உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை 1/125

விக்கிமூலம் இலிருந்து

125. மெல்லச் செல்வர்!

பாடியவர் : ......
திணை : குறிஞ்சி,
துறை: வரைவு நீட்டிப்ப ஆற்றாளாய தலைவியைக் தோழி வற்புறுத்தியது.
[(து–வி) தலைவன், வரையாது, இரவுங் குறியிடைத் தலைவியைப் பெற்று இன்புறுதலே சுருத்தினனாக ஒழுகி வருகின்றான். அதனை நினைத்து வருந்தும் தலைவிக்கு, அவன் அவளை விரைந்து வந்து மணந்துகொள்வான் எனக் கூறி, அவ் வருத்தத்தை மாற்றுதற்கு முயலுகின்றாள் தோழி.]

'இரைதேர் எண்கின் பகுவாய் ஏற்றை
கொடுவரிப் புற்றம் வாய்ப்ப வாங்கி.
நல்லரா நடுங்க உரறிக் கொல்லன்
ஊதுலைக் குருகின் உள் உயிர்த்து, அகழும்
நடுநாள் வருதல் அஞ்சுதும் யாம்' என, 5
வரைந்து வரல் இரக்குவம் ஆயின், நம்மலை
நல்நாள் வதுவை கூடி நீடுஇன்று
நம்மொடு செல்வர்மன் தோழி! மெல்ல
வேங்கைக் கண்ணியர் எருதுஎறி களமர்
நிலம்கண் டன்ன அகன்கண் பாசறை 10
மென்தினை நெடும்போர் புரிமார்
துஞ்சுகளிறு எடுப்பும்தம் பெருங்கல் நாட்டே.

தோழீ! இரையினை விரும்பித் திரிகின்ற அகன்ற வாயையுடைய ஆண்கரடியானது, வளைந்த வரிகளைக் கொண்ட புற்றத்தினை வாய்ப்பாகப் பெயர்க்கும். அப்புற்றத்தினுள்ளே குடியிருக்கும் நல்லபாம்பு நடுக்கங் கொள்ளுமாறு முழக்கமிடும் கொல்லனது ஊதுகின்ற உலையினது மூக்கைப்போலச் கடுமூச்செறிந்தபடி தோண்டிக்கொண்டுமிருக்கும். அத்தகைய இரவின் நடுயாமத்தே, நீயிரும் அவ் வழியூடு வருவீர், 'அங்ஙனம் வருதலை நினைத்து யாம் பெரிதும் அஞ்சுகின்றோம்' என்று கூறி, இனி வரைந்து வருதலை அவனிடத்தே நாமும் வேண்டுவோம். அங்ஙனம் வேண்டுவோமாயின், நம் மலையிடத்தே, நல்ல நாளிலே, நம்மோடு வதுவை கூடுதலையும் அவர் நிகழச் செய்வர். அதன்பின், மேலும் காலத்தை நீட்டிக்கவிடாதாராய், வேங்கைமலர்ச் கண்ணிகளைச் சூடியவரான குறவர்கள், எருதுகளை ஓட்டிக் கதிர்களைத் துவைக்கும் உழவர்களது வயற்புறத்திற் காணுமாறுபோல, அகன்ற இடத்தையுடைய பாறையிடத்தே மென்தினையின் நெடிய போரினைத் துவைக்கும் பொருட்டாகத், தூங்கியிருக்கும் களிறுகளை எழுப்பிக்கொண்டிருக்கும் தன்மையுடைய தம்முடைய பெரிதான மலைநாட்டிடத்திற்கு, நம்மோடும் மெல்லச் சென்று சேர்தலையும் செய்வர் காண்!

கருத்து : 'நின்னை மணந்து தம்முடன் தம் வீட்டிற்கும் அழைத்துக் கொண்டு செல்வார் தலைவர்; ஆதலின் வருத்தமுறாதே' என்பதாம்.

சொற்பொருள் : எண்கு – கரடி. பகுவாய் – அகன்ற வாய்; பிளத்த வாயுமாம். புற்றம் – புற்று வாய்ப்ப. வாங்கல் – இரை வாய்க்குமாறு பெயர்த்துத் தள்ளுதல். உரறல் – முழங்குதல். நடுநாள் – இரவின் நடுயாமம். வதுவை – திருமணம். வேங்கைக் கண்ணி – வேங்கைப் பூக்களால் தொடுக்கப்பெற்ற கண்ணி.

விளக்கம் : 'நடுநாள் வருதல் அஞ்சதும் யாம்' என்று கூறுதல், இரவுக்குறியினாள் வரும் ஏதத்திற்கு அஞ்சினேம் எனப் புணர்வுமறுத்தல் ஆகும். 'நீடு இன்று என்றது' நாளையே எனவும், அடுத்துவரும் நன்னாளில் எனவும் பொருள் தரும். 'தினையைப் போர் அடித்தற்குக் குறவர்கள் தூங்கும் களிறுகளை எழுப்புகின்ற நாடு' என்றது, தலைவனது நாட்டின் பெருவளத்தைக் கூறியதாம். 'நல் நாள் வதுவை கூடி' என்றது, நல்ல நாளினைத் தேர்ந்தே வதுவைக் கூட்டும் வழக்கத்தை உணர்த்தும்.

உள்ளுறை : 'தூங்கும் களிறுகளை எழுப்பிப் பணி கொள்ளும் குறவர்களைப்போல, யாமும் வரைதலிற் கருத்துச் செல்லாதிருக்கும் தலைவனிடத்து, அக் கருத்தினை எழச் செய்து, மணமாகிய நற்பயனைப் பெறுவேம் என்பதாம்.

இறைச்சி : கரடி புற்றிடத்துப் பாம்பினை நடுங்கி ஓடச் செய்து, தான் விரும்பிய புற்றாஞ்சோறாகிய இரையினைக் கைக் கொண்டு இன்புறுதலைப் போல, அவனோடு மணம்பெற்றுக் கூடியதும், நின் பசலை நோயை மாற்றி, நின்னைக் கூடி அவனும் இன்புற்று, நினக்கும் இன்பரு செய்வான் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/125&oldid=1731695" இலிருந்து மீள்விக்கப்பட்டது