160
வேறு மாடப்புறாவுக்கு வலை வீசுகிறான் என் சிறகொடித்த வஞ்சகன், என்று சொன்னாள், உன்னைத்தான் குறிப்பிட்டாள், பட்டு. ஓடோடி வந்தேன்—உன்னைக் காப்பாற்றியாக வேண்டும் என்ற உறுதியோடு, உன்னைக் கண்டதும் அந்த உறுதி ஆயிரம் மடங்கு அதிகமாகிவிட்டது...
சு:— பெண்களை மயக்கும் புதுரகப் பேச்சு இது... இருக்கட்டும்.. தர்மலிங்கம் போன்ற ஒருவருடன் இன்ப வாழ்வு நடத்தத் தீர்மானிக்கும் என்னைத் தடுப்பது சரியா? அன்பு கொண்டவர்—தர்மு—அரூபி—என்கிறீரா?
தங்:— அழகாகக்கூட இருப்பான் நீலா? ஆனால், வீணாகப் பேசுவதாகவோ, பொறாமையால் ஏசுவதாகவோ எண்ணாதே. உன் அழகுக்கு அவன் ஈடல்ல... நான் பல நர்சுகளைப் பார்த்திருக்கிறேன்—உன் கவர்ச்சி மிகச் சில பெண்களிடமே உண்டு—
சு:— டாக்டர்களைப் பார்த்ததில்லையா...
தங்:— எத்தனையோ டாக்டர்களை...
சு:— இந்த வைத்யசாலையின் சொந்தக்காரி, லேடி டாக்டர் சுகுணாவைப் பார்த்ததுண்டா?
தங்:— இல்லை, நீலா! பார்த்ததில்லை...
சு:— அப்படியா, இப்போது பாரும்...!
சு:— இதோ. இங்கே! நான்தான் லேடி டாக்டர்—சுகுணா!...
தங்:— என்ன, என்ன! நீலா அல்லவா?
சு:— (புன்னகையுடன்) அல்ல! சுகுணா!