உள்ளடக்கத்துக்குச் செல்

புதுமைப்பித்தன் கதைகள், முழுவதும்/சாமாவின் தவறு

விக்கிமூலம் இலிருந்து

பதிப்பாசிரியர்: ஆ. இரா. வேங்கடாசலபதி

1592புதுமைப்பித்தன் கதைகள், முழுவதும் — சாமாவின் தவறுபுதுமைப்பித்தன்


சாமாவின் தவறு


கத்தான தியாகம் என்பதற்கு சாமாவின் அகராதியில் வெள்ளி குளத்திலிருக்கும் பாட்டியின் வீட்டிற்குப் போவது என்று பொருள். இந்தத் தியாகத்தைச் செய்யாவிட்டால், வருஷம் முழுவதும் கையில் சில்லறை ஓட்டத்திற்கு மிகுந்த தடை ஏற்படும் என்று பூரணமாக அறிவான்.

சாமா பள்ளிக்கூட மாணவன். கல்விக் கடலில் இண்டர்மீடியட் என்ற சுழலின் பக்கம் நீந்திக் கொண்டு இருக்கிறான். வீட்டிலே பிள்ளை 'காலேசில்' படிக்கிறான் என்றதினால் ஓரளவு மரியாதை. வெளியிலே மாணவ உலகத்தின் கவலையற்ற குஷால் செலவு.

இவ்வளவு கவர்ச்சிகளையும் விட்டுவிட்டுப் பாட்டியின் வீட்டிற்குப் போக வேண்டுமென்றால் அது தியாகம்தான். அந்தத் தியாக விஷயத்தை கோடை விடுமுறையில் அவன் வைத்துக்கொள்ளுவது வழக்கம். ஏனென்றால் டவுனில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றும் இருக்காது, மறு ஜுன் மாதம் வரை.

இருந்தாலும் பாட்டியின் முறுக்கும், 'எண்ணைக் குளி' தொந்தரவுகளும் சகித்துக்கொள்வதற்குக் காரணம், பாட்டியை விட்டுப் புறப்படும்பொழுது 'வழிச் செலவிற்கு'க் கொடுக்கும் தொகைதான்.

சாமா வெள்ளி குளத்திற்குப் போக பஸ் ஏறும்பொழுது வேண்டா வெறுப்பாகத்தான் ஏறினான்.

பஸ் வெள்ளி குளத்துச் சாலையில் வந்து நிற்கும் பொழுது கருக்கல் நேரமாகிவிட்டது. இவனைத் தவிர வேறு பிரயாணிகள் கிடையாது. ரஸ்தாவின் பக்கத்தில் கண்ணுக்கெட்டிய தூரம் ஒரு மனிதப் பிறவிகூடக் கிடையாது. டவுனில் புத்தகத்தைச் சுமப்பதே அநாகரிகம் என்று கருதும் சாமாவிற்கு, டிரங்குப் பெட்டியும் சுமப்பது என்றால் கொஞ்சம் மனம் கூசியது. ஆனால் கண்ணுக்கெட்டியவரை அவன் நண்பர் ஒருவரையும் சந்திக்க மாட்டோ ம் என்ற நம்பிக்கையில் பிறந்த உற்சாகத்தில் அதைக் கையில் எடுத்துக் கொண்டு ஊரை நோக்கி நடந்தான்.

கருக்கலில் செல்வதற்கு மனம் நிம்மதியாகவிருந்தது. ஆனால் அடிக்கடி காலில் முள்ளுக் குத்திவிடுமோ என்ற பயம். போகும் வழி பனங்காட்டுகளிடையே செல்லும் ஒற்றையடித் தடம். இடைஇடையே குத்துச் செடிகள், கருவேல், இலந்தை முட்செடிகள் முதலியவை படர்ந்து நின்றன.

