உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை 1/078

விக்கிமூலம் இலிருந்து

78. நாம் பிழைத்தோம்!

பாடியோர் : கீரங்கீரனார்.
திணை : நெய்தல்.
துறை : வரைவு மலிந்தது.

[(து–வி.) வரைவிடை வைத்துப் பொருள் தேடி வருவதற்குப் பிரிந்து சென்றோனாகிய தலைவன். வருவதாகக் குறித்துச் சென்ற பருவத்தின்கண் வராமையினால், தலைவியின் வருத்தம் மிகுதியாகின்றது. அவ்வேளை, அவன் வரைவொடு வருதலை அறிந்த தோழி, தலைவிபாற் சென்று, மகிழ்வோடு அதனைக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]

கோட்சுறா வழங்கும் வாட்கேழ் இருங்கழி
மணிஏர் நெய்தல் மாமலர் நிறையப்
பொன்னேர் நுண்தாது புன்னை தூஉம்;
வீழ்தாழ் தாழைப் பூக்கமழ் கானல்,
படர்வந்து நலியும் சுடர்செல் மாலை 5
நோய்மலி பருவரல் நாம்இவண் உய்கம்;
கேட்டிசின் வாழி, தோழி! தெண்கழி
வள்வாய் ஆழி உள்வாய் தோயினும்,
புள்ளுநிமிர்ந் தன்ன பொலம்படைக் கலிமா
வலவன் கோல்உறல் அறியா, 10
உரவுநீர்ச் சேர்ப்பன், தேர்மணிக் குரலே!

தோழி ! நீதான் இனி இன்பமுற்று வாழ்வாயாக! வலிமை வாய்ந்த தேர்ச் சக்கரத்தின் உள்வாயளவுக்கு தெளிந்த கழியிடத்தே அழுந்தப்பெறினும், பறவை பறந்து சென்றாற்போலச் செல்லும் தன்மையினையுடையவும். பொன்னணிகளைப் பூண்டு செருக்கியவுமான குதிரைகள் தம்மைச் செலுத்தும் பாகனின் தாற்றுக்கோல் தம்மேற்பொருந்துதலை அறியாவாய்ச் செல்லும் தன்மையுடைய, வவிய கடல்நீர்ச் சேர்ப்பனது. தேர் வந்துகொண்டிருப்பதை அறிவிக்கும் மணியினது குரலினை, அதோ நீயும் கேட்பாயாக கொல்லும் இயல்பினவான சுறாமீன்கள் திரிந்தபடியிருக்கும் ஒள்ளிய நிறத்தையுடைய கருங்கழியிடத்தே, நீலமணியின் அழகினைக் கொண்ட நெய்தலது சுருமலர்கள் நிறைந்திருக்கும். அம்மலர்கள் நிரம்புமாறு, பொன்னொத்த நுண்ணிய பூந்துகள்களைக் கரையிடத்திருக்கும் புன்னை மரங்கள் தூவிக் கொண்டிருக்கும். விழுதூன்றிய தாழையின் பூக்கள் மணம் கமழ்ந்தபடி விளங்கும் கடற்கரைச் சோலைபிடத்தே மென்மேலாகத் துன்பம் வந்து வருத்துகின்றதான ஞாயிறு சென்று மறையும் மாலைப் பொழுதிலே, காமநோய் மிகுதலாகிய பெருந்துன்பத்தினின்றும் நீங்கினமாய், நாம். இனி இவ்விடத்தே பிழைத்திருந்து வாழ்வோம்—காண்பாயாக!

கருத்து : 'தலைவனின் வரவினாலே இனி நின் பிரிவு நோயாகிய துன்பம் முற்றவும் தீரும்' என்பதாம்.

சொற்பொருள் : கோட்சுறா – கொல்லுதலில் வல்ல சுறாமீன். வழங்கும் – திரியும். வான் – ஒளி. கேழ் – நிறம். வீழ்தாழ் – விழுதுகள் தாழ்ந்த. வள் வாய் – வலிமை வாய்ந்த. புள்ளு நிமிர்ந்தன்ன - பறவை மேலெழுந்து பறத்தலைப்போல பொலம்படை – பொற்படை; குதிரைக்கு அணியும் கண்டையும் பிறவும். கலிமா – செருக்குள்ள குதிரை. கோல் – தாற்றுக்கோல்.

விளக்கம் : 'மாலைப்பொழுதிலே தலைவனது வரவை எதிர்நோக்கியபடி கானற்சோலையிலே காத்திருந்து தளரும் பெருந்துயரம் இனித் தீர்ந்தது; அவன் அதோ வரைவொடு வந்தனன்' என்கின்றாள். 'வள்வாய் ஆழி உள்வாய் தோயினும் புள்ளு நிமிர்ந்தன்ன பொலம்படைக் கலிமா' என்றது. 'தேரின் இயக்கத்தைத் தடுக்கும் தடை உண்டாயினும், அதனையும் பொருட்டாக்காது தம் வலிமையால் நீங்கிப் பறந்து வந்து சேரும் செருக்குடைய குதிரைகள்' என்றதாம். இவ்வாறே தலைவனும் வரைதற்கு இடையிட்ட இடுக்கண்களை எல்லாம் ஒதுக்கிக் குறித்தபடியே வந்து சேரும் தகைமையாளன் ஆயினான் என்றதும் ஆம்.

'வள்வாய் ஆழி உள்வாய் தோயினும்' என்று கூறுவன, அவனைக் கொணர்ந்துதந்த தேரினை வலித்துவந்த குதிரைகளின் உதவிச்செயலை வியந்து போற்றியபடியும் ஆம்.

இறைச்சிகள் : கழியிடத்து நெய்தல் மலரிடைக் கரைக்கண் நின்ற புன்னை பொன்னிறத் தாதினைச் சொரிந்தாற்போலத், தலைவியின் இல்லத்தார் உவக்கத் தலைவனும் வரைபொருளை மிகுதியாகச் சொரிந்து வழங்குவான் என்பதாம்.

(2) அவ்வேளை, வீழ்தாழ் தாழைப்பூக் கானலிடைக் கமழ்தலைப் போலத் தலைவியின் மணச்செய்தியும் ஊர் முழுக்கப் பரந்து சிறப்பெய்தும் என்பதுமாம்.

(3) 'கோட்சுறா வழங்கும் வாட்கேழ் கருங்கழி' என்றது தலைவியைக் காவலுட்படுத்திக் காத்திருக்கும் ஐயன்மாரின் வன்செயலை நினைந்ததாம். அவ்விடத்து, நெய்தல் மலரிடைப் பொன் சொரியும் புன்னை போன்று, தலைவனும் அவரால் ஏதும் துன்புறாதே வந்து தகப்பன்பாற் பொருள் தந்து தலைவியை அவன் கொடுக்க அடைவான் என்பதாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/078&oldid=1731498" இலிருந்து மீள்விக்கப்பட்டது