உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவன் பிறக்கும் மண்ணும் அவனது பின்னணியும் மிகப் பெரிய பாதிப்பை அவனிடம் செலுத்துகின்றன. சுய அனுபவம் சார்ந்தும் வாசிப்புச் சார்ந்தும் தன்னைச் சுயப் பரிசோதனைக்கு ஆட்படுத்திப் பக்குவப்படுத்திக்கொள்ள முயலும் படைப்பாளியிடமும் அவன் பின்னணி சார்ந்த சில பலவீனங்கள், வெல்ல முடியாதவையாக மரணம் வரையிலும் எஞ்சிவிடுகின்றன. இந்நிலைக்குப் புதுமைப்பித்தன் ஒரு விலக்கல்ல.

நிறையும் குறையும் கொண்ட மனிதனாகத்தான் படைப்பாளி எப்போதும் வரலாற்றில் பார்க்கப்பட்டு வந்திருக்கிறான். நவீன அறிவுகளுக்குரிய இடதுசாரிச் சிந்தனைகள் ஓங்கி வளர்ந்த காலத்தில் சமூகத் தளம் சார்ந்த செயல்பாடுகள் முக்கியத்துவப்படுத்தப்பட்டு படைப்பாளிமீது அவன் ஏற்க விரும்பாத பல்வேறுபட்ட பொறுப்புகளும் குணங்களும் சுமத்தப்பட்டன. படைப்பாளியை எதிர்மறை விமர்சனத்துக்குள் தள்ளிய சூழல் இது.

புதுமைப்பித்தனும் பிற படைப்பாளிகள்போல் பலமும் பலவீனங்களும் கொண்டவர்தான். அனைத்து மதிப்பீடுகளையும் விமர்சிக்க அவருக்கு உரிமை உண்டென்றால் அவர் எழுத்துகள் உள்ளிட்ட அனைத்தையும் விமர்சிக்க நமக்கும் உரிமை உண்டு. ஒரு படைப்பாளியின் நிறையையோ குறையையோ சுட்டும்போது மொத்தப் படைப்புகள் சார்ந்து அந்தப் படைப்பாளி கொண்டுள்ள பார்வைக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. இந்தப் பார்வையை ஏற்றுப் படைப்பாளியை மதிப்பிடத் தெரிந்த எவனும் தன் பார்வை சார்ந்து படைப்பாளியின் குறைகளை ஆராய்ந்து தன் மறுபரிசீலனையை உருவாக்கலாம். படைப்பாளியின் அடிப்படைப் பார்வையை மறைத்துவிட்டுக் குறைகளை மட்டும் தொகுக்க யாருக்கும் உரிமை கிடையாது.


புதுமைப்பித்தனின் சாதனைகளாக வெவ்வேறு கதைகள் வெவ்வேறு வாசகனுக்குத் தோன்றுவது இயற்கையே. வாசகன் தன் ஆழ்ந்த வாசிப்புச் சார்ந்து புதுமைப்பித்தனின் ஆற்றலை மதிப்பிடுவதே சிறப்பானது. கடந்த ஐம்பது வருடங்களாக அவர் எழுத்துகள்மீது அக்கறை கொண்டிருக்கும் வாசகன் என்ற அளவில் எனக்கு முக்கியமான கதைகளைக் - எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் - கூறுகிறேன். காஞ்சனை, புதிய கூண்டு, மகாமசானம், சுப்பையா பிள்ளையின் காதல்கள், வேதாளம் சொன்ன கதை, ஒரு நாள் கழிந்தது, கலியாணி, சிற்பியின் நரகம், துன்பக் கேணி, கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும், மனக்குகை ஓவியங்கள், நினைவுப் பாதை, காலனும் கிழவியும், சங்குத் தேவனின் தர்மம், இது மிஷின் யுகம்!, மனித யந்திரம், தெரு விளக்கு, சித்தி, கயிற்றரவு. சிகர சாதனை களாகச் சொல்லத்தக்கவை சாப விமோசனமும் செல்லம்மாளும். சிற்பியின் நரகம் சிறுகதையைப் பலரும் மிகச் சிறப்பாக மதிப்பிட்டிருக்கிறார்கள். அறிவுபூர்வமான ஒரு கேள்விக்கு மிகச் சிக்கனமாகக் கதையில் விடைகாணும் முயற்சியை மேற்கொண்டதில், சிக்கனம் தருக்-

50