்னைக் கேட்டால்...

ஒரு வேலை: எதுக்கும் குறும்பு பேச்சுத்தான்; உன்னோட போக்கே...நானும் பார்க்கிறேன்; வரவர ஒரு தினுசா மாறிகிட்டு வருது...

மற்றவன்: டேய்! போதும்டா ஆராய்ச்சி...அட, எங்கப்பா, அறிவுக் களஞ்சியம்...வேலையைப் பாரு...ஒண்ணு சொல்லட்டுமா...அந்தக் காலத்திலே ராமர் போட்டார் மூணுகோடு, அணிலோட முதுகுக்குன்னு சொல்றியே, அதைப்பத்தி எனக்குத் தெரியாது...ஆனா இராமரு இருக்காரே, நம்ம எஜமானரு இவரு, போட்ட நாலு கோடு முதுகிலே இருக்குது காட்டவா...
[மோட்டார் சத்தம் கேட்கிறது]

இருவரும் பதறுகிறார்கள். செய்தித்தாளை, அவசரமாக வேலையாள் எடுக்கச் செல்கிறான். அது காற்றிலே பறக்கிறது.

அதிலே ரொட்டித் துண்டு விளம்பரம் கொட்டை எழுத்திலே இருக்கிறது.

மோட்டாரில் இருந்த ராம்லால் கண்களில் விளம்பரம் தெரிகிறது. கீழே இறங்கி, வேகமாக உள்ளே செல்கிறார்.

காட்சி—4.

இடம்: மாளிகை உட்புறக்கூடம்; அலங்கார இருக்கைகள் போடப்பட்டிருக்கின்றன. ஒரு புறம், மேஜை மீது டெலிபோன் இருக்கிறது.

இருப்: நடுத்தர மாது சோபாவில் உட்கார்ந்திருக்கிறார்கள், பூ தொடுத்துக்கொண்டு, நிறைய நகைகள் பூட்டிக் கொண்டு, சரிகைப் புடவைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். முகத்திலே கவர்ச்சி துளியும் இல்லை. நிம்மதியான வாழ்க்கையின் மெருகு மட்டும் முகத்தில் தெரிகிறது.

நிலைமை: ராம்லால் உள்ளே நுழையக் கண்டு, மாது எழுந்து நின்றபடி...

சுப்புத்தாயி: ரயில் லேட்டா?

[ராம்லால் கோட்டைக் கழற்றி ஒரு சோபாவில் வீசியபடி]
ராம்: உம்...உன்னோட கடிகாரம் ஓடுது! கண், மண் தெரியாமல், ரயில் வர வேண்டிய நேரத்துக்குத்தான் வந்தது.

[பேசிக்கொண்டே ராம்லால், டெலிபோன் இருக்குமிடம் செல்கிறார்.]

[சுப்புத்தாய், வெள்ளித் தட்டை எடுத்துக் கொண்டு உட்புற அறையை நோக்கிச் செல்கிறார்கள்]

ராம்: (டெலிபோனில் கலகலப்பான குரலில்) சங்கரலிங்கமா...ஆமா...ஆமாம் இப்பத்தான்...ஆமா...யாரு? பாரத்பூஷனா...நம்ம மகனைத்தானே கேட்கறீங்க...லீவுக்கே வரவில்லை...ஆமா.. .சொல்றாங்க...என்ன மீட்டிங்கோ மகா நாடோ...இவனுக்கு எதுக்கு அதெல்லாம்...ஆகட்டும், ஆகட்டும்...அதுவா? அதிகம் கிடைக்கலே...நல்ல வைரமாக கிடைக்கல்லே...ஏதோ கொஞ்சம் வாங்கினேன்... இருக்கும் மூன்று லட்சத்துக்கு இருக்கும்னு வையுங்களேன்...சரி...சரி! நாளைக்கு கட்டாயம் பார்க்கறேன், கந்தசாமி கோயில் பக்கம்...காசி தீர்த்தமா...ஓ! அனுப்புகிறேன்...இரண்டு செம்பு அனுப்பறேன்... என்னது?...வைரமா! பார்ப்போம்...நமக்குக் கொஞ்சம் தேவை இருக்குது, அது போக மத்தது உங்களுக்கு இல்லாம வேறு யாருக்கு...விலை கொஞ்சம் கூடுதல் தான்...என்ன, என்ன? மகன் வந்ததும் சொல்றேன். அடே அப்பா! விருந்தா! சாப்பாட்டுக்கு வாடான்னா வாரான். பெரிய மனுஷனா...நம்மப் பயலா. இருக்கட்டும் உங்க ஆசீர்வாதம், ஊருக்கெல்லாம் பெரிய மனுஷனாகிவிட்டாத்தான் என்னவாம்; உங்களுக்கு அவன் சின்னப் பயதானே... சரி...சரி... ஆகட்டும்... சுப்புத்தாயா ... சௌக்யந்தான்...சொல்றேன்...கட்டாயமாகச் சொல்றேன்...

[டெலிபோனை வைத்து விட்டு ராம்லால் தபால்களைப் பிரித்துப் பார்க்க எண்ணும்போது டெலி போன் மணி அடிக்கிறது. நாற்காலியை இழுத்து டெலிபோன் மேஜைக்கருகே போட்டு உட்கார்ந்து கொண்டு டெலிபோனை எடுக்கிறார்.]

ராம்லால்: யாரு? ஓஹோஹோ! என்னங்க! ஆமா...ஆமா... காலையிலேதான்...இப்பத்தான்...குளிக்கக் கூடப் போகலிங்க...என்னதுங்க ஒரே அடியாப் புகழ்கிறீங்க...என்ன...என்ன? ரொட்டித்துண்டா? என்ன ரொட்டித் நுண்டு.

[கணக்காளர் வந்து பக்கத்தில் நிற்கிறார்]

நம்ம மகனா? புஸ்தகமா? அவனா எழுதினான்? அட புஸ்தகத்தின் பேரு ரொட்டித் துண்டா? அப்படியா! பாராட்டுக் கூட்டமா!...பாரத்பூஷணுக்கா! சரி...சரி...நானா? எங்கே எனக்கு நேரம் கிடைக்கப் போகுது...ஒரு மாதக் கணக்கு இருக்குது பார்க்க...உங்களுக்கு சந்தோஷம்னா எனக்குந்தான்...படிக்கலிங்க...பார்க்கலிங்க...பலஇடத்திலே பார்த்தேன், ரொட்டித்துண்டு—ரொட்டித் துண்டுன்னு பெரிய, பெரிய விளம்பரம்.

[கணக்காளர் ரொட்டித் துண்டு புத்தகத்தைக் காட்டுகிறார். அதைப் பெற்றுக் கொண்டபடி]

சொல்லவே இல்லிங்க...பய ரொம்ப ரகசியமா வைத்திருக்கிறான். கெட்டிக்காரப்பய...எல்லாம் உங்களோட ஆசிர்வாதம். இதோ...இப்பத்தான் நம்ம கணக்குப்பிள்ளை கொடுத்தாரு...ஆமா...படிக்கணும், நேரம் கிடைக்கணுமே!...அடே, அப்பா! என்ன அவ்வளவு சுவை தெரிஞ்சி எழுதி இருக்கப் போறான்...படிக்கிறேன்...ஆகட்டும்...சரி...சரி...

[டெலிபோனை வைத்துவிட்டு சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி, புத்தகத்தைப் பார்க்கிறார் ராம்லால். பார்த்துக் கொண்டே]

ராம்: என்னையா இது...எவனைப் பார்த்தாலும் நம்ம மகனைப் பத்தி பேசறானுங்க...ஒரே புகழ்ச்சியா...

கணக்: (மகிழ்ச்சியுடன்) ஊரே கொண்டாடுதுங்க.

ராம்: என்னது இது ரொட்டித் துண்டு? கதையா...!

கணக்: (எழுச்சியுடன்) காவியமுங்க...

ராம்: (புத்தகத்தின் பக்கம் எடை விலை இவைகளைப் பார்த்துவிட்டு) விலை 15 ரூபாயா? ஒரு புத்தகத்தின் விலை 15! யார்யா இவ்வளவு விலை கொடுத்து வாங்குவாங்க?

கணக்: கிடைக்கலிங்களே தேடினாக்கூட...அவ்வளவும் வித்துப் போச்சு...நம்ம ஆலையிலே இருக்கிறவங்க மட்டும் நூறு புத்தகம் வாங்கி இருக்காங்க...

ராம்: என்ன எழுதி இருக்கிறான்! ஆமா, இதை அச்சடிக்க பணம் எவ்வளவு கொடுத்திருக்கே?

கணக்: பணமா! நாமளா! ஒரு காசு கிடையாதே! நான் நீன்னு போட்டி போட்டுக்கிட்டு, புத்தகக் கடைக்காரர் வந்தாங்க; செலவு நமக்கு ஏது? சின்னவருக்கு அஞ்சோ ஆறோ ஆயிரம்ங்க கொடுத்ததாப் பேசிக் கொள்றாங்க...

ராம்: இந்தப் புத்தகத்துக்கா! புத்தகம் எழுதினா அவ்வளவு பணம் கிடைக்குதா? என்னதான் எழுதி இருக்கிறான் அப்படி?

[புத்தகத்தைப் பிரித்துப் படிக்கத் தொடங்குகிறார்.]


காட்சி—5

இடம்: மணிமண்டபம்

இருப்: பாரத்பூஷண் விழாவில் கலந்து கொள்வோர்.

நிலைமை: பாரத்பூஷண், 25 வயதுள்ள இளைஞன்—அழகிய கம்பீரமான தோற்றம் ஆடம்பரமற்ற முறையில், உடை தரித்துக் கொண்டிருக்கிறான். கையிலே ஆயிரம் ரூபாய் விலையுள்ள முதல் தரமான கடிகாரம். அழகுக்கு அழகளிக்கும் பளபளப்பான பிரேம் போட்ட மூக்குக் கண்ணாடி. முக மலர்ச்சியுடன், பாரத் வேலைப்பாடுள்ள

டுள்ள நாற்காலியில் அமர்ந்திருக்கிறான். செல்வபுரியிலே உள்ள பஞ்ச நிவாரணச் சங்கத் தலைவர் மஞ்சு நாதராவ் தலைமை வகித்திருக்கிறார். பலர், மண்டபத்தில் அமர்ந்திருக்கிறார்கள். அனைவரும் பாரத்பூஷனை ஆர்வத்துடன் பார்த்தபடி உள்ளனர். அவன் புன்னகை பூத்த முகத்துடன் காணப்படுகிறான். விழாத் தலைவர் அனைவரும் கைதட்டிக் களிப்பூட்டும் நிலையில் பெரிய ரோஜா மாலையை, பாரத்துக்குப் போடுகிறார். பலர் புகைப்படம் எடுக்கிறார்கள்.

ஒருவர் 'ரொட்டித் துண்டு' புத்தகத்தை பாரத்பூஷன் கரத்தில் கொடுத்துப் படம் எடுக்கிறார்.

ஒரு முதியவர் பேச முற்படுகிறார். அவரைக் கண்டதும் பாரத் எழுந்து கும்பிடுகிறான். அவர் அப்படியே அவனைக் கட்டிப் பிடித்துக் கொள்கிறார்; பாரத்பூஷன், சிரமப்பட்டுத் தன்னை விடுவித்துக் கொண்டு அனைவருக்கும் வணக்கம் கூறுகிறான்.]

முதியவர்: மன்றத்தோரே! மன்றத் தலைமை ஏற்றுள்ள மாண்புமிகு...மாண்புமிகு...

