உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை 1/161

விக்கிமூலம் இலிருந்து

161. புள் அறிவித்தவோ?

பாடியவர் :...
திணை : முல்லை
துறை : வினைமுற்றிப் பெயரும் தலைவன், தேர்ப்பாகன் கேட்பச் சொல்லியது.

[(து–வி) வேந்துவினைமேற் சென்றானாகிய தலைவன் அவ்வினையை முடித்தபின்னர் வீடு நோக்கி மீண்டும் வருங்காலத்தே. தேரினை விரையச் செலுத்துமாறு தோப்பாகனுக்கு உரைப்பதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]

இறையும் அருந்தொழில் முடித்தெனப் பொறைய
கண்போல் நீலம் சுனைதொறும் மலர
வீத்தர் வேங்கைய வியல்நெடும் புறவின்
இம்மென் பறவை ஈண்டுகிளை இரிய
நெடுந்தெரு அன்ன நேர்கொள் நெடுவழி 5

இளையர் ஏகுவனர் பரிப்பு வளையெனக்
காந்தள் வள்ளிதழ் கவிகுளம்பு அறுப்பத்
தோள்வலி யாப்ப ஈண்டுநம் வரவினைப்
புள்அறி வுறீஇயின கொல்லோ தெள்ளிதின்
காதல் கெழுமிய நலத்தள், ஏதில் 10
புதல்வற் காட்டிப் பொய்க்கும்
திதலை அல்குல் தேமொழி யாட்கே?

நம்முடைய இறையும் அருந்தொழிலாகிய போர் வினையை முடித்தனன். மலையிடத்துச் சுனைதொறும் மாதரது கண்களைப்போலத் தோற்றும் நிலப்பூக்கள் மலந்துள்ளன. அகன்ற நெடிய காட்டிடத்தே மலருதிர்ந்து பரவுகின்ற வேங்கைமரங்கள் விளங்குகின்றன. இம்மென ஒலிமிழற்றும் வண்டுகளினது நெருங்கிய கூட்டமெல்லாம் அஞ்சி ஓடுகின்றன. 'நெடுந்தெரு' என்னும் தெருவைப் போன்ற நேரிதான தன்மை கொண்ட நெடிய வழியிடையே செல்லும் ஏவல் இளையர் பலரும் தங்கிக் களைப்பாறிய பின்னர்த் தம் செலவினை மேற்கொள்வாராக! வெண் காந்தளின் வளவிய இதழ்களைக் குதிரைகளின் கவிந்த குளம்புகள் மிதித்துச் சங்குகள்போலத் தோற்றுமாறு அறுக்குமாக! தோள்களிலே வலிமை பிணித்துக் கொள்ளுமாறு நெருங்கிவருகின்ற நம் வரவினைப் புள்ளினம் நிமித்தங்காட்டி அறிவுறுத்தினவோ? தெளிவாக நம்பாற் காதல் பொருந்திய நலத்தை உடையவளாக, யாதுமல்லாத ஒன்றினைப் புதல்வனுக்குக் காட்டியபடி பொய் கூறி, அவனைத் தேற்றியபடியே இருப்பாள் அவள்! திதலை படர்ந்த அல்குல் தடத்தையும். இனிய சொற்களையும் உடையாளான அவளுக்கு நம் வருகையை முன்னர்ச் சென்று அறிவித்தனதாம் யாவையோ?

கருத்து : 'நம் வரவை எதிர்பார்த்து ஏங்கியிருக்கும் தலைவியிடத்தே விரையச் சென்று சேருமாறு, தேரினை இன்னும் கடிதாகச் செலுத்துக' என்பதாம்.

சொற்பொருள் : இறை – அரசன் அருந்தொழில் – போர்த் தொழில், பொறை – பொற்றை; மலை. நீலம் – நீலப்பூ; குவளையும் ஆம். வீ - பூ. புறவு – காடு. இளையர் ஏவலிளையர்; போர் மறவரான இளையரும் ஆம். நெடுத்தெரு – நெடிதான தெரு; நெடுஞ்சாலை போல நேரிதாகச் செல்லும் தெரு; ஓர் ஊரும் ஆம்; அவ்வூர் சோணாட்டது என்பர். பரிப்ப – தங்கிச் செல்ல.

விளக்கம் : பிரிவுத் துயரத்தால் மனம் வருந்தினும், அவள் ஆற்றியிருக்கும் திறனுடையாளாய் விளங்குவாள் என்பதனைக் 'காதல் கெழுமிய நலத்தள், ஏதின் புதல்வற் காட்டிப் பொய்க்கும், திதலை அல்குல் தேமொழியாள்' என்றனன். 'பொய்க்கும்' என்றது, 'தந்தை வருவார்; அதோ காக்கை கரைவது காண்' என்றாற்போலச் சொல்லுதல். தன் ஆர்வத்தைப் புதல்வன்பால் ஏற்றிக் காட்டிப் பொய்த்ததும் ஆம். முற்படச் சென்று அறிவிக்குமாறு விடுத்த இளையர் நடுவழியில் களைப்பாறியபடி தங்கியிருக்கத், தான் அவர்கட்கு முன்பாகவே வந்தடைந்த தலைவன், தேரினை அத்துணை விரைவாகச் செலுத்திய பாகனை இப்படிக் கூறிப் பாராட்டுகின்றனன் காந்தட் பூக்கள் உடைந்த சங்குகளைப் போலத் தோற்றுவனவாம்; இதனை 'உடைவளை கடுப்ப மலர்ந்த காந்தள்' எனவரும் (புறம்.90) ஔவையார் பாட்டானும் அறியலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/161&oldid=1731783" இலிருந்து மீள்விக்கப்பட்டது