நற்றிணை 1/087
87. அதுவும் கழிந்ததே!
- பாடியவர் : நக்கண்ணையார்.
- திணை : நெய்தல்.
- துறை : வரைவிடை வைத்துப் பிரிய ஆற்றாளாகிய தலைவி கனாக்கண்டு தோழிக்கு உரைத்தது.
[(து–வி) வரைவினை இடைவைத்து. வரைபொருளின் பொருட்டாகப் பிரிந்து சென்றிருந்தான் தலைவன். பிரிவாற்றாமையினோலே தளர்ந்த தலைவி, ஒரு நாட் பகலிலே, தான் கண்ட கனாவினைத் தன் தோழிக்கு உரைத்து, இவ்வாறு புலம்புகின்றாள்.]
உன்ஊர் மாஅத்த முள்எயிற்று வாவல்
ஓங்கல் அம்சினைத் தூங்குதுயில் பொழுதின்
வெல்போர்ச் சோழர் அழிசிஅம் பெருங்காட்டு
நெல்லிஅம் புளிச்சுவைக் கனவி யாஅங்கு
அதுகழிந் தன்றே தோழி; அவர்நாட்டுப்
5
பனிஅரும்பு உடைந்த பெருந்தாட் புன்னைத்
துறைமேய் இப்பி ஈர்ம்புறத்து உறைக்கும்
சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சியும்
பெருந்தண் கானலும் நினைந்தஅப் பகலே.
ஊரிடத்தே உள்ளதாகிய மாமரத்திலிருக்கும். முட்போன்ற பற்களையுடைய வாவலானது, உயரமான அழகிய ஒரு கிளையினிடத்தே தொங்கியபடி துயில் கொண்ட பொழுதிலே. போர் வெல்லும் சோழர்க்கு உரித்தான அழகிய பெரிதான காட்டினிடத்தேயுள்ள நெல்லியது இனிய புளிச்சுவையினைத் தான் நுகருவதாகக் கனாக்கண்டாற்போன்று, எனக்கு இனிதாயிருந்த அந்தக் கனவின்பமும் சுண் விழித்ததும் நீங்கிப் போயிற்றே!
கருத்து : 'கனவிற் பெற்ற அந்த மகிழ்வையும் விழிப்பில் யான் இழந்திருக்கிறேன்' என்பதாம்.
சொற்பொருள் : மா – மாமரம். வாவல் – வௌவால், ஓங்கல் அஞ்சினை – உயரமான அழகிய கிளை. தூங்குதுயில் – தொங்கிக் கிடந்து துயிலுதல். அழிசி – ஆர்க்காட்டுத் தலைவன். இப்பி – சிப்பி.
விளக்கம் : துறையிடத்தே மேயும் இப்பியினது ஈரிய புறத்தைப் புன்னையின் பூந்தாது உதிர்ந்து அழகுபடுத்தினாற்போல, அவரைப்பற்றிய கனவு நம்மையும் அழகு படுத்தலாயிற்று' என்றனள். 'அதுவும் கழிந்தது' விழித்து பொழுதிற் கனவு மறைதவால். மாங்கிளையிலே தொங்கியபடி தூங்கும் வௌவால், நெடுந்தொலைவிலுள்ள ஆர்க்காட்டுக் காட்டினிடத்துப் புளிப்பான நெல்லிக் கனியை அருந்தினதாகக் கனவு கண்டாற்போலத் தலைவியும் தொலைநாட்டிலுள்ள தலைவனோடு இன்புற்றுக் களித்தாற் போலக் கனாக் கண்டனள் என்க. 'அது கழிந்தன்றே' என்றது, 'அந்தக் கனவு தானும் இல்லாது போயிற்று' என்று கூறிப் புலம்பியதாம். வரை பொருட் பிரிவிடத்துத் தலைவியர் இப்படிக் கனாக் காணுதல் குறுந்தொகைச் செய்யுளினும் கூறப்பட்டுள்ளது (குறுந். 30). 'பொய்வலாளன் மெய்புறன் மரீஇய, வாய்த்த கைப் பொய்க்கனா மருட்ட வேற்றெழுந்து, அமளி தைவந் தனனே' என வருதல் காண்க.
உள்ளுறை : 'துறை மேய் இப்பியது ஈர்ம் புறத்தே புன்னையின் பூந்துகள் வீழ்ந்து அழகுறுத்திய எதிர்பாரா இன்ப நிகழ்ச்சியைப் போன்று, தலைவன், எதிர்பாரா வகையிலே மீண்டுவந்து தன்னைத் தழுவித் தன் துயரத்தை மாற்றானோ?' என்பதாம்.