[பெயர் தெரியாமல் முதியவர் திகைப்பது கண்டு, பாரத்பூஷன் கூட்ட விளம்பரத் தாளைக் காட்டுகிறான். முதியவர், பேச்சை நிறுத்திவிட்டு, மூக்குக் கண்ணாடி போட்டுக் கொண்டு தாளைப் பார்த்து, தலைமை வகித்தவர் பெயரைத் தெரிந்து கொண்டு...]
மாண்புமிகு மஞ்சுநாதராவ் அவர்களே! இன்று திருநாள்! என் வாழ்நாளிலேயே ஓர் பொன்னாள்! நான் பெருமையும் பூரிப்பும் அடையும் நன்னாள்! ஏழைத் தமிழாசிரியன் இவனுக்கு என்ன தெரியும் என்று பேசினார்கள் பலர். அதிலே சிலர் இங்கே இருக்கக்கூடும்.
[கூட்டத்தில் சிரிப்பொலி கிளம்புகிறது]

அவர்களைக் கேட்கிறேன்...மார்தட்டிக் கேட்கிறேன்...தெரிகிறதா, தமிழாசிரியன் அருமை பெருமை.

[மிக உரத்த குரலில் பேசியதால் இரும நேரிடுகிறது.]

இதோ, என் மாணவன்! நன்மாணவன்! நானிலம் போற்றும் நூல் அளித்த பேராசான்! அவனுக்கு நான் ஆசான்!

[பலத்த கை தட்டுதல் கிளம்புகிறது.]

உலக இலக்கியங்களிலே ஒன்று என்று சான்றோர் அனைவரும் கொண்டாடும் நூலை இவ்வளவு சிறு பிராயத்தில் எழுதிய பாரத்பூஷனை வாழ்த்தாதார் இல்லை; பாராட்டாதார் இல்லை; புதுமைக் குறளாசிரியன், புரட்சி எழுத்தாளன், தமிழ்ச் சங்கக் காவலன், நாவல் போற்றும் நடையுடையான். பாரதன், என் மாணவன். ஆம்! ஆம்! முக்காலும் கூறுவேன், என் மாணவன், பாரத்பூஷணன்! பெயரைக் கேட்ட மாத்திரத்தில் இந்நாட்டவர் அல்லவோ எனத் தோன்றும் இவன் தந்தைக்கும் பெயர் இது போன்றே ராம்லால் என்றுள்ளது. மயங்காதீர். வடவர் அல்ல, நம்மவர், தமிழர்? வணிகத் தொடர்பு ராமலிங்கனாரை, ராம்லால் ஆக்கிற்று—அவர் தம் மகனுக்கு, பாரத்பூஷன் என்று பெயரிட்டார். செந்தமிழ் நாட்டுச் செல்வம் பாரதன்—சேட்டு சௌகார் அல்ல!

[மீண்டும் கைதட்டுகிறார்கள்]

பாரத்பூஷணனுக்கு ஆசிரியனாக இருந்த ஒரு காரணத்தாலேயே நான் இப்போது பெருமையும் பூரிப்பும் அடைகிறேன். இந்தப்பார் முழுதும் பாரதனைப் புகழ்கிறது. புகழ்ந்துவிட்டு, யாரிடம் பயின்றான் என்று கேட்கிறது. கேட்பது முறையன்றோ! கேட்டதும் என்ன கூறுகிறார்கள்? என்ன கூறுவான் பாரத்பூஷண்? அகிலாண்டேஸ்வரி அம்மாளை இயற்றிய அகவலாசிரியன் வரசித்த விநாயகப் புலவர்...

[கை தட்டுகிறார்கள்]

என்றன்றோ கூறுவர்! அதுபோதும்! அதுபோதும், எனக்கு. என் மாணவனை வாழ்த்துகிறேன். ஆசானாம் நானே இத்தனை அகமகிழ்ச்சி கொள்ளும்போது, இவன் தந்தை, திருமிகு ராம்லால் எத்துணை எத்துணை பெருமை அடைவார்! மகிழ்ச்சிக் கடலில் மூழ்கி இருப்பாரன்றோ!

[பலத்த கைதட்டுதல்]

காட்சி—6.

இடம்: 'அயோத்தியா' மாளிகை உட்புறக்கூடம்

இருப்: ராம்லால், சுப்புத்தாய், கணக்காளர்.

நிலைமை: ராம்லால் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறார். கடுங்கோபம் கொண்ட நிலையில் காணப்படுகிறார். சுப்புத்தாய் வரக்கண்டு முறைத்துப் பார்க்கிறார்.

விவரம் புரியாமல் சுப்புத்தாய் மிரள்கிறார்கள். ராம்லால் மீண்டும் புத்தகத்தைப் படிக்கிறார் - பதறுகிறார். சுப்புத்தாய், திகைத்துக் கிடக்கக் கண்டு, கணக்காளர், ராம்லாலுக்குத் தெரியாமல் குறி காட்டுகிறார். 'நிற்க வேண்டாம்; உள்ளே சென்று விடுங்கள்' என்று. சுப்புத்தாய் உட்புற தாழ்வாரம் சென்று, கணக்காளரை அழைக்கிறார்கள். இருவரும் மெல்லிய குரலில் பேசிக் கொள்கிறார்கள்.

சுப்: என்னய்யா இது, என்னைக்கும் இல்லாத வழக்கமா இருக்குது. வந்ததிலே இருந்து ஏதோ புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு இப்படி மெய்மறந்து கிடக்கறாரு...

கணக்: ஏதோ புத்தகமா! அல்ல, அம்மா! அல்ல, அது தான் புத்தகம்! மற்றதெல்லாம் காகிதக்கட்டு...வெறும் காகிதக்கட்டு நம்ம சின்னவரு எழுதிய புத்தகமம்மா அது...

சுப்பு : (ஆச்சரியப்பட்டு) நம்ம பாரதனா?

கண: ஆமாம்! ஊரே கொண்டாடுதே; எத்தனை பாராட்டுக் கூட்டம்—புகழ்மாலை, சின்னவருக்கு...

சுப்பு: (முகம் மலர்ந்து) என் மகனா! அவ்வளவு கெட்டிக்காரனா பாரதன்; இவ்வளவு பெரிய புத்தகமா எழுதினான். என்ன எழுதி இருக்கிறான்னு சொல்லாம அவர் மட்டும், புள்ளெ எழுதினதைப் படிச்சிப் படிச்சிப் பூரிச்சுப் போறாரு! என்னா எண்ணம் பாரு. ஏன், எனக்குச் சொன்னா என்னவாம்?

[உள்ளே சென்று ராம்லால் எதிரே நின்று செல்லக் கோபத்துடன் குழைவாக]


ஏனுங்க....உங்களைத்தான்...நம்ம பாரதன் எழுதினதாமே...சொல்லக் கூடாதா என்னிடம்?

[ராம்லால் முறைத்துப் பார்க்கிறார். அவர் நிலை புரியாமல் பேசுகிறாள் சுப்புத்தாய்].

சுப்பு: நீங்களே படிச்சிப் படிச்சி ரசிக்கிறிங்களே, கொஞ்சம் உரக்கத்தான் படியுங்களேன். எனக்கு மட்டும் ஆசை இருக்காதா, கேட்க!

ராம்: (கோபமாக) சுப்புத்தாயி! போ வெளியே! நிற்காதே என் எதிரே! படிச்சுக்காட்டவா, படிச்சி, இதை...இதையாடி படிச்சிக் காட்டச் சொல்றே...புத்தகமாடி இது. என் தலைக்குத் தீம்புடி, தீம்பு. போ! கோபத்தைக் கிளறாதே.

[ராம்லாலின் கோபம் கண்டு மனைவி திகைத்து நிற்கிறார். கணக்காளர் கலங்கிப் போகிறார். பல்லைக் கடித்துக் கொண்டு பேசுகிறார் ராம்லால்.]
ராம்: ரொட்டித்துண்டு! உன்னோட அருமை மகன் எழுதியிருக்கிற புத்தகத்துக்குப் பேருடி அது, ரொட்டித் துண்டு! இனி, பழைய சோறு, கந்தத்துணி, ஓட்டைச்சட்டி, இப்படி...

சுப்: (திகைத்து) தப்பா ஏதாச்சும் எழுதி இருக்கானா? அறியாதவன்தானே. இந்த வயதிலே இவ்வளவு பெரிய புத்தகம் எழுதினானேன்று சந்தோஷப்படாமே, கோபிக்கிறிங்களே...

ராம்: (அவளுடைய அப்பாவித்தனத்தைக் கண்டு, கேலியாக) அவனுக்கு அம்மாதானேடி நீ; நீ வேறே எப்படிப் பேசுவே. (கோபத்துடன்) என்னைக் கேவலப்படுத்தி, என்னிடம் கூலி வாங்கிகிட்டு வேலை செய்கிற பசங்களை என்மீது ஏவிவிட எழுதிய புத்தகம் இது...தெரியுமா, 'இது வெடி குண்டு. வெறும் புத்தகமல்ல' என்று ஒரு வெறிப்பய இதற்கு மதிப்புரை கொடுத்திருக்கிறான். (கேலிக்குரலில்) படிக்கறேன், கேட்கறியா, உன்னோட தவப்புதல்வன் எழுதி இருக்கறதை...

[படித்துக் காட்ட புத்தகத்தில் ஒரு பகுதியைத் தேடுகிறார்.]


காட்சி—7

இடம்: மணிமண்டபம்.

இருப்: பாரத்பூஷண், விழா காண்போர்.

நிலைமை: (ஒரு இளைஞன் மெத்த உருக்கத்துடன் புத்தகத்தில் ஒரு பகுதியை மேற்கோள் காட்டிப் பேசுகிறான். விழா காண்போர், மெய்சிலிர்க்கும் நிலைபெற்றுள்ளனர்.)
இளைஞன்: எலும்புக் கூடாகி இப்படி இருக்கிறாய் என்று கேட்கிறான் நீதிதேவன். என் சதையையும் இரத்தத்தையும் கடும் உழைப்பு எனும் ஓநாயப்பருக்குக் கொடுத்து விட்டேன், மிச்சம் இருப்பது இவ்வளவு தான். எலும்புக் கூடு தான்—என்று அந்த ஏழை பதில் அளிக்கிறான்.
[பேசுபவரின் குரல் கம்மிவிடுகிறது. கூட்டத்தில் இரண்டொருவர் கண்களில் நீர் கசிகிறது. தலைவர் உருக்கமாக, பாரத்பூஷணனைப் பார்க்கிறார். பாரத் பூஷணன் சிறிதளவு திகைத்துக் கிடப்பது போலத் தெரிகிறது. புத்தகத்தை எடுத்துக் காட்டியபடி இளைஞன் பேசுகிறான்.]

இளைஞன்: இதிலன்றி வேறு எதிலே இத்தகைய அருமையான கருத்தைக் காண முடியும்? எப்போது, எங்கே கண்டீர்கள்?

[கை தட்டுகிறார்கள் மகிழ்ச்சியுடன்]

எப்படித்தான் ஏழையின் உள்ளத்தை இவ்வளவு நன்றாகக் கண்டறிந்து ஓவியம் போலத் தீட்ட முடிந்தது! காவியும் தந்தவரோ, குபேரசம்பத்தில் உள்ளவர்—வறுமைத் தேள் கொட்டுவதும், வாழ்வு துடிதுடிப்பதும், எப்படிப் புரிந்தது! எப்படி!

[பலத்த கை தட்டுதல் கேட்கிறது.]


காட்சி—8

இடம்: அயோத்யா மாளிகை உட்புறம்.

இருப்: ராம்லால், சுப்புத்தாயி.

நிலைமை: சிறிதளவு திகிலுடன் நிற்கும் சுப்புத்தாயிடம் கோபமும் கேலியும் கலந்த குரலில் ராம்லால் பேசுகிறார்.

ராம்லால்: கேட்டாயடி, கேட்டாயா?

சுப்பு : (சந்தேகம் கொண்ட நிலையில்) நம்ம மகனா இப்படி எழுதினான்?

ராம்: (குத்தலாக) இல்லே, இல்லே! அவன் தூங்கற போது, உக்ஷிணி வந்து எழுதுது. (கோபமாக) பிழைக்கத் தெரியாத சிலதுகள், புரட்சி எழுத்தாளன்னு புகழ்வதற்காக சொந்த தகப்பனாருக்குத் துரோகி ஆகிவிட்டாண்டி, அந்த அயோக்கியப் பய! சுரண்டிப் பிழைக்கும் கை போகியாம்...

சுப்பு: (சோகமாக) உங்களையா சொல்றான் அப்படி...

