உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை 1/107

விக்கிமூலம் இலிருந்து

107. நினைக்குந்தோறும் நகுவேன்

பாடியவர் : .........
திணை : பாலை.
துறை : பிரிவிடை மெலிந்த தலைவி தோழிக்குச் சொல்லியது.

[(து.வி.) தலைவனது பிரிவினுக்கு ஆற்றாதாளாய் நலிவுற்றிருந்த தலைவியைத் தேற்றும் பொருட்டாகத் தோழி சில கூறவும், அவளுக்குந் தலைவி தனது நிலையைக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது]

உள்ளுதொறும் நகுவேன் தோழி! வள்ளுகிர்ப்
பிடிபிளந் திட்ட நார்இல் வெண்கோட்டுக்

கொடிறுபோல் காய வால்இணர்ப் பாலை
செல்வளி தூக்கலின் இலைநீர் நெற்றம்
கல்லிழி அருவியின் ஒல்லென் ஒலிக்கும் 5
புல்லிலை ஓமைய புலிவழங்கு அத்தம்
சென்ற காதலர் வழிவழிப் பட்ட
நெஞ்சே நல்வினைப் பாற்றே; ஈண்டு ஒழிந்து
ஆனாக் கௌவை மலைந்த
யானே தோழி! நொய்ப்பா லேனே. 10

தோழீ! பெருத்த நகங்களைக் கொண்ட பிடியானது பிளந்து போட்ட நாரற்ற வெள்ளிய கிளைகள் பற்றுக் குறடுகளைப் போலக் காய்ந்து கிடக்க, வெள்ளிய பூங்கொத்துக்களையுடைய வெள்ளிலைப் பாலை மரமானது. செல்லுந்தொழிலதான காற்று அசைத்தலினாலே தன்னிடத்துள்ள இலைகளற்றுப்போய்க் காணப்படும். தன் நெற்றுக்களை, மலையிடத்திருந்து வீழ்கின்ற அருவியைப்போல ஒல்லென்ற ஒவியுடன் ஒலித்துக் கொண்டுமிருக்கும், புல்லிய இலைகளைக் கொண்ட ஓமை மரங்களைக் கொண்டதும், புலியினது நடமாட்டத்தைக் கொண்டதுமான அத்தகைய காட்டு வழியிலே சென்றவரான நமது காதலரது வழியிடத்தேயே, தானும் தொடர்ந்து போயினதான நம் நெஞ்சமே நல்வினைப் பேற்றைப் பெற்றதாகும். இவ்விடத்தேயாக அவரை நீங்கிக் கிடந்து, அடங்காத பழிசொற்களால் சூழப்பெற்ற யான் மட்டுமே நோய்ப்பட்டுத் தீவினைப் பாலினள் ஆயினேன். இதனை நினைக்குந்தோறும் யான் நகுவேன்!

கருத்து : 'எனதான நெஞ்சமும் என்னைக் கைவிட்டு அவரோடு சென்றது; இனி யான் எங்ஙனம் உய்வேன்?' என்றதாம்.

சொற்பொருள் : வள்உகிர் – பெரிதான நகம். கொடிறு –குறடு. செல் வளி – செல்லும் தொழிலதான காற்று. செற்றம் - நெற்று, கௌவை – பழிச்சொல்; 'இவள் நலியத் தீவினையாற்றிளான் கொடியனே காண்' என்றெழும் சொல். 'நோய்' என்றது பிரிவினாலே வந்தடைந்த காமநோயினை.

விளக்கம் : தன்னையும் தன் நெஞ்சையும் வேறுபடுத்தி, 'நெஞ்சம் நல்வினையாற்றும்' எனவும், 'தான் தீ வினையாட்டி' எனவும் கூறும் காதற்பாங்கு சிறப்புடையதாகும். வெட்பாலை, யா ஆகிய மரத்தின் பட்டைகளை உரித்துத் தின்பது யானையது இயல்பு இதனைப், 'பிடி பசிகளை இய பெருங்கை வேழம் மென்சினை யாஅம் பொளிக்கும்' (குறு-37 2-3) எனவரும் சான்றோர் கூற்றாலும் அறியலாம். வாகை நெற்றுப் போன்றே வெட்பாலை தெற்றும் ஒலிக்கும் என்பதனையும் இதனால் உணரலாம். பாலை நெற்றினது ஒலியானது அருவியின் இன்னொவி போலத் தொலைவிலுள்ளார்க்கு மயக்கந் தருவதுபோல், தன்னுடைய நெஞ்சத்துயரையும் தோழி சரிவர உணராளாய் மயங்கிக் கூறுபவளாயினள் என்பதுமாம்.

தன் நெஞ்சமே தனக்குத் துணையாக இராதபோது. தோழியோ தனக்குத் துணையாகித் தன் வருத்தத்தை மாற்றக்கூடியவுள் எனத் தோழியை நொந்துகொண்டதுமாம். 'நல்வினை செய்தார் நலமுறுவர்' என்னும் விதியினைக் காட்டுவாளாகித் தன் நெஞ்சினையும் தன்னையும் வேறுபடுத்திக்கூறி வருந்துகின்றாள் தலைவி.

உள்ளுறை : பிடி பாலையை உரித்து உண்டு கைவிட்டுப் போனதுபோலத் தலைவனும் தலைவியது நலத்தையுண்டு அவள் வாடி மெலிந்தழியுமாறு கைவிட்டுப் போயினன் என்பதாம். வளி தாக்க ஒலிசெய்யும் நெற்றத்தின் தன்மை போலக் காமநோயால் அலைக்கப்பட்டுப் புலம்பும் தன் புலம்பலும் பிறரால் இன்னொலியாகக் கருதப்படும் மயக்கத்தைத் தருவதாயிற்று என்பதுமாம். இதனைக் கற்புக்காலத்துப் பிரிவாகவும் கொள்வர்; கொள்ளல் சிறந்த பொருள்நலம் தருவதுமாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/107&oldid=1731600" இலிருந்து மீள்விக்கப்பட்டது