உள்ளடக்கத்துக்குச் செல்

புதுமைப்பித்தன் கதைகள், முழுவதும்/வாடா மல்லிகை

விக்கிமூலம் இலிருந்து


வாடா மல்லிகை


வள் பெயர் ஸரஸு; ஒரு பிராமணப் பெண். பெயருக்குத் தகுந்தது போல் இருக்கவேண்டும் என்று நினைத்தோ என்னவோ பதினேழு வயதிற்குள்ளேயே சமூகம் அவளுக்கு வெள்ளைக் கலையை மனமுவந்து அளித்தது. அவள் கணவனுக்குக் காலனுடன் தோழமை ஏற்பட்டுவிட்டதால், அதற்குச் சமூகம் என்ன செய்ய முடியும்?

ஸரஸு ஓர் உலாவும் கவிதை. இயற்கையின் பரிபூரணக் கிருபையில் மலரும் பருவம்; காட்டிலே ரோஜா யாருமின்றி உதிர்ந்தால் அதைப் பற்றிப் பிரமாதமாக யாரும் கவலைப்பட மாட்டார்கள். ஆனால் நந்தவனத்திலே, மனத்தின் களிப்பில் குலாவக் கூடிய இடத்திலே தனிமை என்ற விதி ஏற்பட்டால் அதைப் பற்றிப் பரிதவிக்காமல் முடியுமா? இயற்கையின் போக்கைத் தடை செய்து கொண்டு அவள் தியாகம் செய்கிறாள்; அவள் பரிசுத்தவதி என்று சமூகம் களித்துக் கொண்டு இருப்பது அதன் ரத்த வெறிதான். அவளுக்கு இந்தச் சமூகத்தில் உரிமையே கிடையாதா? அவள் நிலைமை என்ன? சாம்ராஜ்யப் பிரஜையின் நிலை தானா? சமூகம் என்ன செய்ய முடியும்? வேதம் சொல்லுகிறது, தர்ம சாஸ்திரம் சொல்லுகிறது என்று பேத்திக் கொண்டிருக்கும்...?

ஸரஸுவுக்கு இதெல்லாம் தெரியாது. அவள் ஒரு ஹிந்துப் பெண். வாயில்லாப் பூச்சி. பெற்றோரையும், புருஷனையும், முன்னோரையும் நம்பித்தான் உயிர் வாழ்ந்து வந்தாள். பெற்றோர் கலியாணம் செய்து வைத்தார்கள். புருஷன் வாழ்க்கையின் இன்பத்தைச் சற்றுக் காண்பித்து விட்டு, விடாய் தீருமுன் தண்ணீரைத் தட்டிப் பறித்த மாதிரி, எங்கோ மறைந்துவிட்டான். அவனை இந்த உலகத்தில் இனிக் காண முடியாது. பிறகு... கண்டால்தான் என்ன? அது போகட்டும். இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லி வைத்து விட்டுப் போன முன்னோர்கள் கணவன் சென்ற விடத்தில் இருக்கிறார்கள். ஸரஸு பெற்றோரைத் தட்டியது கிடையாது. பிறகு முன்னோர்களை எப்படி எதிர்க்க முடியும்? அவளும் பெண்தானே! அச்சம் என்பதுதான் அவளுக்கு அணிகலன் என்று சமூகம் சொல்லுகிறதே. பிறகு அவள் வேறு என்னவாக இருக்க முடியும்? அவள் 'உயர்தரப்' படிப்புப் படித்த பெண்ணா? நாலு விஷயங்களைத் தானாக ஆராய்ச்சி செய்து கொள்ள அவளுக்குத் திறன் ஏது? இயற்கையின் தேவை கட்டுக்கடங்காமல் மீறி ஒரு மிருகத்தின் முரட்டுத் தைரியத்தைக் கொடுக்கவில்லை. கொடுத்திருந்தால், அவளை சமூகம் தூற்றுவதற்குத் தயார்.