ராம்: என்னைச் சொல்லியிருந்தால் பரவாயில்லேடி. என்னமோ வெறி, பயலுக்கு; தானா தெளியும்னு இருந்துவிடுவானே, ஊரிலே உள்ள பெரிய மனுஷனுங்க அவ்வளவு பேரையுமல்ல ஏசி எழுதி இருக்கிறான். கால் தூசுக்கு மதிப்பாங்களா, இவனை? இல்லே, சந்தர்ப்பம் கிடைச்சா இவனைச் சும்மாவா விடுவாங்க, சுரண்டிப் பிழைக்கிற சுகபோகி! யாரு? நானு! (மார்பை அடித்துக் கொள்கிறார்) இவன் கழுத்திலே மாலை போட்டுகிட்டு விருந்து சாப்பிட்டுகிட்டு இருக்கிறான்...இளிச்சுக்கிட்டு இந்த ஒரு மாசமா குடகு பூராவும் அலைஞ்சி, நாலு காசு கிடைக்கட்டுமே, பயலுக்கு; நிம்மதியான வாழ்க்கை இருக்கட்டுமேன்னு இவன் எழுதறான், சுரண்டிப் பிழைக்கிற சுகபோகின்னு...

[சுப்புத்தாய் முந்தானையால் கண்களைத் துடைத்துக் கொள்கிறாள்.]


காட்சி—9

இடம்: மாளிகை, நுழைவாயில்,

இருப்: கணக்காளர், பணியாட்கள்.

நிலைமை: கணக்காளர் கவலை மிகக் கொண்டவராக இருக்கக் கண்ட பணியாள், காரணம் அறிந்து கொள்ள அவருடன் பேசுகிறான்.

பணியாட்கள்: என்னங்கய்யா முகத்தைத் தொங்கப் போட்டுக்கிட்டு இருக்கிறிங்க. ஐயாவோட அக்னியாஸ்திரம் ரொம்பப் பாடுபடுத்திவிட்டதோ.

கணக்: எள்ளும் கொள்ளும் வெடிக்குது அப்பா! அம்மா அகப்பட்டுக் கொண்டு விழிக்கறாங்க. நல்ல வேளை! நம்ம பேர்லே பாயறதுக்குள்ளே, நழுவி வந்து விட்டேன்.

பணி: அம்மா என்ன தப்பு செய்தாங்க?

கணக்: பாரத் பூஷணனைப் பெத்தாங்களே அந்தத் தப்புக்காகத்தான் ஐயா வாட்டறாரு.

பணி: சின்னவரு என்ன தப்பு செய்தாரு...அப்பாரு மனசு வேதனைப்படுகிறபடி...

கணக்: ஒரு புத்தகம் எழுதினாலும்...அதிலே உண்மையை எழுதி விட்டாரு...அவர் செய்த தப்பு அதுதான்...

பணி: ஊரே கொண்டாடுதாம், சின்னவரை; அந்தப் புத்தகத்துக்காக...

கணக்: ஊரே புகழ்ந்தாலும், உலகமே புகழ்ந்தாலும் உள்ளே இருக்கிற ஐயா, ஒப்புக்கொள்ள மாட்டேன்னு சொல்றாரே...என்ன செய்யச் சொல்றே...

பணி: நீங்க படிச்சிங்களாய்யா புஸ்தகத்தை..

கணக்: எட்டுத் தடவை படிச்சேன்...நீதி நியாயத்தை பட்டுபட்டுன்னு எழுதி இருக்காரு சின்னவரு...

பணி: பெரியவருக்கு ஏன் கோபம் வருது...

கணக்: சுரண்டிப் பிழைக்கிறவன், சுகபோகியா இருக்கிறான், மாடா உழைக்கிறவன் ஓடாப்போயிட்டான்னு எழுதி இருக்காரு சின்னவரு! சுரண்டிப் பிழைக்கறவங்கன்னு, யாரையடா சொல்றேன்னு கொதிக்கறாரு, குதிக்கிறாரு, இது சமயமல்லப்பா, இங்கே இருக்க, நான் போறேன்...பிறகு வந்து விவரம் எல்லாம் சொல்றேன்...

காட்சி—10.

இடம்: மாளிகை உட்புறம்.

இருப்: ராம்லால், சுப்புத்தாய்.

நிலைமை: ராம்லால் உலவிக் கொண்டே கோபமாகப் பேசுகிறார். வீசி எறியப்பட்ட புத்தகம் ஒருபுறம் கிடக்கிறது. ஒன்றும் புரியாத நிலையில் சுப்புத்தாய், கன்னத்தில் கை வைத்துக் கொண்டு கீழே ஒருபுறமாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். பாரத் பூஷண் தன் எதிரே நிற்பது போலவும் நேருக்கு நேராக அவனிடம் பேசுவது போலவும் இருக்கிறது, ராம்லால் பேச்சு.

ராம்: நாங்க சுரண்டிப்பிழைக்கிற சுகபோகிங்க! காரித் துப்பச் சொல்றே எங்க பேரிலே. சரி, நீ யார்டா அப்பா! (கேலிக்குரலில்) பிறந்ததும், கையிலே கடப்பாரையும் மண்வெட்டியும் தூக்கிட்டுப்போயி காடு திருத்தினவனா? (மார்பில் அறைந்து கொண்டு) உனக்கு 'ஆயா' வேலை பார்த்தவளுக்கு மட்டும் மொத்தத்தில் ஆயிரம் ரூபா கொடுத்தனே! நல்ல தமிழ்ப் பண்டிதருக்கு மாதம் 30—அல்ல சம்பளம், உனக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க. மேதாவின்னு பேர் வாங்கறதுக்காக, பெத்தவனை பேயேன்னு ஏசறே! பசுவைக் கொன்றுபோட்டு செருப்புத்தானம் செய்தவன் கதைப்போல, என்னை ஏசி நீ மேதாவின்னு பட்டம் வாங்கறே இல்லே! வாங்கு, வாங்கு!

[கோபமாகச் சென்று, கடிதக் கட்டை எடுத்து, சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி பிரித்துப் பார்க்கத் தொடங்குகிறார். இரண்டொரு கடிதங்களைப் பார்க்கிறார். மனம் மீண்டும் குழம்புகிறது. புத்தகத்தின் மீது கண் பாய்கிறது.]

ராம் : எடுடி, அதை. (சுப்புத்தாய் பயந்து நிற்க) எடுடின்னா, ஏண்டி எருமை மாடுபோல நிக்கறே...

[புத்தகத்தைக் கொண்டு போய்க் கொடுக்கிறாள். சில வரிகள் அவர் கண்களில் தெரிகின்றன.]

ராம்: கேள்டி, அவன் கேட்கறதை...

சுப்பு: உங்களை எதிர்த்து ஒருவார்த்தைகூட அவன் பேசமாட்டானே.

ராம்: அவன் ஏண்டி பேசறான், என்னோடு பேசினாத்தான், புட்டுப் புட்டுக் காட்டுவனே, உள்ளதை உள்ளபடி! பணம் திரட்டி, நானா போகிறபோது மூட்டை கட்டி எடுத்துக்கிட்டுப் போகப் போறேன்...எல்லாம் உன் இழவுக்குத்தானேன்னு கேட்கமாட்டனா...

சுப்பு: (கலங்கிய நிலையில்) மனம் நொந்து பேசாதிங்க...வேண்டாம்ங்க...நான் யார் பக்கம்னு பேசுவேன்...வரட்டும்ங்க நானே கேட்கிறேன் பாரதனை. இது அடுக்குமாடா, அப்பா மனம் வேகற மாதிரி எழுதலாமான்னு கேட்கிறேன்...

ராம்: நீ கேட்கிறது இருக்கட்டும்டி. பிறகு இப்ப அவன் கேட்கிறான். (புத்தகத்தில் ஒரு பகுதியைப் படித்துக் காட்டுகிறார்.) ஏழையின் வியர்வை சிந்தாமல் பூமிக்கு அடியில் தூங்கிக் கொண்டிருக்கும் வைரமும், தங்கமும், கடலுக்கு அடியிலே படுத்து உறங்கும் முத்தும், உனக்கு எப்படிக் கிடைத்தது?

சுப்பு: (அப்பாவி நிலையில்) எப்படிக் கிடைத்தது நமக்கு என்று இருக்கப்படாதா! இவனுக்கு ஏன் இந்த விசாரணையெல்லாம்?

ராம்: (கேலிக்குரலில்) ஏனா! மேதாவியாகணுமே! என் தலைக்கு வைக்கிறான், கொள்ளி.

[சுப்புத்தாய் வாயைப் பொத்திக் கொண்டு, அழுகையை அடக்க]

ராம்: காட்றான் வித்தையை, என்னிடம். (புத்தகத்தை மீண்டும் பார்த்து) என்னைக் காட்டச் சொல்றாண்டி. (தலை குனிந்து கொண்டு, சுப்புத்தாய் உட்கார்ந்திருக்கக் கண்டு புத்தகத்தால் அவள் தலையைத்தட்டி) கேள்டி, இதை! ஏழையின் கைத்திறன் இல்லாத ஒரு பண்டம் உண்டா காட்டு! (புத்தகத்தை மூடியபடி) காட்டறேண்டா, டேய்! காட்டறேன். ஒரு காசு கிடையாது, என் சொத்திலே உனக்கு, (கேலியாக) அக்ரமக்காரன் சொத்தாச்சே! நீ அநியாயத்தை அழிக்கப் பிறந்த தர்மவீரன்! உனக்கு ஏன் அந்தச் சொத்து? ஒரு காசுகூடக் கிடையாது. ஆமாம்! அவ்வளவும் ஐயனாரப்பன் கோவிலுக்குத்தான்...

சுப்பு : (பதறி) சத்தியம் கித்தியம் வைத்துத் தொலைச்சுப்புடாதிங்க.

ராம்: பேசாதே! நீ பேசாதே. அவன் வந்தா என் முகத்திலே விழிக்கக் கூடாது. சொல்லிவிடு போயி, (ரொட்டித் துண்டு) போதாது, இனி மளமளன்னு கருவாடு, எருமூட்டை, எருக்கஞ்செடி என்று எந்த எழவாவது, எழுதிக்கிட்டு இருக்கச் சொல்லு...என் மகன் செத்தான்...

[சுப்புத்தாய் ஓடிச்சென்று அவர் வாயைப் பொத்தியபடி]

சுப்பு: கருவேப்பிலைக் கொத்து மாதிரி நமக்கு இருப்பது, ஒண்ணே ஒண்ணுங்க—கெட்டப் பேச்சுப் பேசாதிங்க...

ராம்: என்னை அழியச் சொல்றாண்டி, என்னை.

[படிக்கிறார்.]

அம்பாரி மீது ஏறிக்கொண்டதால் யானையைக் கொடுமைப்படுத்தலாம் என்று எண்ணாதே!...

[சுப்புத்தாயை முறைத்துப் பார்த்துவிட்டு நிறுத்தி நிதானமாகப் படிக்கிறார்.]

யானைக்குக் கோபம் பிறந்தால், அது உன்னைத் தன் காலின்கீழ் போட்டு, மிதித்து உன்னைக் கூழாக்கிவிடும்.

[மார்பில் அறைந்து கொண்டு]

என்னை! பெத்தவனை! இவனை இவ்வளவு செல்வத்திலே புரளச் செய்கிற என்னை! சுப்புத்தாயி! யானை காலிலே போட்டு மிதிச்சி...

[சுப்புத்தாய் மறுபடியும் அவர் வாயைப் பொத்துகிறார்]


காட்சி—11.

இடம்: விழாக்கூடம்.

இருப்: பாரத்பூஷண், விழா காண்போர்.

நிலைமை: ஒரு முதியவர் பேசிக் கொண்டிருக்கிறார். கூட்டத்தில் பலர் களைத்துப் போயிருப்பது தெரிகிறது.

