உள்ளடக்கத்துக்குச் செல்

கலிங்க ராணி/கலிங்க ராணி 16

விக்கிமூலம் இலிருந்து


16


"பாவமும் புண்ணியமும்! அந்தப் பயல்களை ஒழிக்கத் தானே அதைக் கூறினோம். நான் யோசிப்பது அதற்கல்ல பாலா! கொலை கடைசி வேலையாக இருக்க வேண்டும். கேவலம் ஒரு பணிப்பெண்ணின் செல்வாக்கைப் போக்கவா கொலையில் ஈடுபடவேண்டும். பாலா! ஒரு கொலை செய்வதன் மூலம் ஒரு ராஜ்யமாவது கிடைக்க வேண்டாமா? அல்லது நமது ஆரியத்துக்கு ஆபத்தை விளைவிக்கும் பெரிய வீரனாவது ஒழிய வேண்டாமா? நீ கேவலம் ஒரு வேலைக்காரிக்காக இதைச் செய்வதா?" என்று கேட்டுவிட்டு பாலாவை உற்றுப் பார்த்தான். அவனது பார்வை மனதிலுள்ளது எது என்பதைக் காட்டிற்று. பாலா பதறினாள். "பதஞ்சலி! ஆபத்தாக முடியும், இதை மன்னனுக்கோ அவன் மகளுக்கோ தந்தால். நீ அதைத்தான் யோசிக்கிறாய் என்பது தெரிகிறது. ஆனால் நான் அவ்வளவுக்குத் துணியமாட்டேன்." என்று பாலா கூறினாள்.

"இப்போது வேண்டாம்! சமயம் கிடைக்கும். நடனாவைப் பற்றி நீ கவலைப்படாதே. அவள் அதிக நாட்களுக்கு இங்கு இருக்க முடியாது. ஊரிலே, அவள் மீது பல வதந்திகளைப் பரப்பும் வேலையை நான் பார்த்துக் கொள்கிறேன். நடனா ஒழிவாள் ஊரைவிட்டு. பிறகு, பதுங்கியிருந்து பாயும் புலிபோல், இந்த மாத்திரையைக் கொண்டு நீ காரியத்தைச் செய்யலாம். நான் அவருக்கு உன் விஷயமாகத் தெரிவிக்கிறேன்." என்று கூறிவிட்டு, செலவுக்குப் பொருள் தந்தான். பின்னர் இருவரும் பிரிந்து போயினர்.

வேதனைப்பட்ட வைத்தியருக்கு விஷ மாத்திரையைக் கொடுத்துவிட்ட பிறகு, கிலி அதிகமாகிவிட்டது. நடனா மீது இருந்த கோபங்கூட அதனால் குறையலாயிற்று. அவள் அழகையும், இளமையையும் எண்ணினார். அவளைக் கொல்வதா என்று பதறினார். பாலா, துவேஷத்தினால், நடனாவைக் கொன்றே விடுவாளோ! என்ன செய்வது என்று ஏங்கினார். காதல் முறிவு, கோபம், ஆத்திரம் ஆகிய பல நோய்களால் தாக்குண்ட வைத்தியருக்கு, இந்த வேதனையும் சேரவே, அவருடைய மனமே குழம்பிவிட்டது. தலைவலிக்கு மருந்து கேட்போருக்கு மார்வலி போக்கும் மருந்து; காய்ச்சலுக்கு மருந்து கோருவோருக்கு காச நோய் மருந்து; குமட்டல் போக்க மருந்து கேட்போருக்கு குஷ்ட நிவாரணி என்று கொடுத்து வரலானார். ஊரெங்கும் வைத்தியருக்கு கெட்ட பேர். அவருக்கு வந்துற்ற மனக்குழப்பமே இதற்கெல்லாம் மூலகாரணமென்று பேச்சாகிவிட்டது. வைத்தியரின் நோயைப் போக்க வேறோர் வைத்தியரை, அரசர் அனுப்பி வைத்தார்.