எந்த அமைப்பிலேயும் விதிவிலக்குகளான சிறுபான்மையோர் கஷ்டப்படத்தான் வேண்டுமென்று தத்துவம் பேசலாம். தத்துவம் நன்றாகத்தான் இருக்கிறது! ஸரஸுவின் உணர்ச்சிக்கு உரிமையில்லை - அவள் விதிவிலக்கு.

ஸரஸு எப்பொழுதும் மாடியின் மேல் காலை ஏழு மணிக்கே தலையை உலர்த்த வருவாள். அப்பொழுதே ஸ்நானமாகிவிடும். பெற்றோரின் பாசம், அவளைச் சமண முனி மாதிரி, பெண்மையின் கோரமாக்கத் துணியவில்லை. அதை எடுத்திருந்தாலும் அவள் கவலைப்பட்டிருக்க மாட்டாள். வாழ்க்கைக்கே வசதியில்லாமலிருக்கும் பொழுது சிகை போவதுதானா பிரமாதம்?

அவளைப் பார்த்தால் யாருக்கும் கண் கலங்கும். அவள் கண்களிலே ஒரு நிரந்தரமான துயரம், போக்க வழியில்லாத துன்பம் குடிகொண்டிருக்கும். அவள் சிரிக்கத்தான் செய்கிறாள். குதூகலமாகப் பேசத்தான் செய்கிறாள். இவை யாவற்றிற்கும் பின் சோகந்தான் நிலவும்.

பிரம்மச்சாரியாக, உண்மையான பிரம்மச்சாரியாக நீ இருந்து பார்த்திருக்கிறாயா? வேறு ஓர் உயர்ந்த இலட்சியம் உனது உள்ளத்தைக் கொள்ளை கொண்டு, உன்னை அப்படியே விழுங்கிவிடாவிட்டால் பிரம்மச்சரியம் உன்னைக் கொன்றுவிடும். உன்னை மிருகமாக்கி உனது உள்ளத்தைப் பேயாகச் சிதற அடித்துவிடும். ஆனால் கட்டாயத்தின் பேரில் இப்படிக் கன்னிகையாகக் காலங்கழிக்க வேண்டிய நிலையை என்ன சொல்லுவது?

அன்று ஸரஸுவின் தம்பி துரைசாமிக்குச் சாந்திக் கலியாணம். முதலிலே ஸரஸுக்குத் தாங்க முடியாத குதூகலம் - தங்கள் வீட்டிலே விசேஷம் வருகிறது என்றுதான். தம்பியின் மீது இருந்த ஒரு ஹிந்துத் தமக்கையின் அளவு கடந்த பாசத்தினால்.

அன்று பகல் வந்தது...

அன்று இரவு வந்தது. ஊரில் இருள். வீட்டில் ஒளி.

வீட்டில் ஒளி; ஸரஸுவின் உள்ளத்தில்?  அவளுக்கு என்னென்னவோ நினைவுகளெல்லாம் குவிந்தன. அப்படித்தானே மூன்று வருஷங்களுக்கு முன் முதல் முதலாக அவருக்கு... என்னென்னவோ தோன்றின. நேரமாக நேரமாக, அவள் மனத்தில் அந்த மூன்று வருஷங்களுக்கு முந்திய சந்தோஷகரமான, வாழ்க்கையை ஓர் இன்ப ஒளியாக்க முயன்ற அந்த இரவின், ஒவ்வொரு சிறு சம்பவமும்... அவர் முதலில் என்ன கூச்சப்பட்டார்! பிறகு அந்த உரிமை என்ற தைரியம் தானே... இவ்வளவு சீக்கிரம் அவள் வாழ்க்கை இருட்டிவிடும் என்று அப்பொழுது கண்டாளா? என்னவோ சாசுவதமான அழியாத நித்திய வஸ்து வென்றல்லவோ -

துரைசாமியையும் அவள் மனைவியையும் அழைத்துக் கொண்டு சென்றனர். கூச்சலும் அமளியும் அவளுக்குப் பொறுக்க முடியவில்லை.

