உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை 1/069

விக்கிமூலம் இலிருந்து

69. மாலை தோன்றினால்!

பாடியவர் : சேகம் பூதனார்.
திணை : முல்லை.
துறை : வினைவயிற் பிரிதலாற்றாளாய தலைவி சொல்லியது.

[(து–வி.) வினைவயிற் பிரிந்து சென்ற கணவன் குறித்த பருவத்தே வாரானாதலை நினைத்து தலைவியின் பிரிவுத் துயரம் பெருகுகின்றது. அதனால் மிக வாடிய அவள், மாலையின் வரவைக் கண்டதும், தன்னுள் கூறிப் புலம்புவது இச் செய்யுள்.]

பல்கதிர் மண்டிலம் பகல்செய்து ஆற்றி
சேய்உயர் பெருவரைச் சென்றுஅவண் மறையப்
பறவை பார்ப்புவயின் அடையப் புறவில்
மாஎருத்து இரலை மடப்பிணை தழுவ
முல்லை முகைவாய் திறப்பப் பல்வயின் 5

தோன்றி தோன்றுபு புதல் விளக்கு அறாஅ
மதர்வை நல்ஆன் மாசுஇல் தெண்மணி
கொடுங்கோற் கோவலர் குழலோடு ஒன்றி
ஐதுவந்து இசைக்கும் அருள்இல் மாலை
ஆள்வினைக்கு அகன்றோர் சென்ற நாட்டும் 10
இனைய வாகித தோன்றின்
வினைவலித்து அமைதல் ஆற்றலர் மன்னே!

பலவான கதிர்களையுடையது ஞாயிற்று மண்டிலம். அம் மண்டிலமானது பகற்பொழுதினைச் செய்து தன் கடமையை முடித்தது. அதன்பின், மிகவுயர்ந்த பெருமலைக்கண் சென்று, அவ்விடத்தே மறைதலையும் செய்தது. பறவைகள் தம்முடைய குஞ்சுகள் இருக்கும் கூடுகளிற்சென்று அங்கே அடைந்தன. காட்டிடத்துள்ள பெரும் பிடரியையுடைய கலைமானானது தன் இளைதான பிணையைத் தழுவியபடியே இன்புறலாயிற்று. முல்லை அரும்புகளும் இதழ் அவிழ்ந்தவாய் மலர்ந்தன. பலவிடங்களிலும் தோன்றிப் பூக்கள் தோன்றின. அவை புதர்கள்தோறும் விளக்கேற்றினாற்போல் விளங்கலாயின. செம்மாப்பையுடைய நல்ல பசுக்களின் குற்றமற்ற தெளிவான மணியோசையானது, வளைந்த கவைக்கோலையுடைய கோவலரது குழலிசையோடும் கலந்ததாய் மெல்லென வந்து இசைக்கின்றது. பிரித்து வருந்தியிருப்பவர்பால் அருளற்றதான இத்தகைய மாலைக்காலமானது. பொருளீட்டிவரும் முயற்சிப் பொருட்டாகப் பிரிந்துபோயின தலைவர் சென்றுள்ள நாட்டினிடத்தேயும் இத் தன்மையுடைத்தாகித் தோன்றினால் நன்றாயிருக்கும். அவரும் வினைக்கண்ணே உறுதி கொண்டு அவ்விடத்துத் தங்கியிருப்பவர் ஆகார். அவ்வாறு இம் மாலை அங்குத் தோன்றாமையாலேதான் என் வாணாளும் இப்படிக் கழிகின்றது போலும்!

கருத்து : மாலை செய்யும் நோயினை அவரும் உணர்ந்திருப்பின், குறித்த பருவத்திலே தவறாது மீண்டிருப்பார் அல்லரோ, என்பதாம்.

சொற்பொருள் : பார்ப்பு –– பறவைக் குஞ்சு. இரலை - கலைமான். தோன்றி – தோன்றிப்பூ; செங்காந்தட்பூ. மதர்வு – செம்மாப்பு. கொடுங்கோல் – முனைக்கண் வளைவுடைய கவைக்கோல்; கோடுதல் – வளைதல்.

விளக்கம் : "பகலெல்லாம். கடமையாற்றிய கதிர் மண்டிலமும் மாலைக்கண் சென்று மறைகின்றது; பறவையினங்கள் குஞ்சுகளைச் சென்று சேர்கின்றன: மான் பிணையைத் தழுவி இன்புறுகின்றது; மாடுகளும் அவற்றை மேய்ப்பாரும் வீடு திரும்புகின்றனர்; அவர்மட்டும் என்னை மறந்தனர்" என வருந்துகின்றாள் தலைவி. 'புதரிடத்து மலர்ந்த செங்காந்தட் பூக்கள் விளக்கு ஏற்றினாற்போலத் தோன்றும் என்றது, அதுவும் மனைவிளக்கு விளங்கும் இல்லத்து நினைவை எழுப்பாதோ' என்றதாம். 'குவியிணர்த் தோன்றி ஒண் பூ அன்ன தொகுசெந் நெற்றிக் கணங்கொள் சேவல்' எனவரும் மதுரைக் கண்ணனாரின் குறுந்தொகைப் பாட்டடிகளும் (குறு. 107, 1-2) தோன்றியின் செவ்வொளிச் சிறப்பைக் காட்டும். 'அருளில் மாலை' என மாலைக் காலத்தைக் குறை கூறினள்; 'அவர்தாம் அருளிலராயினார். உலகுக்கெல்லாம் வாழ்வளிக்கும் இந்த மாலைக் காலமுமோ எனக்கு அருளற்றதாகிக் கொடுமை செய்தல் வேண்டும்" எனக் கூறினளாய் வருந்துகின்றாள் தலைவி.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/069&oldid=1731475" இலிருந்து மீள்விக்கப்பட்டது