டிரங்கு கையைக் கீழே அறுத்துக் கொண்டு விழுந்துவிடும்போல் வலியாய் வலித்தது. அடிக்கடி ஒரு கையிலிருந்து மறு கைக்கு மாற்றிக் கொண்டான். 'சீ, என்ன இருட்டு... என்ன டிரங்கு, உளியாய் கனக்கிறது' என்று சொல்லிக்கொண்டான். இனிமேல் தூக்கிச் செல்ல முடியாது. இந்தப் பாழும் ஊர்தான் ரஸ்தாவின் பக்கத்தில் இருந்து தொலையக் கூடாதா? வேறு வழியில்லை. நாஸுக்கு மானம் எல்லாவற்றையும் கட்டி வைத்துவிட்டு, மேல் அங்கவஸ்திரத்தைத் தலையில் கட்டிக் கொண்டு, டிரங்கை முக்கி முனகித் தலைமேல் வைத்துக் கொண்டு நடந்தான்.

கொஞ்சநேரம் கைகளுக்கு மோட்சம். சற்று கவலை தீர்ந்தது. ஆனால் மூச்சுத் திணறுகிறது. தலை உச்சியும் கழுத்து நரம்புகளும் புண்ணாக வலிக்கவாரம்பித்துவிட்டன. சாமாவின் மனதில் வேறு ஒன்றும் தோன்றவில்லை. ஒரே எண்ணம் 'பெட்டி'. கால்நடைகள் 'டிரங்க்' 'டிரங்க்' என்று தாளம் போட்டு நடக்கிறது. நாவரள்கிறது.

'பெட்டி!'

உலகம் பூராவாகவும் அவன் எண்ணத்தில் தோய்ந்து கழுத்துப் பெட்டி மயமாகத் தெரிகிறது. கண்களில் கபாலத்தில் எல்லாம் பொறுக்க முடியாத வலி. 'சீ! பெட்டியாவது கிட்டியாவது! பெட்டியை எறிந்துவிட்டுப் போய்விடலாமா?' என்று இருக்கிறது.

பனங்காட்டில் காற்றில் அலையும் ஓலைச்சப்தம். பழுத்துவிழும் பனம்பழங்களின் 'தொப்' , 'தொப்' என்ற சப்தம். தலையிலாவது ஒன்று விழுந்து தொலையாதா என்ற ஏக்கம்; எங்கு விழுந்துவிடுமோ என்ற பயம்.

தூரத்தில் சிறு வெளிச்சம். அப்பாடா! ஊர் வந்துவிட்டது! வாய்க்கால் பாலத்தைத் தாண்டிவிட்டால் கொஞ்ச தூரந்தான். இதில் ஒரு ஊக்கம். கால் கொஞ்சம் விசையாக நடக்கின்றன. ஆனால் சிறிது நேரத்தில் கால்கள் தொங்கலாடுகின்றன...

உடனே திடீரென்று ஒரு எண்ணம். எப்படித் தலையில் பெட்டியைச் சுமந்துகொண்டு ஊருக்குள் போகிறது. யாரும் பார்த்துவிட்டால், என்ன கேவலம்! அந்த நினைப்பிலேயே உடல் எல்லாம் வேர்க்கவாரம்பிக்கிறது. வாய்க்கால் பக்கத்தில் கருப்பன் அல்லது வேறு யாராவது பயல்கள் நிற்பார்கள். இருட்டில் போகிறவனை ஏன் என்று கூடவா கேட்காது போய்விடுவார்கள்? காலணா கொடுத்தால் போகிறது!

அதற்கு இப்படித் தலையிலா தூக்கிக் கொண்டு போகிறது! மெதுவாகத் தலையில் இருந்து இறக்கிக் கீழே வைக்கிறான். கைகள் தள்ளாடுகின்றன. தலையிலிருந்த சும்மாட்டுத் தலைப்பாகை கழன்று மாலையாக விழுந்துவிடுகிறது. வேர்வையில் நனைந்த அங்கவஸ்திர விளிம்புகள் கழுத்திற்குச் சுகமாக இருக்கின்றன. தலைக்கு என்ன நிம்மதி! இரும்பு வளையத்திலிருந்து விடுபட்டது போல் மேல் மூச்சு வாங்குகிறது.

