நற்றிணை 1/117
117. பன்னாள் வாழலென்!
- பாடியவர் : குன்றியனார்.
- திணை : நெய்தல்.
- துறை : வரைவு நீட ஆற்றாளாய தலைவி வன்புறை எதிரழிந்து சொல்லியது; சிறைப்புறமும் ஆம்.
[(து–வி.) வரைந்து வருவதாகத் தலைவன் குறித்துச் சென்ற நாளின் எல்லை கழிந்துபோகத், தலைவியின் காமநோய் மிகுதியாகின்றது. அதனைத் தணிக்கக் கருதிய தலைவியின் தோழி, 'அவர்தான் சொற்பிழையாராய் விரைய வருவர்' என வற்புறுத்திக் கூறுகின்றாள். அவளுக்குத் தலைவி கூறுவதாக அமைந்தது இது. (2) தலைவன் சிறைப்புறத்தானாகக் கேட்டு வரைவுக்கு விரையுமாறு கூறுவது சிறைப்புறம் ஆகும்.]
பெருங்கடல் முழங்கக் கானல் மலர
இருங்கழி ஓதம் இல்இறந்து மலிர
வள்ளிதழ் நெய்தல் கூம்பப் புள்ளுடன்
கமழ்பூம் பொதும்பர்க் கட்சி சேரச்
செல்சுடர் மழுங்கச் சிவந்துவாங்கு மண்டிலம்
5
கல்சேர்பு நண்ணிப் படர்அடைபு நடுங்கப்
புலம்பொடு வந்த புன்கண் மாலை
அன்னார் உன்னார் கழியின் பல்நாள்
வாழலென் வாழி தோழி! என்கண்
பிணிபிறி தாகக் கூறுவர்;
பழிபிறி தாகல் பண்புமார் அன்றே
10
தோழீ, நீ வாழ்வாயாக! பெரிதான கடலும் முழக்கம் இடுகின்றது. கானற் சோலைகளுள் எம்மருங்கும் புதுப்பூக்கள் மலர்ந்திருக்கின்றன. கரிய கழியிடத்தினது நீர்ப்பெருக்கம் நம்முடைய வீட்டின் எல்லையைக் கடந்தும் வந்துள்ளது. வளவிய இதழ்களை உடையவான நெய்தல் மலர்களும் குவிந்துவிட்டன. கடற்புட்கள் ஒருசேர மணங்கமழும் மலர்ச்சோலையிடத்தே உள்ளவான தத்தம் கூடுகளிற் சென்று சேர்கின்றன. மறைகின்றதான மாலைக் கதிரவனும் தன் ஒளிமழுங்கச் சிவப்புற்றனனாய், வளைவான வானமண்டிலத்திடத்தே மலைப் பின்னாகச் செல்லுதலை நெருங்கினனாகத் துன்பமடைந்து நடுங்குகின்றனன். என்றன் தனிமைத் துயரோடு துயரைச் சேர்ப்பதாக வந்துள்ள புன்கண்மையினையுடைய மாலைப் பொழுதும் இதுவாகும். நம்மைப் பிரிந்து அவ்விடத்தினராயிருப்பவரான நம் தலைவர்தாம், இனியும் என்னை நினையாதவராகி அவ் விடத்தவராகவே பிரிந்திருப்பாராயின் அதனைப் பொறுத்து யான் இனியும் பலநாட்கள் வாழ்ந்திருக்க மாட்டேன். என்கண் வந்துற்ற பிணியினைப் பிறிதொன்றாகச் கருதிப் பலரும் பலவாறாகக் கூறுவர். அங்ஙனம் பழிதான் ஒன்றிருக்கப் பிறிதாகக் கூறப்படுவதற்கு நாமே காரணமாகுதல் நம் பண்புக்குப் பொருந்துவது ஆகாதல்லவோ?
கருத்து : 'தலைவரை விரைந்து மீளவும் அடைந்தாலன்றி, என்னைப்பற்றிய நோய் தீராது' என்பதாம்.
சொற்பொருள் : பெருங்கடல் – பெரும்பரப்பினதாகிய கடல். கானல் –கடற்கரைச் சோலை. மலிர – நிறைந்து பெருக. வள்ளிதழ் – வளவிய இதழ். கூம்புதல் – குவிதல். புள் – கடற்புள். பொதும்பர் – பூஞ்சோலை. வாங்கு மண்டிலம் – வளைந்த வான மண்டிலம். கல் – மலை. நண்ணி – அடைந்து. புன்கண் – சிறுமை.
விளக்கம் : 'தொழிலாற்றிய கதிரும் மாலையில் அத்தமன கிரியைச் சென்றடைகின்றது. கடற்புட்களும் கூடுகளைச் சென்று சேர்கின்றன; அவர்தாம் என்பால் வந்தனரில்லை' எனப் பேதுற்றுப் புலம்புகின்றாள் தலைவி. 'கானல் மலர' எனவும், 'கழி ஓதம் இல்லிறந்து பெருக' எனவும், குறித்துச் சென்ற கார்காலம் வந்துற்றதனைக் கூறுகின்றனள். 'படர் அடைபு நடுங்கப் புலம்பொடு வந்த புன்கண் மாலை' எனத் தலைவிக்கு உரைப்பினும் பொருந்தும். இரு துறைகட்கும் பொருத்திப் பொருள் கொள்க. பழி பிறிது ஆகல் பண்பன்று என்றது, தம்முடைய மறைப்பினாலே அணங்குதலைச் செய்யாத முருகிற்குப் பழியுண்டாதலைக் கருதிக் கூறுவதாம். 'அன்னார்' என்றது. பிரிவுத் துயரைப் பொறாளாய், அவன்பால் அயன்மை காட்டிக் கூறியதாகும். 'பன்னாள் வாழலென்' என்றது, 'இன்னாள் வாழ்வல்; அதற்குள் அவனை என்பால் வரச்செய்க' என வேண்டுவதுமாகும்.