விழாத் தலைவர், கைகடிகாரத்தைப் பார்த்துக் கொள்கிறார். பலர் புகழ்ந்து பேசுவதைக் கேட்டதால், கூச்சம் அடைந்த நிலையில் இருக்கிறான் பாரத்பூஷண்.
முதியவர்: பகவானுடைய கிருபையாலே பாரத்பூஷண் தீர்க்காயுசாக இருந்து பழைய காலத்துச் சங்கப் புலவர்களின் பெருமையைக் காட்டிலும் அதிகமான பெருமையைப் பெற்று விளங்கவேண்டும்.
[பாரத் பூஷண் அவரைக் கும்பிடுகிறான். முதியவர் உட்கார்ந்து விடுகிறார்.]
[விழாத் தலைவர், எழுந்திருக்கிறார் பேச. ஒரு மாது, கூட்டத்தின் ஒருபுறம் இருந்து, ஒலி பெருக்கி நோக்கி வரக்கண்டு விழாத்தலைவர் உட்கார்ந்து விடுகிறார்.]

மாது: இவ்வளவு பெரியவர் எல்லாம் பேசிய இடத்திலே பேசுவது என்றால், எனக்குப் பயம்தான். ஆனால் செல்வன் பாரத்பூஷண் அஞ்சாதே! அஞ்சாதே! என்று அழுத்தந்திருத்தமாக எழுதியதைப் படித்த பிறகு அஞ்சலாமா? நான் அஞ்சப் போவதில்லை. இவ்வளவு பேர் பேசினார்கள்...பல விஷயங்களை...ஆனால் எல்லோரும் ஒரு முக்கியமான விஷயத்தை மறந்தே விட்டார்கள். எனக்குக் கோபம்...வருத்தம்! 'ஈன்றபொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் என்ற எனக் கேட்ட தாய்!'

தெய்வப் புலவர் திருவள்ளுவர் வாக்கு பொய்யாகுமா? திருவள்ளுவருக்குப் பொய்யா மொழியார் என்று ஒரு பெயரும் உண்டு அல்லவா! அப்படிப்பட்ட தாயைப் பெருமைப்படுத்திப் பேசவில்லையே என்பதுதான் எனக்கு வருத்தம்.

[தமிழாசிரியர் எழுந்திருக்க முயலுகிறார். பக்கத்தில் இருப்பவர், அவரை உட்கார வைத்து விடுகிறார்.]

நாம் அனைவரும் இங்குகூடி, கொண்டாடி, பாராட்டி, வாழ்த்தி, மகிழ்ந்தோம். ஆனால் உண்மையான மகிழ்ச்சி, பெருமை, யாருக்கு இருக்கும்? பாரத்பூஷணனைப் பெற்றெடுத்த உத்தமிக்கு.

[பலத்த கை தட்டல்]

அந்தப் பெருமாட்டிக்குத்தான் எல்லாப் பெருமையும். பாரத் பூஷணன் நாடு போற்றிடும் ஏடு தந்தார். அந்தத் தாயோ பாரதனையே நமக்குத் தந்தார். அந்த அன்னையை வாழ்த்துகிறேன், போற்றுகிறேன். கண்களிலே ஆனந்தம் தாண்டவமாடும், அந்த அன்னைக்கு.

[கைதட்டி மகிழ்கிறார்கள்.]


காட்சி—12.

இடம்: மாளிகை உட்புறக்கூடம்.

இருப்: ராம்லால், சுப்புத்தாய்.

நிலைமை: ராம்லால், சட்டையைக் கழற்றி ஒரு புறம் வீசிவிட்டு, பனியனோடு காணப்படுகிறார். ரொட்டித் துண்டு புத்தகம் ஒரு புறம் எறியப்பட்டுக் கிடக்கிறது. ஒரு நாற்காலி கீழே தள்ளப்பட்டுக் கிடக்கிறது. ராம்லால், கடிதங்களைப் படிப்பதும், கசக்கிக் குப்பைக் கூடையில் வீசி எறிவதும், ஏதேதோ முணுமுணுத்துக் கொள்வதுமாக இருக்கிறார். கவலை தோய்ந்த முகத்துடன் சுப்புத்தாய் இதைக் காண்கிறாள். மேலும் என்ன கோபமோ என்று எண்ணிக் கலக்கமடைகிறாள். எழுந்து உட்பக்கம் செல்கிறாள். அதைக் கவனிக்காமல் ராம்லால் கடிதங்களைப் படித்தபடி இருக்கிறார். டெலிபோன் மணி அடிக்கிறது. ராம்லால் வெறுப்புடன் டெலிபோனைப் பார்க்கிறார்.

ராம்லால்: (உரத்த குரலில்) வேறே வேலை வெட்டி கிடையாதா? ஓயாம டெலிபோன்...செச் செச் செச் சே!

[வேகமாக எழுந்து சென்று டெலிபோனை எடுத்துக் கீழே வைத்துவிட்டு வந்து உட்காருகிறார்.

சுப்புத்தாய், வெள்ளி டம்ளரில் காப்பி கொண்டு வருகிறாள். ஓசை கேட்கும்படி, டம்ளரை மேசை மீது வைக்கிறாள். ஓசை கேட்டும், ராம்லால் அவள் பக்கம் திரும்பிப் பார்க்காமல் கடிதத்தைக் கவனிக்கிறார்.]

சுப்: (சிறிது அழுத்தமாக) காப்பி...

ராம்: (கோபமும் வெறுப்பும் தெரியும்படி) தெரியுது...

[கசக்கி எறிகிறார் ஒரு கடிதத்தை.]

சுப்: (வேடிக்கை பேசுவது போன்ற நிலையில்) ஏங்க! மகன் பேர்லே இருக்க கோபத்தை கடுதாசி பேர்லேயும் காட்டணுமா?

[ராம்லால் முறைத்துப் பார்க்கிறார்.]

முக்கியமான கடுதாசியா இருந்துவிடப் போகுது. கோபத்தாலே கண்மண் தெரியாம வீசிடாதிங்க...

ராம்: (கேலிக் குரலில்) புத்தி சொல்றயா...எடுடிம்மா அந்தக் கடுதாசியை...

[கீழே கிடந்த கடிதங்களில் ஒன்றை சுப்புத்தாய் எடுக்கப் போக, கோபமாகி]

ராம்: (மேலும் கேலியாக) அம்மா அறிவாளியைப் பெத்தவளே! அதல்ல...

[வேறு கடிதத்தைச் சுட்டிக்காட்டி]

அதோ, அந்த அனுமார் படத்துக்கிட்ட விழுந்து கிடக்குதே,அதை...

[சுப்புத்தாய் அதைக் கொண்டு வந்து கொடுக்க, அதைப் பிரித்தபடி]
ஏன், கசக்கி வீசிட்டிங்கன்னு... கேட்டாயே...இதிலே என்ன எழுதி இருக்குது தெரியுமா?

[கீழே கிடந்த கடிதங்களை எல்லாம் காட்டி]

அதோ, எல்லாவற்றிலேயும் ஒரே விஷயம்தான் இருக்குது. எனக்கு அபிஷேகம், அர்ச்சனை, ஆராதனை. உன் மகனோட புத்தகத்தைப் படித்துவிட்டு கண்ட கண்டபய எழுதுகிறான், மனம்போன போக்கிலே...

[கடிதத்தைப் படிக்கிறார்.]

ஆதிக்க வெறி பிடித்து அலையும் ஆலை முதலாளி ராம்லால் எனும் பெயர் பெற்ற, பணக்காரப் பைசாசமே!

[சுப்புத்தாய் தன் வாயைப் பொத்திக் கொள்ளக் கண்டு]

ஏன், ஏன்! நல்லா, அழகா, தெளிவா, துணிவோடு எழுதறான். பைசாசமே!...

சுப்பு: (ஆத்திரத்துடன்) அடப்பாவி! நாசமாப் போக..

ராம்: ஏண்டி அவனைச் சபிச்சிக் கொட்றே? அவன் என்னடி செய்வான். ரொட்டித் துண்டு படித்ததாலே வந்த ஆவேசம் அது... என்னைக்கூடப் படிக்கச் சொல்லி எழுதியிருக்கான்.

[படிக்கிறார்.]

பாதகனே!

[சுப்புத்தாய் சுட்டுவிடுவதுபோல் பார்க்கக்கண்டு பேசுகிறார்.]

என்னைச் சொல்றாண்டி!

[மார்பைத் தட்டியபடி என்னை...]

[சிறிது உருக்கமான குரலில்]

தர்மிஷ்டன்னு பலபேர் சொன்னதை இந்தக் காதாலே கேட்டிருக்கிறேன். பரோபகாரின்னும் சொல்றவங்க இருக்கிறாங்க. கணக்கு வழக்கிலே, கொஞ்சம் கண்டிப்பே தவிர, அவருக்குத் தங்கமான மனசுன்னு நேத்துத்தான் இரும்புப் பட்டறை ஏகாம்பர வாத்தியாரு வாயாறச் சொன்னாரு, காதாரக் கேட்டேன்...(அழுத்தமாக) இவன் இருக்கிறானே, உன் மகனோட சிஷ்யப்பிள்ளை, கொஞ்சங்கூடக் கூச்சமில்லாமே, தெளிவா—பாதகன்னு பட்டம் சூட்டி, கூப்பிடுகிறான்...கூப்பிட்டு...

[படிக்கிறார்.]

படித்துப் பார், ரொட்டித் துண்டு! பாரத் பூஷணன் எழுதியது. பாரத்பூஷண் யார்?

[படிப்பதை நிறுத்திவிட்டுப் பேசுகிறார்.]

கேட்க வேண்டிய கேள்விதானே! நீ என்னடா, நானே அதே கேள்வியைத்தான் கேட்கிறேன்...

[மீண்டும் படிக்கிறார்.]

கேட்குதாடி காது ! நாலு வரிமுடியல்லே. இதற்குள்ளே இரண்டாவது தடவை பிசாசே! பணம் காக்கும் பிசாசே! சரியாத்தான் எழுதி இருக்கறே! சேர்க்கறேன், காக்கறேன்...அவ்வளவுதான்—தின்னு ஏப்பம்விட இருக்காண்டா அவன்! உன்னோட ஏழைப் பங்காளன்.

[மீண்டும் படித்தபடி]

உன்னிடம் கோடி ரூபாய் இருந்தும் யார் உன்னை மதிக்கிறார்கள்? பாரத்பூஷணனுக்கு நாடே மரியாதை காட்டுகிறது.

[உரத்த குரலில் படிக்காமல், மனதுக்குள் படித்து விட்டு...பேசுகிறார்.]

இதைக் கேட்டாயா? பாரத்பூஷண் யாராம் தெரியுமா!

[சுப்புத்தாய் விழிக்க]

ஏண்டி விழிக்கறே...இப்படி இவன் எழுதறாண்டி...

[படிக்கிறார்.]
எங்களுடைய மனக்கொதிப்புதான் உனக்கு மகனாக வந்து பிறந்திருக்கிறது.
[சுப்புத்தாய் கடிதத்தைப் பிரித்துப் படித்துவிட்டுப் பிய்த்துப் போடுகிறாள் கோபமாக.]

ராம்லால்: (புத்தகத்தைத் தூக்கி எறிந்து) கொண்டு போய்ப் போடு, அடுப்பு நெருப்பிலே...ரொட்டித் துண்டு, ரொட்டித் துண்டு.


காட்சி—13.

இடம்: மணிமண்டபம், வெளிப்புறம்.

இருப்: பாரத்பூஷண், விழாத் தலைவர், விழா காண வந்தோர். தமிழாசிரியர்.

நிலைமை: மாலைகளை ஒருவர் மோட்டாருக்குப் போடுகிறார். விழாத் தலைவரிடம் விடை பெற்றுக் கொள்கிறான், பாரத் பூஷண். அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்கிறார்கள். ஜே! ஜே! என்ற ஒலி எழுகிறது. பாரத், காரில் உட்காருகிறான். நாலைந்து பேர்கள் அருகே சென்று வணக்கம் கூறுகிறார்கள். அவர்களை விலக்கிக் கொண்டு தமிழாசிரியர் வருகிறார்.

