உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வந்துள்ள கறாரான விமர்சன மதிப்பீடுகள் மிகக் குறைவு. உணர்ச்சி வசப்பட்ட பாராட்டுகள் மிக அதிகம். விமர்சனம் என்னும் நவீனச் சிந்தனை கேட்டு நிற்கும் திறன்கள் பல. அவற்றில் மிக முக்கியமானது படைப்பாளியைப் பற்றி விமர்சகன் வந்துசேரும் முடிவுகளுக்கு முன்வைக்கும் காரணங்கள். இந்தக் காரணங்கள்தான் விமர்சகனின் இலக்கிய ஆழத்தையும் நுட்பத்தையும் விவேகத்தையும் தன் காலத்துடன் அவன் கொண்டிருக்கும் உறவையும் வெளிப்படுத்துகின்றன. மற்றொன்று விமர்சகன் தன் காலத்தின் முன் படைப்பாளியை நிறுத்தி அவனை மறுபரிசீலனைக்கு உட்படுத்துவது.

புதுமைப்பித்தனைப் பற்றிய விமர்சனங்கள் அவரது சாரத்தை ஏற்பலர்களாலும் அதனை மதிப்பீடு செய்து வளர்க்க விரும்புபவர்களாலும் எழுதப்படுவதால் அவை விவாதத்திற்குரியவையாக இருக்கும்போதுகூட வலுவான அடிப்படையைப் பெற்றுவிடுகின்றன. நவீனப் பார்வை சார்ந்தோ நவீனத்துவத்திற்குப் பிற்பட்ட பார்வைகள் சார்ந்தோ புதுமைப்பித்தனை ஒருவர் மதிப்பிடலாம். நவீனத்துவத்திற்கு முற்பட்ட பார்வைகள் சார்ந்து அவரைப் பற்றிய விமர்சனத்தை வலுவாக உருவாக்க முடியாது என்றே நினைக்கிறேன். புதுமைப்பித்தன் யதார்த்தப் பார்வை கொண்டவர் என்று நுனிநாக்கால் சொல்லிவிடுகிறோம். சொற்கள், அவற்றின் பொருளை உணராதவர்களால் வெறும் உச்சரிப்புக்கு ஆட்படும்போது ஜடத்தன்மை அடைந்துவிடுகின்றன. யதார்த்தப் பார்வை என்றால் இரண்டாயிரம் வருட நீட்சி கொண்ட கவிதை மரபிற்கு அடிப்படையாக நின்ற பார்வையுடன் தன் உறவை முறித்துக் கொள்வது என்று பொருள். உடலிலிருந்து ஒரு அங்கம் தன் உறவை முறித்துக்கொண்டு விலகுவதுபோன்றது இது. அங்கம் உறவை முறித்துக்கொண்டது அதிர்ச்சி தரும் ஒரு நிகழ்வு என்றால் முறித்துக் கொண்ட அங்கம் அதற்குரிய வாழ்வை மேற்கொண்டு, நிமிர்ந்து, வடிவம் பெற்று, பிரிந்த உடலுக்கு எதிரே வந்து நிற்பது ஒரு பேரதிசயம். இந்த அதிசயம் முதல்முறையாகத் தமிழ் மரபில நிகழும்போது அதற்குப் பெயர் யதார்த்தம் என்றும், தன் பார்வையின் மூலம் அதற்கு உடலும் உயிரும் தந்த படைப்பாளியைப் புதுமைப்பித்தன் என்றும் அழைக்கிறோம்.

பாரதிக்கு ஆக்கபூர்வமான, ஆரோக்கியமான, நேர்மையான விமர்சனத்தை முன்வைத்தவர் புதுமைப்பித்தன். பாரதியைப் பற்றி அவர் தன் கட்டுரைகளில் கூறியுள்ள கருத்துச் சிதறல்களை நான் இங்கு முன்னிலைப்படுத்தவில்லை. அவருடைய புனைவு சார்ந்த படைப்புகள். அனைத்தையும், ஒரு நிலையில், பாரதி பற்றிய விமர்சனமாகவே நினைக்கிறேன். பாரதி ஏற்றுக்கொண்ட வகையிலான புரட்சிகரமான சிந்தனைகளையும் பாரதியின் அதீத கற்பனைவாதம் சார்ந்த வெளிப்பாட்டு முறையையும் முற்றாகவும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் நிராகரித்தவர் புதுமைப்பித்தன். பாரதிக்கு மனிதன் - காலத்தின் - சோதனையால் அவன் எவ்வளவு தாழ்வுற்றிருப்பினும் - ஒரு தெய்வீகச் சுடர்: அந்தச் சுடரைத் தூண்டினால் மனிதனை மேல்நிலைப்படுத்திவிடலாம். இதுதான் பாரதியின் ஆதாரமான கனவு. புதுமைப்பித்தனுக்கோ மனிதன் மிகச் சிக்கலான ஒரு பிராணி. இந்தச் சிக்கலைப்

34