பதஞ்சலி கூறின்படி ஊரிலே, நடனாவைப் பற்றிய வதந்திகள் பரவலாயின. கழனி, மேடு, சாவடி, தோட்டம், கடைவீதி எங்கும், "துரோகம் புரிந்த வீரமணிக்கு அவள் காதலிதானே! அவள் இங்கு இருக்கலாமா? பாம்புக்குப் பாலூற்றுவதா? நெருப்புக்கு முத்தமிடுவதா? அவளும் ஒழியத்தான் வேண்டும். அவளையும் ஊரைவிட்டு ஓட்டித்தான் தீரவேண்டும். அவள் ஏதோ ஆடியும் பாடியும் நமது அரசிளங்குமரியை மயக்கிவிட்டாள். மன்னர் இனி ஒரு விநாடி அந்தப் பணிப்பெண்ணை அரண்மனையிலே இருக்கவிடக் கூடாது" என்று கூவினர் மக்கள். அரண்மனைக்கும் செய்தி எட்டிற்று. மன்னரிடம் பலர் மெள்ள மெள்ளச் சேதியைக் கூறினர். "மக்களின் மனம் கோபக் குழம்பாகி விட்டது. இந்த நேரத்திலே, ஏதேனும் செய்யாவிட்டால், ஆத்திரப்பட மக்கள் ஏதேனும் செய்வர்." என்று மந்திரிகள் கூறினர். அந்தப்புரத்திலே, சேடியர் கைபிசைந்து கொண்டனர். அரசிளங்ககுமரி, "இதென்னடி பாலா! இந்த மக்கள் ஏதேதோ கூவுகிறார்களாம். அவன் துஷ்டன், துரோகி; நடனா மீது என்ன குற்றம் சுமத்த முடியும்" என்று கேட்டாள். "எனக்கென்ன தெரியும்? உங்கள் மக்கள் எதையும் நிதானித்துப் பார்த்து உரை போட்டுப் பேசுவர் என்று கூறிக்கொண்டிருப்பீரே" என்று பாலா கேலி செய்தாள்.

இத்தகைய சூழலுக்கிடையே இருந்த சுந்தராங்கி இதைக் குறித்துக் கவலைப்படவில்லை. அவளுடைய நினைப்பெல்லாம், யாருமறியாதபடி எப்படி வெளியே போவது என்பதிலேயே இருந்தது.

கங்காபாலாவுக்குச் சிக்கலான பிரச்னையாகிவிட்டது. விஷமூட்டி கொல்வதா? ஆத்திரப்படும் மக்களைக் கொண்டே நடனாவை விரட்டி விடுவதா? பிறகு விஷத்தை யாருக்கு உபயோகிப்பது என்று யோசிக்கலானாள்.

அன்றிரவு! ஓர் தோழி நடனாவிடம் தனியாக வந்து, மக்களின் மனம் மது உண்ட குரங்காக இருப்பதையும், அரண்மனை வாயிலுக்கே வந்து ஆர்ப்பாட்டம் செய்யப் போவதாக வதந்தி இருப்பதையும் கூறி அரசிளங்குமரி சில காவலருடன், நடனாவைக் காஞ்சிக்கு அனுப்பி வைத்தல் உசிதமென்று எண்ணுவதாகவும் கூறி, நடனாவின் இஷ்டமென்ன வென்று கேட்டாள். தப்பியோட இதுவே சரியான சந்தர்ப்பம் என்று எண்ணிய நடனா, பயந்தவள் போல் நடித்து, "அரசிளங்குமரி கூறுவதே சரியான யோசனை. அதிகமாக ஆட்கள் கூடாது. ஒரே ஒரு காவலாளி மட்டும் வரட்டும். நான் இப்போதே மாறுவேடமணிந்து கொண்டு புறப்படுகிறேன். அரசகுமாரியிடம் போய்ச் சொல்" என்று கூறிவிட்டு, மகிழ்ச்சியோடு ஆணுடை அணிந்து கொண்டாள். அரசகுமாரி ஒரு காவலுடன் அங்கு வந்து நடனாவுக்குத் தைரியம் கூறி, "மக்களைச் சில நாட்களிலே சமாதானப்படுத்திவிடுவார் மன்னர். பிறகு நீ மறுபடியும் வந்து சேரலாம், நடனா! உனக்கு இப்படி இடிமேல் இடி வருவது கண்டு என் மனம் பற்றி எரிகிறது. என்ன செய்வதடி! மன்னனாக இருந்தாலும், மக்களின் மனப் போக்கைக் கவனித்துத்தானே நடந்தாக வேண்டும். மக்களுக்காகத்தானே மன்னன். ஆகவே நீ மனதை குழப்பி கொள்ளாதே, உன்னை நான் கைவிட்டு விடுவதாக எண்ணாதே. உன்னைப் பிரிந்திருக்கவும் மனம் இசையவில்லை. அதிலும் நீ நோய்வாய்ப்பட்டு இப்போதுதான் கொஞ்சம் தேறியிருக்கிறாய். இந்நிலையிலே உன் மனம் நோக வைக்கின்றனர் மக்கள். சில நாட்கள் காஞ்சியில் இரு. பிறகு நாம் பழையபடி இங்கே மகிழ்த்திருப்போம்" என்று அன்புமொழி பேசி ஆரத்தழுவிக் கன்னத்தை முத்தமிடுகையில், கண்ணீர் பெருகுவது கண்டு, "கண்ணே நடனா! காஞ்சிக்குப் போய்ச் சில தினங்கள் இருக்கத்தானே சொன்னேன். இதற்கு அழுவதா?" என்று தேற்றினாள். நடனாவின் அழுகையின் காரணம் அரசகுமாரிக்குத் தெரியுமோ! செல்வமாக வாழ்ந்து மன்னர் குடும்பத்தின் ஆதரவு பெற்று வந்த இடத்தைவிட்டு, பாய்மரமற்ற கப்பல் போல் இனி உலகிலே சுற்றப் போகிறோமே என்ற துக்கத்தால் அவள் அழுதாள். சில நிமிடங்கள் சோகத்திலாழ்ந்திருந்தனர் இருவரும். பிறகு, தோட்டத்தைக் கடந்து, அரண்மனைப் பின்புற வாயிலை அடைந்து, அங்குத் தயாராக இருந்த குதிரைகளிலே நடனாவும், காவலாளியும் ஏறிக்கொண்டு, அரசகுமாரியிடம் விடைபெற்றுக் கொண்டனர். குதிரைகள் கடுவேகமாக ஓடலாயின.