தமிழாசிரியர்: பாரதா! ரொட்டித் துண்டு. விலை 15 ரூபாய். நானோ பரம ஏழை. ஆகவே விலை கொடுத்து வாங்கிப் படிக்க முடியவில்லை. இரவல் கேட்டால் யாரும் தருவதில்லை. ஆகவே, மாணவ மணியே! உடனே எனக்கு ஒரு ரொட்டித் துண்டு அனுப்பி வைக்க வேண்டும். கிடைத்ததும், நூலைப் பாராட்டி ஒரு அகவல் இயற்றலாம் என்று துடியாய்த் துடிக்கிறேன்.

பாரத்: ஆகட்டும்...அப்படியே...அனுப்புகிறேன்...

[மோட்டார் புறப்படுகிறது. சிலர் 'ஜே' போடுகிறார்கள்.]


காட்சி—14.

இடம்: அழகிய சிறுதோட்ட வீடு—முன்புறம்

இருப்: ஒரு முரடன், பாரத்பூஷண்.

நிலைமை: மோட்டார் வந்து தோட்ட வீட்டின் முன்புறம் நிற்கிறது. பாரத் பூஷண் கீழே இறங்குகிறான். முரடன், கதவைத் திறந்து விடுகிறான்.

பாரத்பூஷண்: (பதறியபடி) என்ன...எப்படி இருக்கிறான்...?

முரடன்: ஒரே ரகளைங்க...கதவைத் திறந்து வெளியே விடறியா, உடைக்கட்டுமான்னு கூச்சலிட்டு கலாட்டா செய்றான்...

பாரத்: (வீட்டுக்குள்ளே நுழையாமல்) பாவம்! முத்தி விட்டிருக்கும்...

முர: பைத்தியக்காரச் சேஷ்டை, பேச்சு காணமுங்களே...தெளிவாத்தான் பேசறான்.

பாரத்: கட்டுப்போட்டு இருக்கவே, கூச்சலோட இருக்குது. அவிழ்த்துவிட்டா, பெரிய ஆபத்தாகிவிடும்.

முர: அப்படிங்களா? சில நேரத்திலே கொக்கரிப்பது பயமாகத்தான் இருக்குது. ஏனுங்க, நமக்கு ஏனுங்க வீணான தொல்லை? அவிழ்த்துத் துரத்திவிட்டாப் போகுது.

பாரத் கூடாது...கூடாது...அவனுக்குப் பைத்யம் என்பதுகூட யாருக்கும் தெரியக் கூடாது. ஜாக்ரதையா இரு. நான், உடனே இதற்கு ஒரு ஏற்பாடு செய்துவிட்டு வர்ரேன். (கை கடியாரத்தைப் பார்த்தபடி) வேறு விசேஷம் உண்டா?

முர: இல்லிங்க.

[மோட்டாரில் ஏறிக் கொள்கிறான். மோட்டார் புறப்படுகிறது.]


காட்சி—15.

இடம்: அயோத்யா மாளிகை-உட்புறக் கூடம்.

இருப்போர்: ராம்லால்,பணியாள், பாரத்பூஷண், சுப்புதாய்.

நிலைமை: களைத்துப் போயிருக்கிறார் ராம்லால். சாய்வு நாற்காலியில் படுத்துக் கண்களை மூடிக்கொண்டிருக்கிறார். பணியாள் ஓடோடி வந்து....

பணி: சின்னவரு வாராருங்க...

[ராம்லால் முகம் கடுகடுப்பாகிறது.]

ராம்: (வெறுப்பும் கோபமும் காட்டி) யார்...மேதாவியா? இங்கேயா...

[வேறோர் வேலையாள் மாலைகளைத் தூக்கிக் கொண்டு, மகிழ்ச்சியுடன் வருகிறான்.]

[மாலைகளைக் கண்டதும், ராம்லால் மேலும் ஆத்திரமடைந்து...]

ராம்லால்: மடையா! என்னடா இது...எடுத்துக் கொண்டு போய்க் குப்பை மேடு பார்த்துப் போடு...இங்கே ஏன் எடுத்துக்கிட்டு வர்ரே...

[பாரத் பூஷணன் வருகிறான், "அம்மா," என்று அன்புடன் அழைத்தபடி. சுப்புத்தாய் உட்புறமிருந்து வருகிறார்கள். மகனை அன்பாக வரவேற்கவில்லை. சரியாகக்கூடப் பார்க்கவில்லை. ராம்லால் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டிருக்கிறார். இருவரின் போக்கையும் கண்டு பாரத்பூஷண் சிறிதளவு திகைப்பு அடைகிறான்.]

பாரத்: (ஆவலுடன் அருகே சென்று)அப்பா ...!

[ராம்லால், அவனைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் இருக்கிறார்.]
பாரத்: என்ன அப்பா இது...

ராம்: (கேலியாக) சுப்புத்தாயி! யாரோ வந்திருக்காங்க, பாரு. எங்கே வந்தாங்க, ஏன் வந்தாங்கன்னு கேட்டுப் பாரு...

[சுப்புத்தாய் கண்களைத் துடைத்துக் கொள்கிறாள்.]

பாரத்: (சிறிதளவு கோபமாக) என்னப்பா இது! என்னென்னமோ, பேசுகிறீர்களே...தங்களைக் காண வேண்டுமென்று துடியாய்த் துடித்துக்கொண்டு வந்தேன்...எறிந்து விழுகிறீர்களே...

ராம்: (கேலியாக) என்னைக் காணவா வந்திருக்கே! தனியா வந்திருக்கியா. இல்லை, உன் படைகளைக் கூட்டிக் கிட்டு வந்தியா...

[துள்ளி எழுந்திருக்கிறான் பாரத்; திடுக்கிட்டு இரண்டடி பின்வாங்கிச் செல்கிறான்.]

இங்கே எதுக்கு வந்தே? சுரண்டிப் பிழைக்கும் சுகபோகி இருக்கற இடமாச்சே! இங்கே நீ வரலாமா? பாவமாச்சே!...

பாரத்: (தாயைப் பார்த்து) அம்மா! இது என்ன? அப்பா இப்படி எல்லாம் பேசக் காரணம் என்ன?

[சுப்புத்தாய் விம்முகிறார்கள்.]

ராம்: (மேலும் கேலிக் குரலில்) நாடகமாடுது, குழந்தை! ஏதாச்சும் தெரியுமா, பாவம்...பாப்பா...

[பாரத்பூஷண் தன் அருகே வரக்கண்டு கோபம் கொண்டு...]
கிட்டே வந்தே, வெட்டிப் போடுவேன், வெட்டி! நீ யார்டா இங்கே வர? நீ மேதாவி! புரட்சிப்புலி! சீர்திருத்தச் சிங்கம்! உனக்கு இங்கே என்ன வேலை? உன்னோட ரொட்டித் துண்டு இருக்கிறதே, அதை யாருக்காக எழுதினாயோ, அந்தக் கும்பலோடு போய்ச் சேரு...இங்கே என்ன வேலை?

பாரத்: (புன்னகை காட்டி) ஏம்பா! ரொட்டித்துண்டு புத்தகம் படித்துவிட்டதாலேதான் இத்தனை கோபமா?

[கைகளைத் தட்டிச் சிரிக்கிறான்]

ராம்: (கேலிக் குரலில்) செச்சே! கோபம் வரலாமா? நீ புதிய வேதமல்ல எழுதி இருக்கே, கொண்டாட...அல்லவா வேணும்—உன்னை.

பாரத்: (பெருமிதம் காட்டி) இப்போதுகூட ஒரு பாராட்டுக் கூட்டத்தை முடித்துக் கொண்டுதான் வந்திருக்கிறேன்.

ராம்: வரவேண்டாம்னுதான் சொன்னேன். காது கேக்கல்லே! வெறிப் பயல்க, கைதட்டின சத்தத்திலே காது செவிடாயிட்டுதோ...!

[பாரத்பூஷண், கூடத்தில் வேறோர் புறமிருந்த நிலைக் கண்ணாடி முன்நின்று உடையைச் சரிப் படுத்திக்கொண்டு...]

பாரத்: எனக்கு இலேசாகச் சந்தேகம் ஏற்பட்டுது! உலகமே பாராட்டினாக்கூட, அப்பா மட்டும் ஆத்திரமாகத்தான் இருப்பாருன்னு...நினைச்சேன்; சரியாப் போச்சி...

ராம்: நான் ஆத்திரப்பட்டு என்ன செய்ய முடியும்? என்னைத்தான் யானை கீழே இழுத்துப் போட்டு, மிதிச்சுக் கூழாக்கிடப் போகுதே! எழுதி இருக்கிறாயே, உன்னுடைய புரட்சிப் புத்தகத்திலே...

பாரத்: (சிரித்தபடி) என்ன கோபம் வருது அப்பா, உனக்கு...சரி...சரி...உள்ளே வாங்க...தனியாப் பேசணும்! ரகசியம்...அவசரம்...

ராம்: (கோபம் குறையாத நிலையில்) உன்னோடு பேச்சா! ஏன்? தனியாகவா? என்ன செய்யப் போகிறே? கத்தி கட்டாரி எடுத்து வந்து இருக்கிறாயா, கொலை செய்ய...

பாரத்: (கோபமாக) போதும் அப்பா, உம்மோட ஆவேசப் பேச்சு... எழுந்து வாங்க உள்ளே... அவசரமான விஷயம்.

[ராம்லாலின் கரத்தைப் பற்றி இழுக்கிறான்; அவர் செல்ல மறுக்கிறார். சுப்புத்தாய் பயந்து போகிறார்கள்.]

சுப்பு: வேண்டான்டா பாரத்து, வேண்டாம்! விபரீதமாக ஒண்ணும் செய்து விடாதே! (பாரத்பூஷண் தலை தலை என்று அடித்துக் கொண்டு) பையத்தியமா, உங்க இரண்டு பேருக்கும்...

[ராம்லால் சிறிதனவு பயந்தாலும், முடுக்குக் குறையாமல் நிற்கிறார். பாரத்பூஷண், அவரைச் செல்லமாக, காத்தைப் பிடித்து இழுத்து, உள் அறை பக்கம் போகிறான். சுப்புத்தாய், அதைப் பார்த்து...]

சுப்பு: வேண்டாம்டா பூஷணம்! நான்போறேன் சமயற்கட்டு பக்கம்; நீங்க இங்கேயே பேசுங்க...

[கூடத்து வெளிப்புறக் கதவைத் தாளிட்டுவிட்டு சுப்புத்தாய், சமையல்கட்டை நோக்கிச் செல்கிறார்கள். சோபாவைக் காட்டி ராம்லாலை உட்காரச் சொல்லி மரியாதை செய்கிறான், பாரத். அருகே ஒரு நாற்காலி இழுத்துப் போட்டு உட்கார்ந்தபடி]

பாரத்: உட்காரப்பா! ஏம்பா! ரொட்டித்துண்டு படித்துவிட்டு, பயந்தே போய்விட்டியா...நம்ம மகனா இப்படிப்பட்ட முறையிலே எழுதினான்னு ஆத்திரம், உங்களுக்கு...

ராம்: (கேலியாக) செச்சே! ஆத்திரம் வரலாமா, அறிவுக்கு அரசனாச்சே நீ! நீ எழுதின புத்தகத்தைப் படிச்சதும், கட்டித் தழுவி உச்சி மோந்து, முத்தமிட வேண்டாமா, நானு...

பாரத்: போதும், நிறுத்துங்க அப்பா. அப்பா! உங்களுக்கு அந்தப் புத்தகம் பிடிக்காதுன்னு எனக்கு நிச்சயமாத் தெரியும். ஆனா, ஊராருக்கு ரொம்பப் பிடிச்சிருக்கப்பா, இதுவரையிலே பத்தாயிரம் ரூபா என் பங்கு. தெரியுமா! பெயர் ரொட்டித்துண்டு, ஆனால் குறைந்தது ஒரு லட்ச ரூபாய் கிடைக்கும்னு தெரியுது...

ராம்: (வெறுப்பாக) ஆமாண்டா! கிடைக்கும், என்னை வெட்டி வித்தாக்கூடப் பணம் கிடைக்கும்.

பாரத் : (பதறி) அக்கிரமமாப் பேசாதீங்கப்பா...

