உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை 1/163

விக்கிமூலம் இலிருந்து

163. களைப்பாறுக!

பாடியவர் : ......
திணை : நெய்தல்.
துறை : வரைவு மலிந்து சொல்லியது.

[(து–வி.) தலைவன் வரைவொடு வந்தனன். அதனைக் கண்ட மகிழ்ச்சியினாலே, தோழி தலைவிபாற் சென்று கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]

உயிர்த்தன வாகுக அளிய நாளும்
அயிர்த்துகள் முகந்த ஆனா ஊதையொடு
எல்லியும் இரவும் என்னாது கல்லெனக்
கறங்கிசை இனமணி கைபுணர்ந்து ஒலிப்ப
நிலவுத்தவழ் மணற்கோடு ஏறிச் செலவர
இன்றென் நெஞ்சம் போலத் தொன்றுநனி 5
வருந்துமன் அளிய தாமே பெருங்கடல்
நீல்நிறப் புன்னைத் தமியொண் கைதை
வானம் மூழ்கிய வயங்குஒளி நெடுஞ்சுடர்க்
கதிர்காய்ந்து எழுந்துஅகம் கனலி ஞாயிற்று 10
வைகுறு வனப்பின் தோன்றும்
கைதைஅம் கானல் துறைவன் மாவே!

பெருங்கடலின் அருகேயுள்ள ஒரு கருநிறப் புன்னை; அம் மரத்தினது பக்கத்திலே தனித்திருக்கும் தாழையின் ஒள்ளிய மடல்; அம் மடலானது, ஒளிவிளங்கும் நெடிய சுடர்களைக் கொண்ட கதிர்களைக் காய்ந்தபடியே வானத்தே மூழ்கிக்கிடந்த இருளினது செறிவைக்கண்டு, உள்ளே கொதித்து விடியற்காலை வேளையிலே அதனைப் போக்குவதற்கு எழுகின்ற வைகறைப் போதின் வனப்பினோடும் கலந்து தோன்றும். அத்தகைய தாழைகளையுடைய கானற்சோலைக்கு உரிய துறைவன் நம் தலைவன் அவனுடைய தேர்க்குதிரைகள் தாம்—

நுண் மணலாகிய துகளை முகந்து எழுந்த அமையாத வாடைக்காற்றோடு, இரவும் பகலும் என்று கருதாமல், கல்லென்று ஒலிக்கும் இசையமைதியை உடைய மணி இனங்களை ஒருசேரக் கோத்து அணியப்பெற்ற மணிமாலையானது ஒலிசெய்ய, நிலவின் ஒளிதவழ்ந்தபடியே யிருக்கின்ற மணல் மேட்டினிடந்தே ஏறிச் செல்லுதலானே, இன்று களிப்புறும் என் நெஞ்சத்தைப்போல, முன்பாக மிகவும் வருத்தமுறும் போலும்! ஆதலின் இரங்கத்தளவாய அவைதாம் இப்போது களைப்பாறுவன வாகுக!

கருத்து : தலைவன் வரைவொடு வந்தனனாதலின், என் மனந்தானும் களிப்புற்றது' என்பதாம்; நீயும் நின் அழிதுயர் நீங்கினையாய்க் களிப்புறுக' என்பதுமாம்.

சொற்பொருள் : உயிர்த்தன ஆகுக – களைப்பாறுவன ஆகுக. அயிர்த்துகள் – நுண் மணலாகிய துகள். ஊதை – வாடைக் காற்று. மணற்கோடு – மணற்குன்றம். கைதை – தாழை. வைகுறு – விடியல்.

விளக்கம் : 'வாடைக் காற்றோடு சேர்ந்து மணியும் ஒலிப்ப' என்றது, வாடையால் நலியும் உள்ளத்திற்கு மணியொலியானது ஆறுதலைத் தரும் என்பதாம். இரவுநேரத்திலே ஒலிசெய்தபடி வரும் தேர்க் குதிரைகளின் ஆரவாரத்தால், தலைவன் வரைவொடு வந்தமையைத் தோழி அறிந்தாள் என்க. களவினை வேட்டு வருவதாயின், மணியொலியால் எழும் ஊரலர்க்கு அஞ்சினனாய, அதனை ஏழாதபடி அவித்திருப்பன் என்று கொள்க. இருட்செறிவை நீக்கக் கருதிக் கனன்று எழுகின்ற ஞாயிறுபோலத் தம்மைச் சூழ்ந்திருந்த பெரும்படராகிய இருளை அகற்றும் கதிரவனாகத் தலைவனும் விடியற்காலை வேளையில் வந்தனன் என்று கொள்க.

இறைச்சி : 'புன்னையும் தாழையும் ஒன்றியிருக்கும் துறைவன்' என்றது, அவ்வாறே அவன் தலைவியையும் மணந்து கூடி மணம் பெறுவான்' என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/163&oldid=1731788" இலிருந்து மீள்விக்கப்பட்டது