அதே நேரத்திலே, வைத்தியரின் மனம் மிக அதிகமாக குழம்பி விட்டதால். அவர் படுக்கையை விட்டெழுந்து வீட்டெதிரில் வந்து நின்றுகொண்டு, "அடி நடனா! நீ எத்தனை காலம் உயிரோடு வாழமுடியும்? அதிலே சேர்க்கப்பட்டுள்ள மூலிகை என்ன தெரியுமோ!" என்றும், "பாலா கொடுத்து விட்டாயா விஷத்தை? முடித்து விட்டாயா காரியத்தை? பாலில் கலந்து கொடுத்தாயா, பழத்திலே சேர்த்தாயா?" என்றும், பிதற்றிக் கொண்டு நின்றார். வழியிலே போவோர் வருவோரைப் பார்த்து, "நான் அரண்மனை வைத்தியன்; ஏராளமான சொத்து இருக்கிறது. எனக்கு என்னடா குறை? என்னைக் கலியாணம் செய்துகொள்ள அந்த நடனா மறுத்தாளே, அவளைச் சும்மா விடுவேனோ? ஒரே ஒரு மாத்திரையைக் கொடுத்தேன், அவ்வளவுதான்! தூங்கி விட்டாள்! இனி ஊர் ஜனங்கள் கூடி ஓவென்று அலறினாலும் ஓடிப்போன வீரமணி ஓலமிட்டழுதாலும், அவள் எழுந்திருக்கவே முடியாது" என்று கூறுவதும், இங்குமங்கும் ஓடுவதுமாக இருக்கக் கண்டு மக்கள் வைத்தியரின் புத்தி கெட்டு விட்டது. பாவம், என்று பரிதாபப்பட்டனர். வைத்தியர் அரண்மனை வாயிலை அடைந்தார். வாயிற்காப்போன், வைத்தியருக்கு மரியாதையாக வழிவிட்டு, "இந்த நேரத்தில் எங்கேயோ?" என்று வினயமாகக் கேட்டான்.

"ஏன்? நடனாவைப் பார்க்கப் போகிறேன். உனக்கென்ன?" என்று கோபமாகப் பதில் கூறினார் வைத்தியர்.

"நடனாவைக் காண இந்த நேரத்திலா? என்ன விசேஷம்?" என்று காவலாளி கேட்க, வைத்தியர் காவலாளி முதுகைத் தட்டிக் கொடுத்து, "அது பரம இரகசியம்; யாரிடமும் கூறாதே. நடனா செத்துவிட்டாளா? இருக்கிறாளா என்று பார்க்கவே, போகிறேன்" என்று கூறினார். காவலாளி வைத்தியரின் பேச்சையும் முகத்தையும் கண்டு, சந்தேகங்கொண்டு, வைத்தியர் பித்தன்போல் பிதற்றுகிறார் என்று தெரிந்து, இந்த நிலையில் இவரை உள்ளே போகவிடக் கூடாதெனத் தீர்மானித்து, மெள்ள அவரை வழிமறித்து நின்று, "வைத்தியரே! காலையிலே போய்ப் பார்க்கலாம். இப்போது உள்ளே போக வேண்டாம்" என்று தடுத்தான். உடனே வைத்தியருக்குக் கோபம் பீறிட்டெழுந்தது.