ராம்: மானம்கெட்டு, மரியாதை கெட்டு உலாவறதை விட சாகலாம்டா, சாகலாம்.

பாரத்: ஏம்பா, இத்தனை ஆத்திரம்? பெரிய பேரறிவாளரெல்லாம் புகழ்ந்து பேசறாங்க...

ராம்: (ஆத்திரமாக) பேர், அறிவாளிடா, பேர்! தெரியுதா! அவனுங்களுக்கு என்ன! பாடு பட்டுப் பணம் சேர்த்தவனுங்களா! ஏட்டுச் சுரைக்காய்ங்க...

பாரத்: கொஞ்சம் ஆத்திரத்தை குறைச்சிக்கிட்டு...இப்ப வர இருக்கற ஆபத்தை...எனக்கு வர இருக்கிற ஆபத்தைப் போக்க ஒரு வழி சொல்லுங்க...

ராம்: உனக்கு ஏன் ஆபத்து வரப் போகுது? ஊரே திரண்டு நிற்குதே உன் பக்கம்! எல்லா அன்னக் காவடிகளுந்தான், உன்னோடு இருக்கிறானுங்களே...புரட்சி ஏற்படப் போகுதே, உன் புஸ்தகத்தாலே! முதலாளிகளெல்லாம் மூலைக்கு! ஓட்டாண்டிகளுக்கெல்லாம் ஒய்யார வாழ்வு! உன்னோட ஏடு, அதுதானே சொல்லுது...?

பாரத்: 'தொழிலாளர் தோழன்' என்று என்னை ஊரே பாராட்டுது, உண்மை தெரியாததாலே! நீங்க ஏசிகிட்டு இருக்கறீங்க...என்னை...

ராம்: தெரிய வேண்டிய உண்மை எல்லாம் தெளிவாத் தெரிந்திருக்குடா, தெளிவாத் தெரிந்து இருக்குதுன்னேன்.

பாரத்: என்ன தெரிந்தது உங்களுக்கு. நான் ரொட்டித்துண்டு எழுதி, புயலைக் கிளப்பி விட்டேன்னு...உம்...?

ராம்: புயலா? நாராசம்டா, நாராசம், நாசம்!

பாரத்: (செல்லமாக ராம்லால் கன்னத்தைத் தடவிய படி) அப்பா, அப்பா! நடந்ததைக் கேளுங்கப்பா...

[ராம்லாலிடம் மெல்லிய குரலில் பாரத்பூஷண் பேசுகிறான். அவன் கூறும்போது ராம்லால் மனக்கண்ணால் காண்கிறார், நடந்தவைகளை.]

[முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிகள்.]

காட்சி—16.

இடம்: சிங்காரபுரியில் ஒரு தோட்ட வீடு.

இருப்: பாரத்பூஷண், நண்பர்கள்.

நிலைமை: தோட்ட வீட்டின் கூடத்தில், வட்ட மேஜை போடப்பட்டு, அதைச் சுற்றிலும் உள்ள நாற்காலிகளில் அமர்ந்து கொண்டு நண்பர்களுடன் பாரத் பூஷண் சீட்டாடிக் கொண்டிருக்கிறான். நண்பர்களில் சிலர், பாரத்துடன் கல்லூரியில் படித்தவர்கள். பெரிய இடத்துப் பிள்ளைகள் என்பது விளங்கத்தக்க முறையில் உடை, நடை, மின்சார விசிறி வேகமாகச் சுற்றிக் கொண்டிருந்தும், சீட்டாடுவோர் கிளப்பி விடும் சிகரெட் புகை கூடத்தைக் கப்பிக் கொண்டிருக்கிறது. சீமான்களின் வீட்டுப் பிள்ளைகள் சிலர். சிங்காரபுரியில் பொழுது போக்க வந்தவர்கள், சீட்டாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். நோட்டுகள் வேகமாகக் கைமாறுகின்றன.
பாரத்பூஷண் சீட்டாட்டத்தில் மற்றவர்களைத் தோற்கடித்திருக்கிறான் என்பதை அவன் எதிரே குவிந்துள்ள பணமும், மற்றவர்களின் முகத்தில் உள்ள கவலையும், அதை மறைக்க அவர்கள் அசட்டுத்தனமாக சிரிப்பொலி கிளப்புவதும் நன்றாக எடுத்து காட்டுகின்றன. கூடத்தில் ஓர் கோடியில் இளைத்த நிலையில் காணப்பட்ட ஒரு இளைஞன் ஏதோ மும்முரமாக எழுதிக் கொண்டிருக்கிறான். அவன் எதிரே உள்ள மேஜைமீது பல புத்தகங்கள் இருக்கின்றன. சீட்டாட்டக்காரரில் ஒருவன் சற்று உரத்த குரலில் ஏதோ சினிமாப் பாட்டை பாட ஆரம்பிக்கிறான். மற்றொருவன் மேஜை மீது தாளம் போடுகிறான். சத்தம் கேட்டு, எழுதிக் கொண்டிருக்கும் இளைஞன் சற்று முகம் சுளித்துக் கொள்கிறான்.

பாரத்: (பாடுபவனைப் பார்த்து) டேய், அப்பா! சங்கீத வித்வான்! போதுமடா, உன்னோட சங்கீதம். கதிர்வேலு எழுதுவது கெட்டுவிடப் போகுது...கதிர்வேல்! இன்னும் எத்தனைப் பக்கம் இருக்கு...

சீட்டாடும் ஒருவன்: என்னத்தை எழுதிக்கிட்டு கிடக்கிறான் கதிரு!

பாரத் : நம்ம, பாடம்தான்...

கதிர்: உங்க பாடம்? அப்பவே எழுதி முடிச்சாச்சே...

பாரத்: இப்ப என்ன எழுதறே...?

சீ. ஒருவன்: எதையோ கிறுக்கறான்...நீ பார்த்துப் போடுடா, சீட்டை.

பாரத்: பேச்சில் கவனம் பிசகி, சீட்டாட்டத்திலே கோட்டைவிட்டு விடுவேன்னு நினைக்கிறயா? அதுதான் இவரிடம்...!

[வெற்றி பெற்றதாகச் சீட்டை காட்டிப் பணத்தைக் குவித்துக் கொள்கிறான்.]

[கதிர்வேல் இருமுகிறான்.]

பாரத்: கதிரு! காலையிலே எழுதிக் கொள்ளேன்...போய்த் தூங்கு.

கதிரு: (ஏக்கத்துடன்) தூக்கம் எங்கே வருது?

பாரத்: உன் ரூமுக்குப் போய்த் தூங்கு.

கதிர்: அங்கே மட்டும்...

சீட்டாடுபவன்: அவன் மனசிலேதான் என்னமோ புகுந்துக்கிட்டுக் குடையுதே. தூக்கம் வருமா?

பாரத்: என்னதான் எழுதறே?

கதிர்: ஒரு காவியம்.

சீட்டாடுபவன்: பலே, பலே! காவியமே எழுத ஆரம்பித்துவிட்டார்...இனி உருப்பட்டது போலத்தான்!...

[கதிர்வேல், எழுதிய தாள்களை எடுத்துக்கொண்டு, வேறு அறைக்குச் செல்கிறான். அவன் சென்ற பிறகு]

சீட்டா: பாரத்! இந்தக் கதிர்வேலு எப்படி உன்னோடு சேர்ந்தான்?

பாரத்: {அலட்சியமாக) நம்ம ஊர்...ஏழைப்பய...கல்லூரிச் செலவுக்கே கஷ்டம்!

சீட்டா : கையிலேதான் காசு கிடையாதே! பயலுக்குக் கல்லூரிப் படிப்பு எதற்காக?

பாரத்: எங்க அப்பா அதையேதான் கேட்பாரு...இவன் திருதிருன்னு விழிப்பான்...

மற்றொருவன்: சுத்த லூஸ்! செமிகிராக்! சதா எழுதி எழுதிக் கிழிச்சிக் குப்பையாக்கறதே வேலை.

பாரத்: கிடக்கிறான்...நீ பணத்தைப் போடு...

[போடப்பட்ட பணத்தை அலட்சியமாகக் குவித்துக் கொண்டு கைக்கடியாரத்தைப் பார்க்கிறான்.]

[பல நாட்களுக்குப் பிறகு.]


கட்சி—17.

இடம்: பாரத்பூஷண் விடுதி—கூடம்.

இருப்: பாரத் பூஷண், கதிர்.

நிலைமை: பாரத் பூஷண் ஒரு அழகியின் படத்தைச் சுவற்றிலே மாட்டி, அழகு பார்த்துக் கொண்டிருக்கிறான். சீட்டாட்டம் கலைந்து விட்டதைக் காட்டும் விதமாக நாற்காலிகள் தாறுமாறாக உள்ளன. கீழே நிறைய சிகரெட்டுத் துண்டுகள் விழுந்து கிடக்கின்றன. இருமல் சத்தம் கேட்டு பாரத் திரும்பிப் பார்க்கிறான். கையில் ஒரு பெட்டியுடன் கதிர்வேல் வந்து நிற்கிறான்.]

பாரத்: எங்கே பிரயாணம், கதிர்வேல்?

கதிரு: உன்னிடம்தான் வந்தேன்...பாரத் பூஷண்! அவசரமாக இருபது ரூபாய் வேண்டும்.

பாரத்: இருபது ரூபாயா?

கதிரு: கடன்...இனாம் அல்ல.

பாரத்: இருபது ரூபாய்! உம், சீட்டாட்டத்திலே எவ்வளவு போச்சி, தெரியுமா?

கதிரு: இருபது ரூபாய் கொடுக்காவிட்டால், மானம் போகும்...சாப்பாட்டு விடுதியிலே. கண்டிப்பாகச் சொல்லி விட்டார்கள். பாரத்! வேறு வழியே இல்லை.

பாரத்: கடன் வாங்கி விடலாம் கதிர்வேல்! திருப்பிக் கொடுக்கணுமே, வழி?

கதிர்: இதோ, இந்தப் பெட்டியை ஈடாக வைத்துக் கொடுத்து விடுகிறேன். இரண்டு சிறுவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க இன்று ஏற்பாடாகிவிட்டது. பணம் கொடுப்பார்கள்...கொடுத்ததும்...

பாரத்: (கேலியாக) என்ன, பெட்டி வெள்ளியா—ஈடு வைக்க...

கதிர்: ஒருமுறைக்குத்தானே! என்னை நம்பி ஒரு இருபது ரூபா கடன் கொடுக்கக் கூடாதா? (பாரத்பூஷண் மணி பர்சிலிருந்து 20 ரூபாய் எடுத்து கொடுக்கிறான்.)

[நன்றி தெரிவித்துவிட்டுப் பெட்டியை, பாரத் அறையில் வைத்துவிட்டுக் கதிர்வேல் போகிறான்]

[பல நாட்களுக்குப் பிறகு]

காட்சி—19.

இடம்: பாரத்பூஷண் அறை.

இருப்போர்: பாரத்பூஷண்

நிலைமை: நண்பர்கள் யாரும் இல்லாததால், பாரத்பூஷண் கட்டிலில் படுத்துப் புரள்வதும், ரேடியோவைப் திருப்புவதும், மீண்டும் நிறுத்துவதுமாகப் பொழுதை ஓட்டிக் கொண்டிருக்கிறான். கண் கவரும் அட்டைப் படங்கள் கொண்ட பத்திரிகைகள் மூலைக்கு மூலை சிதறிக் கிடக்கின்றன. சிகரெட் பற்ற வைத்து, புகையை வெளியே விட்டுக்
கொண்டிருக்கிறான். சில விநாடிகளில் சலித்துப்போய் சிகரெட்டை அணைத்துப்போட்டுவிட்டு குளிர்ச்சியான அறைச் கதவைத் திறந்து பழச்சாறு எடுத்துப் பருகுகிறான். அதிலேயும் பாதியை வைத்து விடுகிறான். தற்செயலாக, கதிர்வேலு வைத்து விட்டுப்போன பெட்டி மீது பார்வை விழுகிறது. திறந்து பார்க்கிறான். பெட்டி நிறைய எழுதி ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ள காகிதக் கட்டுகள் காணப்படுகின்றன. பெரிய எழுத்தில் 'ரொட்டித் துண்டு' என்ற தலைப்பும் இருப்பது தெரிகிறது. அதை எடுத்துப் பார்க்கிறான்; சாய்வு நாற்காலியில் படுத்துக் கொண்டு படித்துப் பார்க்கிறான். இரண்டொரு பக்கங்கள் படிக்கும் போதே, சுவை தட்டுகிறது. மேற்கொண்டு படித்துப் பார்க்கிறான். 'பாரத்! பாரத்!' என்று குரல் கேட்கிறது. வெளிப்புறமிருந்து. பாரத், "வாடா மைனர்" என்று பதில் குரல் கொடுக்கிறான். நண்பன் வருகிறான். பாரத் பூஷண் படித்துக் கொண்டிருப்பதைக் கண்டு...