தன்னை மீறிய கட்டுக்கடங்காத ஓர் ஆவேசம் அவளைப் பிடர் பிடித்துத் தள்ளியது. பின்புறம் புழக்கடைக்குச் சென்று விட்டாள்.

நானும் பின் தொடர்ந்தேன். அவள் நிலைமை எனக்கு ஒருவாறு தெரிந்தது. அவள் மீது ஒரு பரிதாபம் அதனால்...

புழக்கடையில் ஒரு பெண் தேம்பிக்கொண்டு இருந்த சப்தம் கேட்டது.

நெருங்கினேன், அவள்தான்!

"ஸரஸு!"

பதில் இல்லை.

இன்னும் நெருங்கித் தோளில் கையை வைத்தேன். உணர்ச்சியற்ற கட்டை போல் இருந்தாள் - உடல் தேம்புவதினால் குலுங்கியது.

"ஸரஸு! நான் இருக்கிறேன் பயப்படாதே" என்றேன்.

"நான் ஒரு ஹிந்துப் பெண்!" என்று கூறிவிட்டுச் சடக்கென்று உள்ளே சென்று விட்டாள்.

நான் திகைத்து நின்றேன். ஹிந்துப் பெண் என்றால் உயிர்வாழ உரிமையில்லையா?...

நான் எவ்வளவு நேரம் நின்றேனோ!

மறுபடியும் அவள் வந்தாள்.

"ஸரஸு! என்னை மன்னித்துவிடு. நான் கூறியது வேறு. நீ அர்த்தம் பண்ணிக் கொண்டது வேறு. நான் உன்னை மணம் செய்து கொள்ளுகிறேன்!" என்றேன்.

"கொள்கைக்காக நீர் தியாகம் செய்து கொள்ள முயலுகிறீர்; அது வேண்டாம் - மிஞ்சினால் நான் உமக்குப் போகக் கருவியாகத்தான், உமது தியாகத்தின் பலிபீடமாகத் தான் நீர் கருதுவீர். அது எனக்கு வேண்டாம். நான் காதலைக் கேட்கவில்லை தியாகத்தைக் கேட்கவில்லை. நான் தேடுவது பாசம்..."

"அது என்னிடம் இருக்கிறது" என்றேன். அவளிடம் இவ்வளவு எதிர்பார்க்கவில்லை.

"அப்படியானால் திருமணம் வேண்டாம்... பாசம் இருந்தால் போதும்" என்று சொல்லித் தலை குனிந்தாள்.

"என்ன ஸரஸு இப்படிச் சொல்லுகிறாய் - இரகசியம் பாபம் அல்லவா? கல்யாணம் இதை நீக்கிவிடுமே!"

"எனக்கு உமது தியாகம் வேண்டாம். உமது பாசம் இருந்தால் போதும்!"

"நீ ஒரு பரத்தை!"

"உமது தியாகத்திற்கு நான் பலியாக மாட்டேன் - அதில் எப்பொழுதும் உமக்கு இந்தக் காலத்து நன்மதிப்பு ஏற்படும். தைரியசாலி என்பார்கள். அதை எதிர் பார்க்கிறீர். நான் பரத்தையன்று - நான் ஒரு பெண். இயற்கையின் தேவையை நாடுகிறேன்!" என்றாள்.

எனது மனம் கலங்கிவிட்டது. வெளியேறினேன்...

மறுநாள் அவள் பிரேதம் கிணற்றில் மிதந்தது. அதன் மடியில், "நான் எதிர்பார்த்தபடியே" என்று எழுதிய ஒரு நனைந்த கடுதாசி இருந்தது.

ஊழியன், 7.9.1934