அடே! அற்பகுணம் படைத்தவனே. அயோக்கியா! என்னையா எதிர்க்கிறாய்? நான் அரண்மனை வைத்தியன்; யாசகம் கேட்டு வருபவனா? போக்கிரி! போன மாதம் தானேடா உனக்கு பூரணசந்திர சூரணம் கொடுத்து, உனக்கு வந்த முடக்கு வாதத்தைப் போக்கினேன். உன் தாய்க்கு வந்த குளிர் காய்ச்சலுக்குக் குளிகை கொடுத்தேன். என்னை இப்போது உள்ளேவிட நீ மறுக்கிறாயே, மடையா!" என்று கூவினார். காவலாளி ஆத்திரமடையாது, பக்குவமாகவே அவரைப் பிடித்துக் கொண்டு, "பதறாதீர்! வைத்தியரே, உரக்கக் கூவாதீர்" என்று சாந்தமாகப் பேசிக்கொண்டு, வேறு வேலையாட்களை அழைத்து, "வைத்தியரை, மரியாதையாக அழைத்துக் கொண்டு மன்னரிடம் கொண்டுபோய் விடுங்கள்" என்று கூறினான்.

"சரி! டே! ஒருவன் முன்னால் நட, மற்றவன் பின் பாலே வா!" என்று வைத்தியர் உத்தரவிட்டுவிட்டு, கெம்பீரமாக நடக்கலானார்.

அதே நேரத்தில், அரசகுமாரி முன்னால் ஆரியப் பெண் கங்காபாலா நடந்து சென்றுகொண்டிருந்தாள். அவள் கையில் பால் நிரம்பிய தங்கக் கிண்ணத்தை ஏந்திக் கொண்டிருந்தாள். பாலாவின் முகத்திலே வெற்றிக்குறி தென்பட்டது. பாலிலே மாத்திரை கரைத்துவிட்டிருந்தாள்!

"வைத்தியர் என்றால், வக்கா என்றோ, கொக்கு என்றோ எண்ணிக் கொண்டாள் அந்தத் துஷ்டச் சிறுக்கி. அந்த மாத்திரை வேலை செய்யும்போதுதானே, அவளுக்கு என் திறமை தெரியப் போகிறது" என்று கோபமாகக் கூறிய வைத்தியரை, வேலையாட்கள், "எந்த மாத்திரை? எந்தப் பெண்?" என்று கேட்டனர். "அது அரண்மனை இரகசியம். வெளியே தெரியக்கூடாது. ஆனால் நீங்கள் யோக்யர்கள். உங்களிடம் சொன்னால் பரவாயில்லை. அந்த நடனாவுக்கு விஷம் கொடுக்க ஏற்பாடு செய்துவிட்டேன்" என்று பூரிப்போடு வைத்தியர் சொன்னார். திடுக்கிட்ட வேலையாட்கள், "நிஜமாகவா?" என்று கேட்க, வைத்தியர் சீறி விழுந்து, "நான் புளுகுவேனா? போய்க் கேளுங்கள் பாலாவை. கருப்பு மாத்திரை கொடுத்தேனா இல்லையா என்று. முட்டாள்களே! தீட்டிய சித்திரம் சரியாக இல்லாவிட்டால் கலைத்துவிடுவது, கட்டிய வீடு கலனாகிவிட்டால் இடித்துத் தள்ளுவது, பழம் அழுகினால் குப்பையிலே வீசுவது—இதுதானே முறை. அவள் சாகக் கிடந்தாள். இந்த அற்புதானந்தர் அவளுக்கு உயிர்ப்பிச்சை கொடுத்தார்; ஆனால் அவளோ? அடேயப்பா! உங்களிடம் சொல்வதற்கென்ன, என்னைக் கொல்லத் துணிந்தாள்" என்று கூறிச் சோகித்தார். "ஒருவருக்கும் தீங்கு செய்தறியாத நடனாவா, உம்மைக் கொல்லத் துணிந்தாள். எப்படி? எதனால்? ஏன்?" என்று வேலையாட்கள் படபடத்துக் கேட்டனர். "ஏன் என்பது எனக்குத் தெரியாது. எதனால் என்பது தெரியும்" என்று கூறிவிட்டு வைத்தியர் மௌனமாக இருந்தார். வேலையாட்கள், 'எதனால்? எதனால்?' என்று மீண்டும் மீண்டும் கேட்டனர்.

