உள்ளடக்கத்துக்குச் செல்

கலிங்க ராணி/கலிங்க ராணி 32

விக்கிமூலம் இலிருந்து


32


கொஞ்ச நேரம் கதறிய பிறகு, வீரமணி அலுத்து, மயக்கமேலிட்டு அசைவற்றுப் போனான். அந்த நிலையிலே மன்னனிடம், வீரமணியைக் கொண்டு போய்ச் சேர்த்தனர். மன்னன் அரண்மனைத் தோட்டத்திலே உலவிக் கொண்டிருந்தான். எதிரே கொண்டு வந்து கீழே உருட்டப்பட்ட வீரமணியை, முதலில் மூர்ச்சை தெளியச் செய்து, அவனைப் பிடித்து வந்தவர்களைப் பார்த்து, "யார் இவன்? இவன் குற்றம் என்ன?" என்று வினவினான்.

"மன்னா! இவன் யாரென்று தெரியவில்லை. காட்டிலே கண்டோம்; இவனிடம் இது இருந்தது" என்று கூறி நீலமணியை மன்னனிடம் தந்தனர். அதைக் கண்டதும், பாண்டியன் பதைத்து, "ஆ! நீலமணி! நமது அருமை மணி இது! இவனிடம் எப்படி வந்தது? இவன் யார்?" என்று ஆச்சரியத்தோடு கேட்டான். வீரமணிக்கோ, பித்தம் தெளியவில்லையாகையால், மன்னனை ஏற இறங்கப் பார்த்து, "நீ யார்! காட்டானா? இல்லையே! அவன் உன்னைவிட வயதிற் சிறியவனாயிற்றே! கலிங்கத்தானா? இருக்காதே! அவன் கண் இப்படி பிரகாசிக்காதே? முடிதரித்திருக்கிறாய், அரசனா? இது சோழ மண்டலமா? ஐயோ! நான் நுழையக் கூடாதே!" என்று உளறியபடி இருந்தான்.

"இவனுக்கு மூளைக் கோளாறு இருக்கிறது. நமது அரண்மனைச் சிகிச்சைச் சாலைக்கு அனுப்புங்கள். புத்தி சுவாதீனத்திற்கு வந்ததும் விசாரிப்போம்." என்று சொல்லி வீரமணியை அனுப்பி விட்டு தன் அண்ணனை நினைத்துப் புலம்பலானான்.

"ஆ! அண்ணா! உன்னைக் காணாது வாடும் எனக்கு, நீலமணியைக் காணும் பேறாவது கிடைத்ததே. முடிதரித்து வீற்றிருக்க வேண்டிய நீ, இந்தப் பாழும் நீலமணியினால், முடி இழந்தாய். குடும்பத்தைத் துறந்தாய்; என்ன கதியானாயோ? நீலமணியே! உனக்கு வாயேது, பேச! பேசும் வாயுடையவனோ, பித்தனாக இருக்கிறான். என் மனம் எதையோ எண்ணி ஏங்குகிறதே. எங்கள் குடும்பத்தைக் கெடுத்த கோரமணியே! உன் அழகால்தானே இவ்வளவு அவதியைப் பெறவேண்டியதாகப் போய்விட்டது! உன் மர்மத்தை நான் யாரிடம் கூறுவேன்" என்று பாண்டியன் பலப்பல கூறிப் பிரலாபித்தது கண்ட, அவ்விரு வீரரும், "இந்தப் பொல்லாத நீலமணியைத் தொட்டவருக்குப் பித்தம் பிடிக்கும்போலும். இதைக் கண்டு, மன்னர் கண் கசிந்து, ஏதேதோ பேசுகிறாரே" என்று எண்ணினர். மன்னனோ, ஓர் மேடைமீது அமர்ந்து நீலமணியை உற்று நோக்கியபடி இருந்தான். முத்து முத்தாக அவன் கண்களிலே நீர் வெளிப்பட்டது!

'நீலமணி எடுத்துவந்த வீரனொருவன், சித்தங்கெட்டுக் கிடக்கிறான். சிகிச்சை பெற்று வருகிறான்' என்ற விஷயம் ஊரிலே பரவி, நடனாவின் செவியில் புகுந்தது. "ஆனால் பித்தர்கள் பலரிருக்க இவன் ஒருவன்தானோ கிடைத்தான் சிகிச்சைக்கு என்று அவள் கூறினாள். அழகிகள் அணைப்புக்காக மனதை அலையவிடும் பித்தர்கள், ஆடம்பர வாழ்வுக்காக, அதிகாரத்துக்காக, எதையுஞ் செய்யத் துணியும் பித்தர்கள் உண்டல்லவா" என்றுரைத்தாள். "மருந்திட வந்தவன் மையல் கொண்டலைந்தான். இங்கே ஒரு பித்தன் நடமாட, 'வாடி' என்று அழைத்துப் 'போடி' என்று அனுப்பினான். எத்தனையோ பித்தர்களைக் கண்டாயிற்று. இவன் அதுபோல் ஒருவன்" என்று அலட்சியமாக நடனா கூறினாள்.

