உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகல்யை


வேதகாலம்

சிந்து நதி தீரத்திலே...

இப்பொழுதுபோல் அல்ல. செழித்த காடுகள்; புல்வெளிகள்; இடையிடையே சிறு சிறு குடிசைகளில் மனிதக் கூட்டங்கள். எங்கெங்கோ, அதிக நெருக்கமாக, ஜாஸ்தியாக மனிதக் கூட்டங்கள் வசிக்கும் இடம் நகரம் என்ற ஹோதாவில் விளங்கும் - அதில் அரசன் இருப்பான் - அதனால் அது தலைநகர்.

இவ்வளவும் தாண்டி ஜன சஞ்சாரமே இல்லாத பாகம். சிந்து நதி ஹிமயத்தின் மடியைவிட்டுச் சமவெளிக்கு வர ஆரம்பிக்கும் இடம். மரமும் கொடியும் மனிதனின் வெற்றியைக் காணாதவை. சிந்துவின் கன்னிப் பருவம் - நதி களங்கமற்ற உள்ளத்தைப்போல் பாறைகளைத் தழுவிச் சுழித்துச் சிரித்துச் சென்றது.

அங்கே கௌதமருடைய வாசஸ்தலம் சற்று காட்டின் உள்ளே தள்ளி. சிந்துவின் கரைக்கும் குடிசைக்கும் கூப்பிடு தூரம்.

குடிசைக்குப் பக்கத்தில் சிறிது தள்ளி வடக்குப் புறமாகச் செழித்த புல்வெளி. தூரத்திலே ஹிமவானின் பனிச் சிகரம், இவர்களுக்கு எப்பொழுதும் தீங்கு வராமல் கவனிப்பதுபோல் இருந்தது.

கௌதமர் அந்தணர், அதாவது வித்தைக்கும் கலைக்கும் தமது வாழ்க்கையை அர்ப்பணம் செய்துவிட்டவர். அது ஒரு காலம். வாலிபர்களுக்கு - சிறுவர்களுக்கு - வித்தையைப் போதிப்பதில் ஒரு பிரேமை. அதெல்லாம் பழைய கதை.

அப்பொழுது, இந்த அகண்ட உலகத்தில் உள்ள சராசரங்களின் அழகு, அதன் காரணம், அதன் மூலம் இவையெல்லாவற்றையும் அறிய ஓர் ஆர்வம். அதனால்தான் இந்தத் தனியிடத்தில் வந்து நிம்மதியாகத் தமது ஆசையைப் பூர்த்தி செய்து கொள்ளத் தனித்திருக்கிறார். சமூகத்தைவிட்டு விலகித் தமது பத்தினியுடன் இங்கு வசித்து வருகிறார்.


புதுமைப்பித்தன் கதைகள்

131