7
திராவிடர் இயக்கம் தோன்றுவதற்கும், எழுச்சியும் வடிவமும் கொள்வதற்கும் வித்திட்ட வெள்ளுடை வேந்தர் தியாகராயருடைய பிறந்த நாள்; அதுவும் அவரது 147வது பிறந்த நாள் என்பதால் இந்தக் கருத்தரங்கு ஒரு பொருத்தமான நாளில் அமைந்திருக்கிறது என்பதை எண்ணி மகிழ்கிறேன். ஒரு வேளை தியாகராயர் தோன்றாவிட்டால் இந்தக் கருத்தரங்கு நிகழ்வதற்கான அடிப்படை தோன்றியிருக்காது. தியாகராயரே இந்த இனவரலாற்று ஆய்வு உண்மைகளையெல்லாம் கண்டுபிடித்து இந்த இலட்சியத்திற்கு வாதாடத் தலைப்பட்ட முதல் தலைவர்கூட அல்ல. அவருக்கு முன்னர் இந்த உணர்வுக்கு உரியவராக விளங்கியவர் டாக்டர் சி. நடேசனார் ஆவார். இந்த உணர்வுகளை உலகம் தெரிந்துகொள்ளச் செய்த பெருமைக்குரியவர் டாக்டர் டி.எம்.நாயர். அதற்குப் பேராதரவாக இருந்த பெருமக்கள் பலர். எதிர்ப்புத் தெரிவித்த தேசிய அரசியல்வாதிகள் அதைவிட அதிகம் பேர்.
அப்படி ஓர் இயக்கம் தோன்றிய காரணத்தினாலேதான் சென்னைப் பல்கலைக் கழகத்திலே டாக்டர் லட்சுமணசாமி முதலியார் அவர்கள் 27 ஆண்டு காலத்திற்கும் மேலாகத் துணைவேந்தராகப் பொறுப்பேற்றிருந்த ஒரு நல்வாய்ப்பை நாம் பெற்றிருந்தோம் என்பதை இந்தப் பல்கலைக் கழகப் பட்டதாரிகள் உணர்ந்திருப்பர் என்று எதிர்பார்க்கிறேன். ஆனால் சூழ்நிலை மாற்றத்தால் அந்த அடிப்படையான உண்மைகளை மறந்திருக்கவும் கூடும். இன்றைக்கு இந்தத் தலைப்பில் பேசுவதற்கு நான் இங்கே நிற்பதுகூட, திராவிட இயக்கத்தினுடைய விளைவுதான். நீங்கள் பல நூறு பேர் கேட்பதும் அதனுடைய விளைவுதான். ஆனால் திராவிட இயக்கத்தின் சாதனையைப் பலர் உணராமல் இருப்பதுங்கூட நம்முடைய இன இயல்புதான். இந்தப் பல்கலைக் கழகத்திலே இப்படியொரு கருத்தரங்கு அமைந்து, இந்தத் தலைப்பில்