உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆதிசேஷனாக நினைத்து ஊக்கத்துடன் உழைத்து வருகிறார். வேதாந்திகள் 'சர்வம் விஷ்ணுமயம் ஜகத்' என்பார்கள். இன்ஸ்பெக்டரோ 'சர்வம் சந்தேகமயம் ஜகத்' என்பார். சிவப்புப் புடவை முதல் சிவப்புக் கழுத்துப்பட்டி ஈறாக சதிக்கூட்ட அங்கத்தினர்களின் சின்னமாகவே கருதுவார். தாடி வைத்த பைராகி முதல் நாவிதனுக்குக் கூலி கொடுக்க விதியில்லாத கூலிக்காரன் வரை தொழில் புரட்சி அங்கத்தினர்கள். இவ்வாறு இவர் தம் ஆழ்ந்த அனுபவத்தால் கண்டுபிடித்த விஷயங்களுடன், எடுத்த கேஸ்கள் எல்லாவற்றிலும் வெற்றிபெற்று வாகையே சூடி வந்திருந்தும், அவரது அந்தராத்மாவின் இலக்ஷியமாகிய சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பதவி இன்னும் இலக்ஷிய உலகிலேயே இருந்துவருகிறது. அடிக்கடி தான் எதிர்பார்த்தும் எட்டமுடியாத சர்க்கிள் இன்ஸ்பெக்டர் உடையுடன் தமது சூக்ஷ்ம சரீரம் நடமாடும் தோற்றமே இவருக்கு மிகுந்த உற்சாகத்தையளித்து வருகிறது.

சாயங்காலம் 5 அல்லது 51/2 மணியிருக்கலாம். இரகசியப் போலீஸ் இன்ஸ்பெக்டர் வித்தல் ராவ், போலீஸ் சூப்பிரண்ட் துரை பங்களாவை நோக்கி தான் வழக்கப்படி செய்யும் புண்ணிய க்ஷேத்திர யாத்திரையை நடத்திக்கொண்டு இருந்தார்.

முன்னறிக்கைகொடாது தன்னை வேட்டையாட வரும் மோட்டார்களுடன் கிளித்தட்டு மறித்துக்கொண்டே சூப்பிரண்ட் துரையவர்களின் பங்களா வாசலைடைந்தார். இதற்குள் சாயங்காலமும் மேகங்களுடன் கூட்டுறவு செய்துகொண்டு வெளிச்சத்தை அதிக மங்கலாக்கிவிட்டன. கண்ணுக்கெட்டிய தூரம் எல்லாத் திசைகளிலும் பார்த்தார். ஒரு மனிதப் பிராணிகூடயில்லை! பிறகு பூமியில் எங்காவது வெடிகுண்டு ஏதேனும் ஒருவேளை மறைத்து வைக்கப்பட்டிருக்கக் கூடுமோவென்று கூர்ந்து கவனித்தார். அப்படி ஒன்றுமில்லை. ஆனால் அவரது தீட்சண்யமான பார்வை ஒரு சிறு துண்டு கடிதத்தின் மீது சென்றது. உடனே பாய்ந்துசென்று வெகு ஜாக்கிரதையாக எடுத்தார். ஹா! என்ன ஆச்சரியம்! அது சிவப்பு இங்கியில் எழுதப்பட்டு இருந்தது. சாதாரண நோட்டுப் புத்தகத்திலிருந்து கிழிக்கப்பட்ட காகிதந்தான். எழுதப்பட்டிருந்த விஷயந்தான் அதிக சந்தேகத்தை உண்டு பண்ணியது.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி துப்பர்க்கு
துப்பாய தூ மழை

என்று இருந்தது. கையெழுத்தையும் அதில் எழுதியிருந்த மாதிரியையும் பார்த்தால் சட்டசபை அங்கத்தினராகவாவது அல்லது சென்னை சர்வகலாசாலை மாணவனாகவாவது இருக்க வேண்டும் என்று ஊகித்தார். ஆம்! எழுதியவருக்கு புரட்சி எண்ணங்கள் முதிர்ந்து பைத்தியம் பிடித்திருக்க வேண்டும்; இல்லாவிட்டால் மந்திரத்தை உச்சாடனம் செய்வதுபோல் தப்பும் தவறுமாக துப்பாக்கி என்ற வார்த்தையை எழுதியிருப்பானா? மழை திடீரென்று வந்து அவரது எழுத்து வேலையைத் தடை செய்திருக்க வேண்டும். பின் ஏன் "தூ மழை" என்று அதையும் எழுதவேண்டும்? யோசிக்க, யோசிக்க,

70

புதுமைப்பித்தன் கதைகள்