"இவன் சாமான்யனல்ல! வாட்போர்வீரன், பேசுவது பூராவும் போர் பற்றியே. சோழ மண்டலத்தைப் பற்றியும், மன்னனைப் பற்றியும் பேசுகிறான்; பெருமையுடன் கலிங்கப்போர் பற்றி சிலாகித்துக் கூறுகிறான்" என்று அரண்மனைச் சேடியர் கூறினர். "அங்ஙனமாயின் நான் காணவேண்டுமே" என்றாள் நடனா. பிறகு அரசனாணை பெற்று நடனா அந்தச் சிகிச்சை சாலைக்குச் சென்றாள். வீரமணியைக் கண்டாள்; 'கண்ணா' என்று அரண்மனையே அதிரக் கூவினாள். 'நடனா' என்றோர் எதிரொலி கிளம்பிற்று; இரு உருவமும் ஒன்றாகப் பிணைந்துவிட்டது. இருதயத்திலே கிடந்த எண்ணங்களை எடுத்துரைக்க முடியாத நிலைகளை இதழ்கள் ஒன்றையொன்று பற்றிப் பேசின; அவ்விதழ்கள் பிரிய மறுத்தன; காவலர் ஓடோடி மன்னனுக்குரைத்தனர். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து "நீ...நீதானா? நினைவுதானா? நிஜமா?" என்று இருவருமே கேட்டு அதிர்ச்சியும் ஆனந்தமும் பெற்றனர்.

               "எப்படி இங்கு வந்தாய்?
         எங்கெங்கே இருந்தாய்?
         ஐயோ, என்னென்ன கஷ்டமோ?
         ஏன், இப்படி மெலிந்தாய்?
         என் அன்பே! இன்றே நான் வாழ்வைப் பெற்றேன்.
         என் இன்பமே! எத்தனை காலம் பிரிந்திருந்தோம்!

        என்னை எங்கெங்கு தேடி அலுத்தாயோ?
        என்னால் உனக்கு எவ்வளவு இடையூறோ?"

என்ற கேள்விகளை, யார் முதலில் கேட்டனர், யார் பிறகு கேட்டனர் என்பது தெரியமுடியாதவண்ணம், ஏககாலத்தில் இருவரும் ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டனர். இருவரும் பதில் கூற வாய் திறந்தாரில்லை. சில கேள்விகளுக்குப் பதில் முத்தம்! சில கேள்விகளுக்குக் காதலின் பிணைப்பு! சில கேள்விகளுக்குப் பதில் கண்ணீரைத் துடைப்பது!—என்ற முறையிலிருந்ததே தவிர, ஒருவர் வரலாற்றை ஒருவர் கேட்க முடியவில்லை. நடுக்கடலில் நாலாய் கெட, அலையுடன் போரிட்டுத் திமிங்கலத்தினிடமிருந்து தப்பிக்க முடியாமல் தத்தளித்தவனுக்குத் திடீரென ஒரு கலம் கிடைத்தால், யாருடையது? எங்கே செல்கிறது! எங்கிருந்து இங்கே வந்தது?" என்று அந்த மரக்கலத்தின் வரலாறு விசாரிக்கவா மனமிருக்கும்? 'ஆ! மரக்கலம், இனி நான் உன்னிடம் அடைக்கலம்! உயிர் தப்பினோம்' என்று உவகை கூத்தாடுவானன்றோ! அதுபோலப் பலப்பல தொல்லைகட்கு ஆளாகிப் பல்வேறு நாடுகளில் சுற்றி அலைந்த காதலர், ஒருவரை ஒருவர் கண்டதும், கேள்விகள் மனதிலே கிளம்பி, நாவிலே நர்த்தனமாடினவே தவிர பதில் கூறவோ, கேட்கவோ முடியாதபடி அவர்கள் நிலைமை அப்போது இருந்தது.

