உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பித்தனிடமிருந்து மரபில் ஊறிப்போன பழமைவாதிகளும் நவீனச் சிந்தனையைச் சகித்துக்கொள்ள முடியாதவர்களும் விலகிப் போனதில் வியப்பில்லை. புதுமைப்பித்தன் ஊக்கத்துடன் செயல்பட்ட குறுகிய வருடங்களிலோ மறைவுக்குப் பின் கடந்துபோய்விட்ட இந்த அரை நூற்றாண்டிலோ அவர் தமிழ்ச் சூழலில் போதிய அளவு வரவேற்புப் பெறாமல் போனதற்கு இதுவே முக்கியக் காரணம். நிறுவனங்களின் ஆதரவையோ பல்கலைக்கழகங்களின் கவனிப்பையோ வெகுஜன ஊடகங்களின் அரவணைப்பையோ இன்றுவரையிலும் அவர் பெற்றதில்லை. அரசியல்வாதிகளில் எழுத்தாளர்களின் எண்ணிக்கை தமிழ் மண்ணைப் போல் உலக அளவில்கூட வேறெங்கும் இல்லை. அவர்களது சொற்சிலம்பங்களில் காற்றடைக்கப்பட்ட பல பலூன்கள் வானத்தில் பறந்துகொண்டிருக்கின்றன. துரதிருஷ்டவசமாக அவர்களுடைய கடைக்கண் பார்வையைப் பெறும் பாக்கியம் இன்று வரையிலும் புதுமைப்பித்தனுக்குக் கிடைக்கவில்லை.

புதுமைப்பித்தனைப் பற்றிச் சுயமான மதிப்பீடுகளை உருவாக்கி வாசக மனங்களில் அவருக்கு ஒரு இடத்தைத் தேடித் தந்தவர்களில் முக்கியமானவர்களையேனும் நாம் இப்போது நினைவுகூர வேண்டும். இந்த வரிசையில் முதலில் நம் நினைவுக்கு வருபவர் ரா. ஸ்ரீ. தேசிகன்; புதுமைப்பித்தன் கதைகள் தொகுப்புக்கு 1940இல் முன்னுரை எழுதிய ஆங்ங்கிலப் பேராசிரியர். பொய்யான, மிகையான முன்னுரைகளைத் தாங்கிவரும் புத்தகங்களையே இன்று வரையிலும் நாம் அதிக அளவில் பார்த்துக்கொண்டு வருகிறோம். ஒரு படைப்பை மதிப்பிட முயலும் முன்னுரைகள்கூட மிகக் குறைவு. இந்நிலையில் அறுபது வருடங்களுக்கு முன் புதுமைப்பித்தன் கதைகள்மீது விமர்சனப் பார்வையைச் செலுத்த முயன்ற ஒரு முன்னுரையை அவர் நமக்குத் தந்திருக்கிறார். அந்த முன்னுரையில் அவர் பயன்படுத்திய பல சொற்கள் இன்றும் பொருள் செறிவுடன் விளங்குகின்றன. அதிலிருந்து ஒரு சில வாக்கியங்களைப் பார்ப்போம்.

சிறுகதை மர்மங்களை நன்கு அறிந்துள்ள புதுமைப்பித்தனின் கதைகளுக்கிடையே திரியும்போது ஒரு கவி உலகிலே திரிகிற உணர்ச்சி எனக்கு வருகிறது. இவருடைய கதை ஒவ்வொன்றும் ஒரு தனி அனுபவ முத்திரை பெற்றிருக்கிறது. ஒவ்வொன்றிலும் உண்மையின் நாதம் ஒலிக்கிறது....

ஒரு கவி உள்ளம் - சோகத்தினால் சாம்பிய கவி உள்ளம், வாழ்க்கை முட்களில் விழுந்து ரத்தம் கட்டுகிற உள்ளம் கதையின் மூலம் பேசுகிறது.

புதுமைப்பித்தன் என்னும் ஆளுமையின்மீது தமிழ் வாசகர்களின் ஆர்வத்தை மிக அதிகமாகத் தூண்டிய நூல் தொ. மு. சி. ரகுநாதனின் புதுமைப்பித்தன் வரலாறு. 1951இல் வெளிவந்த இந்நூல் ஒரு நாவலுக்குரிய விறுவிறுப்பும் சுவையும் கொண்டது. புதுமைப்பித்தனின் வித்தியாசமான ஆளுமைக்கு அழுத்தம் தந்து எழுதப்பட்டது. இந்த

வாழ்க்கை வரலாறு மூலமும் புதுமைப்பித்தனைப் பற்றி ரகுநாதன்

36