நண்பன்: என்னடா, அதிசயம் இது! ஒரே அடியாகப் படிப்பிலே மூழ்கிவிட்டிருக்கே?

பாரத்: வா, வா! நன்றாக இருக்கிறதா என்று பார்த்துச் சொல்லு.

[காகிதக் கட்டைத் தருகிறான்.]

நண்: (வாங்கிப் புரட்டிப் பார்த்தபடி) என்னது? ரொட்டித்துண்டா? பலே, பலே! கதையா! கதை எழுதிவிட்டாயா நீ? அடிச்சக்கேன்னானாம்!...(சில பக்கங்களைப் படித்துப் பார்த்து) கதை இல்லே பெரிய காவியமா இருக்கே!...(மரியாதையான முறையில்) பாரத்பூஷண்! எப்படி இவ்வளவு நல்லதா எழுதினே! அற்புதமா இருக்குதே! சதா சீட்டாடிக் கொண்டு இருக்கிற ஆசாமி...உம்...

பாரத்: சீட்டாட்டம் முடிஞ்சி நீங்க எழுந்து போன பிறகு படுத்துக் தூங்கிவிடுவேனா? பிறகு விழித்து உட்கார்ந்து யோசனை செய்து எழுதறது...

நண்: புரட்சிகரமானதா இருக்குது பாரத்! (படிக்கிறான்.) ஏழைகளைக் கசக்கிப் பிழிந்து பணக்காரன் குவிக்கும் பவுன்கள், மூட்டை மூட்டையாக மாளிகைகளிலே உள்ளன. ஆனால் அவையெல்லாம் ஒரு காலத்தில் வெடிகுண்டுகளாகி மாளிகைகளை மண்மேடுகளாக்கும்.

பாரத்: (திடுக்கிட்டு) மாளிகைகள் மண்மேடுகளாகுமோ? உம்!அப்படியா இருக்குது...(சமாளித்துக்கொண்டு) ஆமாமாம்! பிரஞ்சுப்புரட்சி என்றால் என்னவாம்...

நண்பன்: (ஆர்வத்துடன்) பாரத்! இது அச்சாக வேண்டும்...அதுவும் எங்கள் போர்க்கோலம் அச்சகத்திலே! அதிர்ச்சி! சமூகத்திலே பெரிய அதிர்ச்சி ஏற்படப் போகிறது! உன் பெயர் எட்டுத்திக்கும் பரவப் போகிறது.

பாரத்: இரு, இரு! ஒரே அடியாகப் புகழ்ந்து விடாதே! உன் அப்பா இந்தப் புத்தகம் விலை போகும் என்று நம்பி அச்சடிக்க வேண்டுமே!

நண்: பணம் கொடுத்து, நாமே அச்சடித்து விற்றால் என்ன?

பாரத் : நமக்கு வேண்டாம், அந்த வீண்வேலை! அவரே போடட்டும், விற்கட்டும்...இலாபம் வந்தால், எனக்கு ஒரு பங்கு கொடுத்தால் போதும்...

நண் : சரி! நானே அப்பாவிடம் பேசி ஏற்பாடு செய்கிறேன்.

பாரத்: ஒரே ஒரு நிபந்தனை! புத்தகம் வெளி வருகிற வரையில், விஷயம் யாருக்கும் தெரியக்கூடாது.

நண்பன்: வெடிக்குண்டுபோல, திடீரென்று புத்தகம் வெளிவரவேண்டும். அவ்வளவுதானே...சரி..

[காகிதக் கட்டுகளை எடுத்துக்கொண்டு போகிறான். சிகரெட் பிடித்தபடி பாரத் உலவுகிறான் கூடத்தில், பலமான யோசனை செய்தபடி. தள்ளாடித் தள்ளாடி நடந்து வருகிறான், கதிர்வேல். பாரத்பூஷண் ஒரு கணம் பயம் கொள்கிறான். மறுகணமே சமாளித்துக் கொண்டு, சிரித்த முகத்தோடு, கதிர்வேலுவை அணைத்தபடி வரவேற்கிறான். அணைத்துக் கொள்ளும் போதுதான், கதிர்வேலுவின் உடம்பு நெருப்பாகக் கொதிப்பது தெரிகிறது.]

பாரத்: (பதறியது போலாகி) அடடா! கதிர்வேல்! என்ன இது... இவ்வளவு கடுமையான ஜூரம் கண்டுமா எனக்கு ஒரு வார்த்தை சொல்லவில்லை?

கதிர்: (மூச்சுத் திணறும் நிலையில்) நாலு நாட்களாக இப்படியேதான் இருக்கிறது...தனியாக இருக்கப் பயமாகி விட்டது. அதனாலேதான், நீ இருக்கிற இடத்திலேபோய் விழுந்துவிடுவோம் என்று வந்து விட்டேன்...

பாரத்: (கனிவு காட்டுபவன் போல) பைத்தியக்காரன்! நான் வேறே எதற்குத்தான் இருக்கிறேன்? வா, வா!

[அணைத்தபடி உட்புற அறைக்கு அழைத்துச் சென்று தன் படுக்கையிலே படுக்க வைத்து...]

பேசாமல் படுத்துக்கொள்..டாக்டரை வரச் சொல்கிறேன். பயப்படாதே! பயப்படாதே! எல்லப்பா! டேய், எல்லப்பா!

[பணியாள் ஓடோடி வருகிறான்]

வாசற்படியை விட்டு அப்படி இப்படி நகரக் கூடாது...தெரிகிறதா... கதிர்வேலுக்குக் கடுமையான காய்ச்சல். நீதான் கண்ணும் கருத்துமா கவனித்துக் கொள்ள வேண்டும். புரிகிறதா?

[ஒரு போர்வையை எடுத்துக் கதிர்வேலு மீது விரித்துவிட்டு. அறைக் கதவைச் சாத்தி கொண்டு வெளியே செல்கிறான்.]


காட்சி—20

இடம்: போர்க்கோலம் அச்சகம்.

இருப்போர்: அச்சகத்தில் பணியாற்றுவோர்.

நிலைமை: ரொட்டித் துண்டு புத்தகம் வேக வேகமாக அச்சாகிக் கொண்டிருக்கிறது. மெஷினிலிருந்து, அச்சான தாட்களை எடுத்துச் சிலர் அடுக்கிக் கொண்டிருக்கிறார்கள். சிலர், அச்சான தாட்களைப் படித்துச் சுவைத்துக்கொண்டு இருக்கிறார்கள். வேறோர் பக்கம், கட்டு கட்டாக அச்சான பகுதிகள், புத்தகவடிவில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. மூக்குக் கண்ணாடி போட்ட ஒருவர் பிழை திருத்திக் கொண்டு இருக்கிறார்.


காட்சி—21.

இடம்: பாரத் விடுதி உட்புற அறை.

இருப்: கதிர்வேல், டாக்டர், பாரத்பூஷண்.

நிலைமை: அசைவு அதிகமில்லாமல் படுக்கையில் கிடக்கும் கதிர்வேலுவை டாக்டர் பரிசோதித்துப் பார்க்கிறார்.

டாக்டர்: டைபாயிட்...

பாரத்: சந்தேகப்பட்டேன்....

டாக்டர்: ஜாக்கிரதையாகக் கவனித்துக் கொள்ள வேண்டும்...ஒரு வாரம் போகவேண்டும்...நல்ல நிலைமை தெரிய...உடலிலே வலிவே இல்லை.

பாரத்: டானிக் கொடுக்கலாமா...?

டாக்: (இலேசான புன்னகையுடன்) ஆசாமி பிழைத்து எழுந்திருக்கட்டும் முதலில்? பிறகு டானிக் கொடுக்கலாம்.

பாரத்: பயம் இல்லையே...

டாக்டர்: எனக்கென்ன பயம்...இதைவிட மோசமான வியாதிக்காரனை எல்லாம் பார்த்திருக்கிறேன்...

பாரத்: இவன் உயிருக்கு..?

டாக்டர்: உத்திரவாதம் கேட்கிறாயா தம்பி! பயப்படாதே..ஒரு பத்துநாள் முன்னதாகவே வந்துஇருக்க வேண்டும்...இருந்தாலும் பரவாயில்லை...நான் பார்த்துக் கொள்கிறேன்.

[டாக்டரும், பாரத்பூஷணும் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பது தெரியாத நிலையில் கிடக்கிறான் கதிர்வேல்.]


காட்சி—22.

இடம்: நெடுஞ்சாலை.

இருப்போர்: பலர்.

நிலைமை: பத்திரிகைகளின் விளம்பரத் தாட்களைக் கடைக்காரர்கள், தமது கடையிலே தொங்க விடுகிறார்கள்; அதிலே கொட்டை எழுத்தில் 'ரொட்டித் துண்டு' என்ற விளம்பரம் காணப்படுகிறது
சில இடங்களில் ரொட்டித் துண்டு பற்றிய விளம்பரத் தாளை ஒட்டுகிறார்கள் சுவர்களில். புத்தகக் கடைகளில் ரொட்டித்துண்டு புத்தகம் காணப்படுகிறது. பலர் ஆவலோடு வாங்குகிறார்கள். கடைக்காரர், ஒரு பிரதி எடுத்துப் படித்துக் கொண்டிருக்கிறார் சுவைத்து. போர்க்கோலம் அச்சகத்தில் இருந்து புத்தகக் கட்டுகள் லாரியில் ஏற்றப்படுகின்றன. ஐயாயிரம் ரூபாய் செக் தருகிறார், பாரத்பூஷணுக்கு அச்சக முதலாளி. வெளியே உலவப் போன பாரத் பூஷணனைச் சூழ்ந்து கொண்டு நண்பர்கள் பாராட்டுகிறார்கள்.


காட்சி—23.

இடம்: பாரத்தின் விடுதி உள்ளறை.

இருப்: கதிர்வேல்.

நிலைமை: நடமாடச் சக்தியற்று கதிர்வேல் படுக்கையில் கிடக்கிறான். வேலையாள், 'ரொட்டித்துண்டு' என்ற பெயருள்ள புத்தகம் படித்துக் கொண்டிருக்கக் கண்டு, பதறி, அதைக் கேட்டு வாங்கிப் பார்க்கிறான். தன்னையுமறியாமல் ஆர்வம் பொங்கக் கூவுகிறான்.

கதிர்வேல்: வெளிவந்துவிட்டதா! புத்தகமாகி விட்டதே...!


வேலையாள்: ஊரே கொண்டாடுதே அற்புதமான ஏடு என்று...

கதிர்: பாராட்டுகிறார்களா...

வேலை: சகலரும்! எல்லாப் பத்திரிகைகளும் பாராட்டி எழுதிவிட்டன புத்துலக ஏடு! புரட்சி ஏடு! 'என்றெல்லாம்!...

