உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிறோம். இவை தரும் எழுச்சியிலிருந்துதான் அவரது கதைகளில் சில சிகரம் கொள்கின்றன. அவர் பெற்றிருந்த பாதிப்புகளில் முக்கியமானவற்றை சாராம்ச ரீதியாகத் தொகுத்துப் பார்க்கலாம் : ஹிந்து மதம் மனிதனின் சுதந்திரத்தை நெரிக்கும் விதம். ஒடுக்கப்பட்ட மக்கள் படும் துயரம். கிறிஸ்துவச் சபைகளின் செயல்பாடுகள் சார்ந்த விமர்சனம். எதிர்நீச்சல் போடத் தெரியாத அபலைகள்மீது கவியும் கொடுமைகள். மத்தியதர வாழ்க்கையின் பற்றாக்குறை சார்ந்த இழுபறிகள். பிழைப்பின் சுழற்சி மனிதனை இயந்திரமாக்கும் கீழ்நிலை. வறுமையின் கொடிய கோலங்கள். நினைப்புக்கும் நிஜத்துக்குமான வேறுபாடு. மனத்தை மீறும் உடல். ஆன்மீகத்தை ஏமாற்றும் லௌகீகம். புனிதங்களின் ஒப்பனைகள் கலையும் விதம். இன்றைய தாழ்வுகளைப் பாராது பழம்பெருமைகளில் வாழ்தல். தர்மத்திற்குப் பின் நிற்கும் பச்சை அதர்மங்கள்....

புதுமைப்பித்தனின் மொத்தப் படைப்புகளின் சாராம்சத்தையும் ஒற்றைச் சொல்லில் உருவகப்படுத்த ஆசை கொள்வோம் என்றால் 'முரண்பாடுகள்' என்ற சொல்தான் நம் மனத்தில் வரும். முரண்பாடுகளின் எண்ணற்ற கோலங்கள்; வகை பேதங்கள்; விஸ்தரிப்புகள். சகல தளங்களையும் இந்த ஒற்றைச் சொல் ஊடுருவி வாழ்வின் கோலத்தை நிதர்சனப்படுத்திக் கொண்டே போகிறது. இந்த நிதர்சனம் இரண்டாயிரம் வருடத் தமிழ் வாழ்க்கைக்குரிய பெருமிதங்களுக்கெதிராக வைக்கப்பட்டு இலக்கிய ஆர்வத்தைத் தூண்டும் நாடகப் பாங்கில் ஜீவகளை பெறுகிறது. கேலிக்கும் விமர்சனத்துக்கும் இலக்காகும் பெருமைகள் கவிதை மரபு சார்ந்ததாகவோ சமயம், தத்துவம், புராணங்கள், இதிகாசங்கள், நன்னெறிகள், மேற்கத்திய அறிவு அல்லது அறிவியல், கீழைத்தேய நம்பிக்கைகள் போன்ற ஏதேனும் ஒரு துறை சார்ந்ததாகவோ இருக்கின்றன. பரிசீலனைக்கு ஆட்படுத்தப்படும்பகுதிகள் வெவ்வேறு துறை சார்ந்தவையாக இருந்தாலும் விமர்சனத்தில் தாட்சண்யம் என்பது அநேகமாக இல்லை. இத்துறைகள் எவற்றையும் அவர் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை எனில் எவற்றையும் முழுமையாக நிராகரிக்கவும் இல்லை. வாழ்க்கை சார்ந்த அவருடைய அனுபவம் பழமையின் சாரத்தைப் புதுமையின் சாரத்தோடு சேர்த்துக்கொள்ள விரும்புகிறது. கம்பனும், ஜேம்ஸ் ஜாய்ஸும் அவருக்கு முக்கியமானவர்கள். ஆஸ்திகத்தில் நம்பிக்கையற்ற அவரைக் கோபுரங்களின் அழகுகள் கவர்கின்றன. தேசப்பற்று மட்டோ என்று சந்தேகப்படும்போது ஊர்ப்பற்று மிகுதி என்பது உறுதியாகிறது. அவரது விமர்சனத்திற்கு இலக்காகும் ஏதேனும் ஒரு துறையுடன் மட்டும் ஒட்டிக் கொண்டிருக்கும் ஒரு வாசகனின் தன்முனைப்பு அவரால் சிதைவுக்குள்ளாகும்போது தன் மயக்கத்தைக் காணத் தெம்பில்லாமல், 'என் நம்பிக்கைகளை ஏன் சிதைக்கிறாய்?' என்று புதுமைப்பித்தனைப் பார்த்துக் கோபப்படுவது மனித சகஜம்தான் என்றாலும் இலக்கிய விமர்சனமாகாது. புதுமைப்பித்தனுக்கோ தன் செயல்பாடு சார்ந்த பிரக்ஞை தெளிவாகவே இருக்கிறது.

தமிழ் வாழ்வின் வெவ்வேறு கோலங்களைக் காட்டி அதன் முழுப்

பரப்பும் தன் அனுபவத்திற்குள் வந்துவிட்டதான பிடிப்பை வாசகனுக்கு

39