கட்டாயம் யாராவது, 'அங்கே யாரது' என்று கேட்பான். கூப்பிட்டுப் பெட்டியைத் தூக்கிக் கொண்டு வரச்சொல்லிவிடலாம் என்ற நம்பிக்கை.

வாய்க்காலைக் கடக்கும் வரை ஒருவரும் கூப்பிடவில்லை. கருப்பனையும் காணோம்; ஒருவனையும் காணோம். கை பச்சைப் புண்ணாக வலிக்கிறதே. இந்தப் பயல்கள் இன்றைக்கு என்று எங்கு தொலைந்திருப்பார்கள். திருட்டுப் பசங்கள்! சனியன்கள்.

வாய்க்காலையும் கடந்தாய்விட்டது. அப்பாடா பெட்டியைக் கீழே வைக்க வேண்டியதுதான். கை என்ன இரும்பா? சீச்சீ! இன்னும் கொஞ்ச தூரந்தானே. பெட்டியைக் கையில் எடுத்துக்கொண்டு நடக்கிறான். ஒவ்வொரு அடியும் எத்தனையோ மைல்கள்! அந்த மூலையிலேதான் பாட்டியின் வீடு! எல்லாம் என்ன ஊரே அடங்கிக் கிடக்கிறது. அதுவும் ஒரு நல்ல காலந்தான். இல்லாவிட்டால் பெட்டி தூக்கிய அவமானம் தெரிந்து போகாதா.

அப்பாடா! வந்தாச்சு பாட்டியின் வீடு! உள்ளே சென்று திண்ணையில் பெட்டியை வைத்துவிட்டு கதவைத் தட்டுகிறான்.

உள்ளே இருந்து "அதாரது?" என்ற குரல்.

"பாட்டி! நான் தான் சாமா!" என்கிறான். கதவு திறக்கப்படுகிறது. அங்கு பாட்டி நிற்கவில்லை. ஓர் இளம் பெண் மங்கிய குத்துவிளக்கின் வெளிச்சத்தில் சிரித்துக்கொண்டு நிற்கிறாள்.

சாமாவின் உடல் குன்றிவிடுகிறது. பெட்டியைத் தூக்கிச் சுமந்து கொண்டு அவள் முன்பு கூலிக்காரன் மாதிரி எப்படிப் போவது. அவள்தான் பங்கஜம். அவன் அத்தையின் மகள்.

"பாட்டி! சாமா வந்திருக்கான்!" என்று உள்ளே பார்த்துக்கொண்டு சொன்னாள்.

"என்னடி சாமாங்கரே? மொளச்சு முணெலைகுத்தலை, சாமா! நன்னாருக்கு! வாடாப்பா! ஏன் அங்கேயே நிக்கரே" என்றாள்.

பாட்டியின் வீட்டிற்குள் செல்லும்போது வெட்கமாக இருந்தாலும் உள்ளத்திலே ஒரு காரணமற்ற சந்தோஷம் இருந்தது.

"என்னடா 'உம்' இன்னு இருக்கரே. அங்கே கொழந்தைகள் எல்லாம் எப்படி இருக்கு? பரீட்சை எப்படிக் குடுத்தே? அடியே! அந்த மண் எண்ணை வெளக்கை ஏத்துடீ, தொரைகளுக்கு இது புடிக்காது!" என்றாள்.

விளக்கைத் துடைத்துக் கொண்டு சிரிக்கும் பங்கஜத்தைப் பார்த்ததும் அவனுக்கும் சிரிப்பு வந்துவிட்டது.

"பாட்டி! இவள் எப்போ வந்தாள்?" என்றான் அதை மறைக்க.


மணிக்கொடி, 10.2.1935