கதிர்: ஆமாம்...சந்தேகமென்ன! புரட்சி ஏடுதான்! சமூகக் கேட்டினைப் பொடிப் பொடியாக்கிடும் சம்மட்டி! ஆஹா! காய்ச்சல் காததூரம் ஓடிவிட்டது. களிப்புக் கடலில் மூழ்கிக் கொண்டிருக்கிறேன். ஆடிப் பாடலாம். ஓடி விளையாடலாம் என்று தோன்றுகிறது. பத்து வருஷத்துச் சிந்தனை! பத்து வருஷம்; சமூகத்தைப் பார்த்துப் பார்த்துப் பதைத்து, பிறகு சிந்தித்து ஆராய்ந்து கண்ட உண்மைகள்; அவ்வளவும் அந்த ஏட்டிலே உள்ளன—

வேலை: பத்து வருஷமாகவா சிந்தனை! அவ்வளவு ஆழமான சிந்தனை இருந்ததாகத் துளிகூடக் குறி இருந்ததே இல்லையே...

[புத்தகத்தை மீண்டும் பார்க்கிறான் கதிர்வேல்! பாரத்பூஷண் எழுதியது என்று இருக்கக்கண்டு, பதறி, 'ஓ'வெனக் கூச்சலிட்டு விடுகிறான்.]

கதிர்: (அடக்கமுடியாத ஆத்திரத்துடன்) இது என்ன அக்ரமம்! என்ன அநியாயம்! துரோகம்! பாரத்பூஷண் எழுதினான் என்று இருக்கிறதே. என் சிந்தனை! என் எழுத்து! நான் பெற்றெடுத்த குழந்தை! என் படைப்பு! என் புத்தகம்! ஐயோ! ஐயய்யோ... மோசம் போனேன்...மோசம் செய்து விட்டானே...

வேலை: (பயந்துபோய்) ஐயா, ஐயா!

கதிர்: (ஆத்திரம் மேலிட்டவனாகி) எங்கே என்பெட்டி? பெட்டி எங்கே? அதிலே நான் வைத்திருந்த செல்வத்தை, சிந்தனைச் செல்வத்தை, படுபாவி, களவாடி இப்படிச் செய்து விட்டானே!

[ஆவேசம் வந்தவன் போலாகி]

விடமாட்டேன்! விடவே மாட்டேன். ஊர் திரட்டுவேன்...உண்மையை உலகறியச் செய்வேன்...பாரத் பூஷணன் செய்த படுமோசத்தை எடுத்துக் கூறுவேன்...

[அழுகுரலில்]

அடப்பாவி! எத்தனை இரவுகள் கண் விழித்தேன்...எண்ணி எண்ணி உருகிக் கிடந்தேன்! சேரிகள் சுற்றினேன்—வறுமைத் தேள் கொட்டியதால் வதைபட்டுக் கிடக்கும் மக்களைக் காண! உரையாடினேன், அவர்கள் உள்ளத்தைத் தெரிந்து கொள்ள. மாடாக உழைத்து ஓடாகிப்போன பாட்டாளிகள் படும் துன்பத்தைப் பார்த்துப் பார்த்து, நான் வடித்த இரத்தக் கண்ணீரை அல்லவா, என் எழுதுகோலுக்கு மை ஆக்கினேன்...ஐயோ!...

[தலையில் அடித்துக் கொள்கிறான். வேலையாள் அருகே செல்லவே பயப்படுகிறான், கதிர்வேல் நிலையைக் கண்டு. பாரத்பூஷண் ஓசைப்படாமல் வருகிறான். கதிர்வேலுக்குத் தெரியாமல் வேலையாளுக்கு ஜாடை காட்டுகிறான், வரச்சொல்லி. கதிர்வேல், ஆத்திரத்தால் அலறியதால் மயக்கம் மேலிட்டு, படுக்கையில் சாய்ந்து விடுகிறான். வேலையாள் கூடத்தில் இருக்கும் பாரத் பூஷணிடம் வருகிறான்.]

பாரத்: (மெதுவாக) பாவம்! ஜுர வேகத்தால் மூளை குழம்பிவிட்டது. எழுந்து ஓடிவிட்டாலும் ஓடிவிடுவான்...பிறகு உயிருக்கே ஆபத்து ஆகிவிடும்.

வேலை: என்னென்னமோ உளறுகிறாரே!

பாரத்: மூளையிலே கோளாறு ஏற்பட்டால் அப்படித்தான். நான்தான் நாட்டை ஆளும் ராஜா என்றுகூட ஆர்ப்பரிப்பான். ஊரில் உள்ளது எல்லாம் என்னுடைமை என்பான்; கொக்கரிப்பான்.

வேலை: ரொட்டித் துண்டு தன்னுடையதாம்! பதறுகிறான்; கதறுகிறான்.

பாரத்: பரிதாபம்! பரிதாபம்! என்ன செய்யலாம்? கொஞ்ச நாளைக்கு வெளியே விடாமல் உள்ளேயே கட்டிப் போட்டு வைக்க வேண்டும். அடித்து நாசம் செய்து விடுவார்கள் பாவம்! வெளியே தெரிந்தால் வெட்கக்கேடு. போ!போ! பக்குவமாகப் பேசிக் கொண்டே கட்டிப் போட்டு விடு... கதவை வெளிப்பக்கம் பூட்டிவிடு...வாசற்படியை விட்டு நகராதே... இதற்கு ஒரு பெரிய டாக்டர் இருக்கிறார். வரவழைக்கிறேன். நம்மால் ஆனதைச் செய்து பார்ப்போம்.


காட்சி—24.

இடம்: அயோத்திய மாளிகை தனி-அறை.

இருப்: ராம்லால், பாரத்பூஷண்

நிலைமை: பாரத்பூஷண் சொன்னது கேட்டு, ராம்லால் ஆனந்தம் அடைகிறார். முதுகில் தட்டிக் கொடுக்கிறார்; அணைத்துக் கொள்கிறார்.

பாரத்: (சிறிதளவு கவலையுடன்) ஊரெல்லாம் பாராட்டு! விருந்து வைபவம்! தொழிலாளர் தோழன் என்ற பட்டம். உலக எழுத்தாளர் மகாநாட்டுக்கே அழைப்பு வந்துள்ளது அப்பா! இந்தச் சமயத்தில் கதிர்வேல் வெளியே வந்து, கண்டபடி உளறினால், என்கதி என்ன ஆகும்! ரொட்டித்துண்டு நான் எழுதியது அல்ல என்று தெரிந்து விட்டால் கல்லால் அடிப்பார்கள், காரித் துப்புவார்கள். பெரிய ஆபத்திலே சிக்கிக் கொண்டேனப்பா! என்ன செய்வது?

ராம்: என் வயிற்றில் பால் வார்த்தாயடா மகனே! பதறிப் போனேன், படித்ததும். ஆலைக்குச் சொந்தக்காரனாகி அதிகாரம் செலுத்த வேண்டிய என் மகனா இப்படி எழுதினான் என்று ஆத்திரம் எனக்கு.

பாரத்: ஏம்பா! ரொட்டித்துண்டு புத்தகத்திலே இருப்பதெல்லாம் என் எண்ணம்-எனக்குச் சம்மதமான எண்ணம் என்றா எண்ணிக் கொண்டு விட்டீர்கள்?

ராம்: வேறு எப்படி நினைப்பது? நாடே கூறுதே! புத்தகம் நீ எழுதிய புத்தகம்தானே! அதற்காகத்தானே இத்தனை பாராட்டுதல்.

பாரத்: பைத்தியக்கார அப்பா நீங்கள்! ஏழை எளியவர்கள் என்ன எண்ணுவார்கள், என்னென்ன பேசுவார்கள் என்பதை எடுத்துக் காட்டுவது அந்தப் புத்தகம். எனக்காப்பா அந்த எண்ணம் தோன்றும்.

ராம்: ஊரே நம்பும்போது...

பாரத்: ஊர் எதை நம்பவில்லை, இதை நம்பாதிருக்க? அப்பா! அது கிடக்கட்டும்; நமக்கு இது ஒருவிதத்திலே நல்ல வாய்ப்பு. இனி நானே தொழிலாளர் தலைவனாகி விடமுடியும். என் வார்த்தைதான் அவர்களுக்குச் சட்டம். 'ஆலை'யிலே வருகிற லாபம் உங்களுக்குத்தான். ஆனால் இப்போது கொடுத்தால் வீணாக செலவழித்து விடுவீர்கள்; சேர்த்து வைத்துப் பிறகு தருகிறேன் என்றுநான் சொன்னால் மறுக்க மாட்டான் எந்தத் தொழிலாளியும். ஆலை நிர்வாகத்தை நானே ஏற்றுக் கொண்டு நடத்தலாம்! தொல்லை...இல்லை...எல்லாம் சரி...ஆனால் கதிர்வேலுவுடைய வாயை மூட வேண்டுமே! அதற்கு வழி?

ராம்: (பெருமிதத்துடன் மகனைப் பார்த்து) உனக்கா தெரியாது...நம்ம வழிகளெல்லாம் ரொம்பப் பழசு...கரடு முரடா இருக்கும்...அரிவாளாலே வெட்டற மாதிரி இருக்கும். நீயே யோசனை செய்தா நல்ல வழி தெரியும்.

பாரத்: ஒரு வழி இருக்குதப்பா! உன்னோட நண்பர் லோகன் உதவி செய்த...

ராம்: சொன்னால் செய்கிறார்...நமக்குப் பலவிதத்திலும் கட்டுப்பட்டவர். என்ன செய்யணும், சொல்லு...

பாரத்: கதிர்வேலுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று கூறி, பைத்தியக்கார விடுதிக்கு அனுப்பிவிட வேண்டும்...

ராம்: பலே! பலே! சரியான யோசனை. ஏற்பாடு செய்கிறேன்... இரு ! இரு! உன் அம்மா காலை முதல் கண்கலங்கிக் கொண்டு இருக்கிறா! குடும்பத்திலே கொந்தளிப்பு வந்து விட்டது என்று... பாவம்! நானும் அவளை அதிகமாகத்தான் வாட்டிவிட்டேன். என் மகன் எப்படிப்பட்டவன் என்பதைக் கண்குளிரக் காணட்டும்.

[உரத்த குரலில்]

சுப்புத்தாயி! சுப்புத்தாயி!

[சுப்புத்தாய், தயக்கத்துடன் வருகிறாள். தந்தையும் மகனும் மகிழ்ச்சியாக இருக்கக் கண்டு, முதலில் திகைக்கிறாள். மெள்ள மெள்ள முகம் மலருகிறது.]

சுப்பு: ஆண்டவனே! கஷ்டமெல்லாம் தீர்ந்ததா? பாரதா! உன் அப்பாவும் நீயும் சண்டை சச்சரவு இல்லாமல் இருந்தாத்தாண்டாப்பா நான் உயிரோடு இருக்க முடியும்.

ராம்: (மகிழ்ச்சி பொங்க) பைத்தியமே! என் மகனுக்கு என்னடி! துப்பாக்கி வயத்திலே பீரங்கிடீ அவன். என் மகன்!

[பாரத்பூஷணனை அணைத்தபடி]

என் மகன்டி, என் மகன்!!

[சில நாட்களுக்குப் பிறகு].

காட்சி—25.

இடம்: ஒரு வைத்திய விடுதி

இருப்போர்: டாக்டர், கதிர்வேல், பணியாட்கள்.

நிலைமை: பைத்தியக்கார விடுதியின் வண்டியில், கதிர்வேலுவை ஏற்றி உட்கார வைக்கிறார்கள். கதிர்வேலுவின் முகம் பயங்கரமாக இருக்கிறது. ஆடை

கந்தலாகி அழுக்கேறி இருக்கிறது. வண்டி புறப்படுகிறது. கூடி இருந்த சிறு கும்பலைப் போலீஸ் மிரட்டித் துரத்துகிறது. ஏழ்மைக் கோலத்தில் ஒரு கிழவர் மட்டும் அங்கேயே திகைத்து நின்று, வண்டிபோன திக்கு நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறார். போலீஸ்காரர் ஒருவர் அவர் அருகே சென்று...

போலீஸ்: பெரியவரே! என்ன, அப்படிப் பார்க்கிறே...பாதை நடுவிலே நின்று கொண்டு...

கிழவர்: என் மகன்யா...மகன்...என் ஒரே மகன்...என் மகன்...

போலீஸ்: யாரு? அந்த பைத்யக்காரனா? சரி! போ, போ!

[கிழவர் முகத்தில் அறைந்து கொண்டு அழுகிறார்.]