"கத்தியாலா?"

வைத்தியர் 'இல்லை' என்று தலை அசைத்தார்.

"ஈட்டி கொண்டு குத்த வந்தாளா?"

வைத்தியர், "எனக்கு வைத்தியத்துடன் போரிடவுந் தெரியும்" என்று கூறிவிட்டு, 'அவள் என்னைத் தன் அழகால் கொல்ல முனைந்தாள். அந்த இரு கண்கள் நஞ்சைப் பொழிந்தன. அவள் பேச்சு, ஈட்டிபோல் குத்திவிட்டது, ஆனால், நானோ என் அறிவினால் அவளைக் கொன்றுவிட ஏற்பாடு செய்துவிட்டேன்' என்று வைத்தியர் கூறினதும் வேலையாட்களில் ஒருவன், மிரண்டோடினான் மன்னனிடம். கும்பிட்டுக் கைகட்டி, துக்கம் நெஞ்சை அடைக்க, "மன்னர் மன்னவா! நமது வைத்தியர், மனங்குழம்பியதால், நடனாவுக்கு விஷமிட்டுக் கொல்ல ஏற்பாடு செய்துவிட்டாராம்" என்று கூறிட மன்னரும் மருண்டு, அம்மங்கையின் அறைக்கு விரைந்தோடி, "கண்ணே, மங்கா! நடனா எங்கே? அந்த நாச நினைப்புக்காரன், நடனாவுக்கு விஷமிட ஏற்பாடு செய்தானாமே" என்று கேட்டான். மன்னன் மகள், "தந்தையே! நடனாவுக்கு ஆபத்தொன்றும் நேரிடாத இடத்தில் இருக்கிறாள். ஊரிலே ஜனங்கள் ஏதோ ஆத்திரமாக இருப்பதாகக் கேள்விப்பட்டேன். நடனாவை காஞ்சிக்கு அனுப்பிவிட்டேன்" என்றாள்.

மன்னனும் அவன் குமாரியும் பேசிக் கொண்டிருக்கையிலே கங்காபாலாவின் முகம் பயத்தால் வெளுக்கத் தொடங்கிற்று; உடல் பதறலாயிற்று; கையிலிருந்த பால் செம்பு கீழே விழுந்துவிட்டது. பால் தரையில் ஓடிற்று. அரசகுமாரி, கங்காவைப் பிடித்துக் கொண்டு, "என்னடி பாலா! என்ன உடம்புக்கு? ஏன் இப்படி நடுங்குகிறாய்?" என்று கேட்டுக் கொண்டிருக்கையில் வைத்தியர் தலைவிரிகோலமாக உள்ளே புகுந்து, பாலாவைப் பார்த்து, "முடிந்துவிட்டதா காரியம்? ஒழிந்தாளா? விஷம் எப்படி?" என்று கேட்டான். "பாலா மூலமாகத்தான் இந்தப் பாதகத்தைச் செய்யச் சொன்னாயா?" என்று மன்னன் மிரட்டினான். வைத்தியர், "பாதகமா? இதுவா பாதகம்? பேஷ்! மகா நீதிமான் நீர்" என்று கூவினான். பாலா, மிரள மிரள விழித்தாள். கூவினதால் களைத்த வைத்தியன் பால் செம்பை எடுத்து மிச்சமிருந்த பாலை மளமளவெனப் பருகினான். பாலா, "வேண்டாம், பாலைச் சாப்பிடாதீர். அதிலேதான் விஷ மருந்தைக் கரைத்தேன்!" என்று கூச்சலிட்டாள். "ஆ! என்ன! விஷம் எனக்கேவா" என்று வைத்தியனும், "அடி கள்ளி! என் மகளுக்கா விஷமிடத் துணிந்தாய்" என்று மன்னரும், "துரோகி! அன்போடு பணிவிடை செய்வதாகப் பாசாங்கு செய்தாயேடி" என்று அரசகுமாரியும் ஆத்திரத்துடன் கூவினர். வைத்தியர் சாயத் தொடங்கினார். பாலா, மெள்ள நழுவ எத்தனித்தாள். வேலையாட்கள் பிடித்துக் கொண்டனர். "தள்ளுங்கள், இந்தத் துரோகியைச் சிறையிலே" என்று மன்னன் கட்டளை இட்டுவிட்டு, வைத்தியரைக் கவனிக்கலானான். வைத்தியரோ, சிகிச்சையே தேவையில்லாப்பேறு பெற்றார். ஆம்! "விடுகிறேனா பார் உன்னை" என்று வைத்தியர் பிணமானார்.