உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை 1/102

விக்கிமூலம் இலிருந்து

102. காவலாயினாள்!

பாடியவர் : செம்பியனார்.
திணை : குறிஞ்சி.
துறை : காமம் மிக்க கழிபடர் கிளவி.

[(து–வி.) வரை பொருட்குப் பிரிந்தானாகிய காதலனின் வரவு குறித்த எல்லையைக் கடந்து நீட்டித்தலால், காதலியின் காமநோய் வரைகடந்து பெருகுகிறது; நலிவும் பெரிதாகின்றது. அவள் கிள்ளையை நோக்கித் தன் குறையைச் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]

கொடுங்குரற் குறைத்த செவ்வாய்ப் பைங்கிளி
அஞ்சல் ஓம்பி, ஆர்பதம் கொண்டு,
நின்குறை முடித்த பின்றை, என்குறை
செய்தல் வேண்டுமால்; கைதொழுது இரப்பன்:
பல்கோட் பலவின் சாரல் அவர்நாட்டு 5
நின்கிளை மருங்கின் சேறி ஆயின்,
அம்மலை கிழவோற்கு உரைமதி—இம்மலைக்
கானக் குறவர் மடமகள்
ஏனக் காவல் ஆயினள் எனவே.

முற்றினமையாலே தலைவளைந்த தினைக்கதிர்களைக் கொய்து உண்ணுகின்ற சிவந்த வாயினையுடைய பசிய கிளியே! நின் களவினாலே நினக்கு இடருண்டாமோ என்னும் அச்சத்தை விட்டனையாய், நினக்கு வேண்டுமளவுக்குத் தினையை உண்டுபோவாயாக, பசியாகிய நின் குறையினை அங்ஙனமாக முடித்துக்கொண்ட பின்னர். என் குறையினைத் தீர்த்தற்கான ஒன்றனையும் நீ செய்தல் வேண்டும். அதற்காக நின்னைக் கைதொழுது வேண்டுகின்றேன். பலவான காய்களைக் கொண்ட பலாமரங்கள் மிகுந்த சாரலையுடைய அவரது நாட்டிடத்தேயுள்ள, நின் சுற்றத்தின் பக்கலிற் செல்வாய் ஆயின். 'இம் மலைக்கண்ணுள்ள கானக்குறவரது இளமகளாகிய நின் காதலி, மீட்டும் தினைப்புனம் காக்கும் நிலையினளாக ஆயினாள்' என்று அம் மலைக்கு உரியவராகிய அவரிடத்தே சென்று சொல்வாயாக!

கருத்து : 'எனக்காகக் கிளியே நீயும் அவரிடத்தே தூது செல்வாயாக' என்பதாம்.

சொற்பொருள் : கொடுங் குரல் – வளைந்த தினைக் கதிர். குறைத்த – ஒடித்துக்கொண்ட, செவ்வாய் – சிவந்த அலகு. 'குறை' கிளிக்குப் பசியும். தலைவிக்குப் பிரிவுப் பெருநோயும். ஆர்பதம் கொள்ளல் – வேண்டுமளவுக்கு உண்டு பசிதீர்த்தல்.

விளக்கம் : 'ஏனல் காவல் ஆயினள்' எனச் சொல்க என்றதனால், பகற்குறி இடையீடுபட்டதனால் உண்டாய பெருநோய் என்பது விளங்கும். 'அஞ்சல் ஓம்பி, ஆர்பதம் கொண்டு, நின் குறை முடித்த பின்றை' என்றது, கிளிக்குத் தான் செய்யும் உபகாரத்தைக் கூறியதாம். 'கை தொழுது இரப்பல்' என்றது. நன்றிக் கடனாக அல்லாமல், தன் பொருட்டு இரக்கமுற்றேனும் சென்று உரைத்தல் வேண்டுமெனக் கூறுவதாம். 'நின் கிளை மருங்கின் சேறியாயின்' என்றது, 'செல்லுங் காலத்து அவரது கிளையாகிய தன் நினைவு எழுமாதலின், மறவாது சென்று உரைத்தல் கூடும்' என்பதற்காம். 'பல்கோட் பலவின் சாரல் அவர் நாட்டு' என்றது, அங்குச் சேறின் நினக்குப் பலாப்பழம் உண்ணக் கிடைத்தலும் வாய்ப்பதாகும் என ஆசை காட்டியதாம்.


இறைச்சி : 'பல்கோட் பலவின் சாரல்' என்றது, "கலந்தாரை மறந்து கைவிட்ட கொடியாரது நாட்டுச் சாரலாயிருந்தும், அதுதான் வளமுடைத்தாகித் தோற்றுவது எதனாலோ?" என்ற வியப்பினை உள்பொருளாக்கிக் கூறியதாம்.

மேற்கோள் : 'பகற்குறிக்கண் தலைவன் நீட ஆற்றாது தோழிக்குக் கூறியது' எனக் காட்டுவர் நச்சினார்க்கினியர் (தொல். களவு.சூ. 111 உரை மேற்கோள்). இங்ஙனமாயின், கிளியை நோக்கி உரைப்பாள் போலத் தோழிக்குத் தன் துயரத்தைக் கூறி, அவளது உதவியை விரும்பித் தலைவி கூறியதாகக் கொள்க.

வேறு பாடம் : சொல்லல் வேண்டுமால்!

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/102&oldid=1731571" இலிருந்து மீள்விக்கப்பட்டது