உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை 1/134

விக்கிமூலம் இலிருந்து

134. இனிது தலைப்படும்!

பாடியவர் : ......
திணை : குறிஞ்சி.
துறை : 'இற்செறிப்பார் என ஆற்றாளாய தலைவியை, 'அஃதிலார்' என்பதுபடத் தோழி சொல்லியது.
[(து–வி) தலைவன் பிரிவு நீட்டிக்கத் தலைவியின் மேனி வேறுபாடு அடைகின்றது அதனைத் தாய் அறிந்து இற்செறிப்பாளோ எனத் தவைவி அஞ்சுகின்றபோது, அவ்வாறு செறிப்பாரிலர் எனத் தோழி கூறுவதாக அமைந்தது இதுவாகும்.]

'இனிதின் இனிது தலைப்படும்' என்பது,
இதுகொல்? வாழி, தோழி! காதலர்
வருகுறி செய்த வரையகச் சிறுதினைச்
செவ்வாய்ப் பாசினம் கடீஇயர், 'கொடிச்சி!
அவ்வாய்த் தட்டையொடு அவணை ஆக!' என, 5
ஏயள்மன் யாயும்; நுந்தை, 'வாழியர்,
அம்மா மேனி நிரைதொடிக் குறுமகள்!
செல்லா யோ:நின் முள்எயிறு உண்கு' என,
மெல்லிய இனிய கூறலின், யான்அஃது
ஒல்லேன் போல உரையா டுவலே! 10

தோழீ. வாழ்வாயாக! காதலர் வருவதற்கான குறியீனைச் செய்த, வரையகத்தேயுள்ள சிறுநினைப் பயிரினைச் செவ்விய வாயினையுடைய பசுங்கிளிக் கூட்டம் கவர்ந்து போகா வண்ணம், அவற்றை ஓட்டும் பொருட்டாகக் 'கொடிச்சி! அழகமைந்த கிளிகடி கருவியாகிய தட்டையை எடுத்துக் கொண்டளையாய், நீயும் அவ்விடத்திற்குச் செல்வாயாக' என்று, அன்னையும் மிகுதியாகப் பன்முறை ஏவினள். தந்தையும் 'நீ புனத்திற்குச் சென்றிலையோ? அழகிய மாமை நிறத்தைப் பெற்ற மேனியினையும், நிறைத்த தொடிகளையும் கொண்ட இளமகளே! நீ வாழ்க! நின் முள் எயிற்றிடத்தே முத்தங் கொள்வேன்' என்று, மெல்லிதான இனியபல சொற்களைக் கூறினன் அதனாலே யான் அதற்கு இசையமாட்டேன் போலவும், பொய்யாகப் பலவும் உரையாடினேன். ஆகலின், இனித் தினைப்புனங்காவல் நமக்கு இனிமை தருவதாக இனிதாக வந்தெய்தும் என்று நாம் நினைத்துக் கொண்டதும் இப்படி வாய்ப்பதுதானோ?

கருத்து : 'இற்செறிப்புச் செய்யார் இல்லத்தார்' என்பதாம்.

சொற்பொருள் : இனிதின் இனிது – இனிதினும் இனிது; மிகவினிது. தலைப்படும் – வந்தெய்தும். பாசினம் – பசிய கிளியினம். தட்டை – கிளிகடி கருவி, ஏயள் – ஏவினள். முள் எயிறு – முள்ளனைய சிறுபல். இனிய – இனிய சொற்களை. ஒல்வேன் போல – காவற்கு ஏகமாட்டேன் போல.

விளக்கம் : பன்முறை ஏவினதால் தாய் ஐயுற்றிலள்: தந்தை மெல்லிய இனிய கூறலால், அவனும் ஐயுற்றிலன் என்பது விளங்கும், தினை கவரும் கிளியை ஓட்டுதற்குச் செல்க என ஏவியதனால்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/134&oldid=1731716" இலிருந்து மீள்விக்கப்பட்டது