"அன்பே! உயிரே! இன்பமே!" என்று யார், யாரை அழைத்தனர் என்று தெளிவு இல்லை. 'அன்பே! உயிரே' என்ற சத்தம் மட்டுமே கேட்டது. ஓர் ஆண்—ஒரு பெண் குரல்; இரு குரலிலும் காதல் கனிவு தோய்ந்து கிடந்தது. மன்னனும் அவன் சேவகரும் அங்கு வந்தனர். காதலர் மண்டியிட்டனர். "நோயறியாது மருந்திட எண்ணினேன். இவ்வீரனின் வியாதி போக்க இவ்வேல்விழியாளே மருந்தானாள்" என்று மகிழ்வோடு மன்னன் கூறி, மாளிகையிலே இருவரும் இருக்கட்டும் ஏவலர் அவர் விரும்பும்போது வேண்டுவதைத் தரட்டும்! நாளைதான் அவர்கள் நமது உலகுக்கு வருவர்; அப்போதுதான் அவர்கள் இருவர் வரலாறும் நாம் கேட்டறிதல் கூறும்; நாம் அவர்கள் நிலைமையை ஒருவாறு அறிவோம்; தேனை மொண்டுண்ணும் தேனீயைக் கலைத்தலோ, கீதத்தின் ரசத்திலே மூழ்கி இருக்கும் இசைவாணனிடம் பேசுவதோ, இயற்கையின் எழிலில் இலயித்திருக்கும் ஓவியக்காரனிடம் சென்று ஓவெனக் கூவுவதோ கூடாதன்றோ! வாழ்க, இந்தக் காதலர்! வளம் பெறுக இவர்கள் வாழ்க!" என்று கூறிவிட்டுப் பணியாளர் சிலரை அமர்த்திவிட்டுச் சென்றுவிட்டான்.

"மன்னன் சென்றுவிட்டான் கண்ணாளா!" என்று மதுரம் பொழிந்தாள் நடனா. "எந்த மன்னன்?" என்று வீரமணி கேட்டானில்லை. "ஆயின், மடிமீது உட்காரு" என்று கூறினான்.

"கண்ணே! நாம் எங்கிருக்கிறோம்?"

"என் பக்கம் நீர்! உன் பக்கம் நான்!"

"ஆமாம்! இது எந்த மண்டலமாக இருந்தால்தான் நமக்கென்ன? நீ இங்கே; உன் பக்கம் நான்! இது ஆனந்தபுரி! ஆமாம், நான் இன்றுவரை தேடித் தேடி வாடினேன். இதோ என் ஆனந்தபுரி.

"பேசாதிரும் அன்பரே! உமது முகத்தைக் கண்டு எவ்வளவு காலமாகிவிட்டது. வாய் திறவாதீர். நான் ஆசை முகத்தைச் சரியாகப் பார்க்க வேண்டும். அந்த மோகனப் புன்னகை, கெம்பீரத் தோற்றம், ஆண்மையை அறிவிக்கும் கண்ணொளி—இவைகளை நான் உண்ணத் தலைப்படும் நேரத்திலே ஒரு பேச்சும் பேசாதீர்."

"தங்கமே! செல்வமே! என் தளிர்க்கொடியே."

உரத்த குரல் மங்கிற்று; தழதழத்த பேச்சு தொடங்கிற்று. பின்னர் உதடுகள் மட்டுமே அசைந்தன. பிறகு அதுவும் இல்லை. இரண்டு உருவங்கள் ஒன்றையொன்று பின்னிக் கொண்டிருக்கும் அற்புதமான சிலையைக் கை தேர்ந்த சித்திரக்காரன் செய்து வைத்தது போன்ற காட்சி. உயிர் ஓவியம் என்பதற்கு ஒரே அத்தாட்சி, அவர்களின் கண்களிலே புரண்ட நீர், இடையிடையே கேட்ட "இச்"சொலி! காதல் உலகிலே அவர்கள் குடியேறினார்கள். சுற்றுமுற்றும் பார்க்க அவர்களுக்கு வேலையில்லை. பேசவுங் கூடவில்லை. ஆம்! சோழ மண்டலத்திலே பிரிந்து, பாண்டிய நாட்டிலே அவர்களின் நிலையை உணர்ந்தோர், அப்பக்கம் அணுகவும் தயங்கினர். உணவு வேண்டுமா என்று கேட்கவும் பயந்தனர். 'இவ்வளவு காதல் கொண்ட இருவர் எப்படித்தான் பிரிந்திருந்தார்களோ? என்னென்ன கஷ்டமோ? எங்கெங்கு தேடினார்களோ?' என்று காவலர்கள் பேசிக் கொண்டனர். நடனாவும், வீரமணியும், அக்காவலருக்குத் தத்தமது முன்னாள் காதற் சம்பவங்களை நினைவிற்குக் கொண்டுவரும் தூண்டுகோலாயினர். நடனாவைக் கண்டு மணியின் முகம் மலர்ந்தது; மணியைத் தழுவிய நடனாவின் நயனம் மலர்ந்தது. இருவரின் ஆனந்தத்தைக் கண்ட, அரண்மனை பூராவிலும், களிப்பு கூத்தாடிற்று. அரண்மனையின் ஆனந்தம், நகருக்குள்ளேயும் நடமாடத் தொடங்கிற்று. கீதம் எழும் இடத்தில் மட்டுமா இன்பமூட்டும்; நந்தவனத்து நறுமணம் நாலு பக்கமும் வீசாதா!

இன்ப அருவியிலே நீந்தி இளங் காதலரின் களிப்பின் படபடப்பு. எங்கும் நிறை நாதமாயிற்று!