நற்றிணை 1/095
95. நெஞ்சம் பிணித்தவள்!
- பாடியவர் : கோட்டம்பலவனார்.
- திணை : குறிஞ்சி.
- துறை : தலைமகன் பாங்கற்கு, 'இவ்விடத்து இத்தன்மைத்து' என உரைத்தது.
[[து–வி.) இயற்கைப் புணர்ச்சி பெற்றானாகிய ஒரு தலைவன், பின்னர்ப் பாங்கனின் உதவியினை நாடியவனாக அவனுக்குத் தன் காதல்பற்றி அறிவிப்பதாக அமைந்தது இச் செய்யுள்.]
கழைபாடு இரங்கப் பல்லியம் கறங்க
ஆடுமகள் நடந்த கொடும்புரி நோன்கயிற்று
அதவத் தீங்கனி அன்ன செம்முகத்
துய்த்தலை மந்தி வன்பறழ் தூங்கக்
கழைக்கண் இரும்பொறை ஏறி விசைத்து எழுந்து,
5
குறக்குறு மாக்கள் தாளம் கொட்டும்அக்
குன்றகத் ததுவே, குழுமிளைச் சீறூர்
சீறூரோளே, நாறுமயிர்க் கொடிச்சி,
கொடிச்சி கையகத்ததுவே, பிறர்
விடுத்தற்கு ஆகாது பிணித்தஎன் நெஞ்சே.
10
மூங்கிற் குழலினது இனிய இசையானது ஒலிக்கவும், மற்றும் பலலகையான வாச்சியங்களின் ஒலிமுழக்கமும் முழங்கவுமாகக் கூத்தாடுகின்றாள் ஆடுமகள். அந்த ஆடு மகளானவள், முறுக்கமைந்த புரியையுடைய வலிய கயிற்றின் மேலாகவும் நடந்து செல்வாள். அந்தக் கயிற்றின் மேலாக அத்திப்பழத்தின் இனிய கனியைப்போன்ற செம்முகத்தையும், பஞ்சுத் தலையையுமுடைய மந்தியது வலிய குட்டியொன்று தூங்கியபடி ஆடிக்கொண்டிருக்கும். அதனைக் காணும் குறக்குலத்துச் சிறுவர்கள், அப்பெருமலையிடத்துள்ள மூங்கிலை வளைத்து, அதன் முற்பக்கத்து ஏறிக்கொண்டவராக விசைத்து அதனோடும் மேலெழுந்தபடியே கைத்தாளம் கொட்டி மகிழ்வார்கள். குழுமிய காவற் காட்டை உடையதான தலைவியிருக்கும் சிற்றூரானது அந்தக் குன்றகத்தே உள்ளதாகும். நறுமணக் கூந்தலாளான அந்தக் குறமகள்தான், அச் சிற்றூரிடத்தே வாழ்கின்றாள். அவளுடைய கையகத்தேதான் அவளன்றிப் பிறரானே விடுவித்தற்கு ஏலாதபடி அவளாற் பிணித்துக் கொள்ளப்பட்ட என் நெஞ்சமும் உள்ளதாகும்.
கருத்து : 'என் நெஞ்சம் பிணித்தாளை என்னால் மறத்தற்கு இயலாது' என்பதாம்.
சொற்பொருள் : கழை – மூங்கிற்குழல். இயம் – வாத்தியக் கருவி. இரங்கல் – மெல்லென இசையொலி எழுப்புதல். கறங்கல் – ஒலிமிக்க இசையின் எழுச்சி. பல்லியம் கறங்கல் – கூட்டிசை ஒலித்தல். ஆடுமகள் – கயிற்றில் நடந்து கூத்தாடி மகிழ்விக்கும் ஆடன்மகள்; கழைக்கூத்தி. அதவம் – அத்தி.
விளக்கம் : "ஒன்றைக் குறித்து அமைத்த கயிற்றிடத்தே மற்றொன்று ஆடிநின்று நகைப்பதற்கு இடமாயின தன்மைபோன்று, என் உள்ளத்தே நிழலாடும் தலைவியைக் குறித்து நான் கண்டிருக்கும் காதற்கனவுகளிலே அவளையன்றிப் பிறள் ஒருத்தியை ஏற்றிவைத்து ஆட்டுவித்துக் சுண்டுகளிக்க நீயும் விரும்பினாய் போலும்?" எனப் பாங்கன் தலைவனது நோயது பொருந்தாமையைத் தகுதி காட்டிப்பழிக்கத் தலைவன் கூறுவதாக நுண்பொருள் காணலாம். 'கழை முனையிலேறி விசைத்து மேலெழுந்து ஆடிக்களிக்கும் குறச்சிறாரைப்போலக், கண்வழி உள்ளத்தினுள் ஏறி நின்று அவள் ஆடிக்களிக்க யான் நோகின்றேன். அதுகண்டு நீயும் மகிழ்கின்றாயோ' என்பதும் ஆம்.
இறைச்சி : கூத்தி நடந்த கயிற்றில் மந்தி வன்பறழ் தூங்கியாடுமாறு போல, ஒழுக்கத் தகுதியான் என்னை திண்மையாக்கிக் கொண்டிருந்த நிலையினும், என்னுளத்தே அவள் புகுந்து ஆட்டமிடுகின்றாள் எனவும், அது கண்டு நகைத்துக் களிக்கும் குறச்சிறு மகாரைப்போல. நீயும் என் துயரை அறியாயாய்ச் சிரித்தனை எனவும் சொல்வதாகக் கொள்க.மேற்கோள் : 'நின்னாற் காணப்பட்டாள் எவ்விடத்தாள்? எத்தன்மையாள்?' எனப் பாங்கன் வினவுதலும், அதற்குத் தலைமகன் இடமும் உறவும் கூறுதல்' எனக் 'குற்றங் காட்டிய வாயில் பெட்பினும்' என்னும் துறைக்கு இதனைக் காட்டுவர் இளம்பூரணனார் (தொல். பொருள். சூ. 99 உரை). இதற்கே ஆசிரியர் நச்சினார்க்கினியரும் எடுத்துக் காட்டுவர் (தொல். பொருள். சூ. 102 உரை.)