உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை 1/164

விக்கிமூலம் இலிருந்து

164. தெளிதல் செல்லாய்!

பாடியவர் : ......
திணை : பாலை.
துறை : பொருள் முடித்து வந்தானென்பது வாயில்கள் வாய்க்கேட்ட தோழி, தலைவிக்கு உரைத்தது.

[(து–வி.) தலைவன் பொருளைத் தேடிக்கொண்டு மீண்டனன் என்பதனை ஏவலாட்டியர் வழியாகக் கேள்வியுற்ற தோழி, தலைவியிடம் சென்று கூறுவதாக அமைந்த செய்யுள்.]

'உறைதுறந் திருந்த புறவில் தனாது
செங்கதிர்ச் செல்வன் தெறுதலின் மண்பக
உலகுமிக வருந்தி உயாவுறு காலைச்
சென்றனர் ஆயினும் நன்றுசெய் தனர்'எனச்
சொல்லின் தெளிப்பவும் தெளிதல் செல்லாய் 5
செங்கோல் வாளிக் கொடுவில் ஆடவர்
வம்ப மாக்கள் உயிர்த்திறம் பெயர்த்தென
வெங்கடற்று அடைமுதல் படுமுடை தழீஇ
உறுபசிக் குறுநரி குறுகல் செல்லாது
மாறுபுறக் கொடுக்கும் அத்தம்
ஊறுஇல ராகுதல் உள்ளா மாறே. 10


தோழி! மழையினையே பெறாதிருந்த காட்டுப் பகுதியில், அந் நிலத்தினது தெய்வமாகிய சிவந்த கதிர்களையுடைய கதிரவன் காய்தலைச் செய்தனன். அதனால், நிலமும் வெடிப்புடையதாய் மாறிற்று. உலகமும் மிகவும் வருந்தித் துன்புறுவதாயிற்று. இத்தகைய கோடைக் காலத்தே பயணப்பட்டுத் தலைவரும் சென்றனர். ஆயினும் 'இல்வாழ்க்கைக்கு நன்மை யாவதொரு செயலையே செய்தனர்' எனச் சொன்னேன். என் சொற்களால் நின்னையான் தெளிக்கவும், நீயும் தெளிந்தாயல்லை.

செம்மையான கோலின் வடிவைக் கொண்டவாகிய அம்புகளைக் கொண்டவர், கொடிய வில்லினாலே தொழிலாற்றும் ஆறலை கள்வர்கள். அவர்கள், புதியவராக வரும் வழிப்போக்கரது உயிரைப் போக்கிப் பொருள்களைப் பறித்துப் போவர். அங்ஙனம் உயிரிழந்தவாய்க் கிடந்த உடலங்கள் வெம்மையுடைய பாலைவழியின் முற்பக்கத்தேயே முடை நாற்றத்தைப் பரப்பியபடியிருக்கும். அந்த நாற்றத்தைக் கொண்டு, பசியுற்ற குள்ளநரியானது, தானும் அவ்வழியே சென்று, அப் பிணங்களை உண்ணக் கருதாதாய்த் திரும்பி வேறுவழியாகச் செல்லும் அத்தகைய பாலைவழியைக் கடந்து செல்லுங்கால், அவர் தாம் தமக்கொரு இடையூறும் இல்லாதவராகச் சென்று வருவாராக என்று நீதான் கருதினாயல்லை. இதனாலே தான் என் சொற்களைக் கேட்டுத் தெளிந்தாயல்லை போலும்!

கருத்து : 'நின் மனத்துயரைத் தாமும் உணர்ந்தவராக அவரும். விரையச் செயலை முடித்துப் பொருளுடன் மீண்டனர்; காண்பாயாக' என்பதாம்.

சொற்பொருள் : செங்கதிர் – செம்மையான கதிர்; வெம்மையாற் செம்மையுற்ற கதிர்கள். செங்கோல் வாளி – செவ்விய கோலான அம்பு; எய்யப்பெற்ற குறியிடத்தே குறி தவறாதாய்ச் சென்று தைக்கும் வாளியும் ஆம். கொடுவில் – கொடுந்தொழிலைச் செய்யும் வில்; வளைந்த வில்லும் ஆம். உயிர்த்திறம் – உயிராகிய தன்மை; உயிர்.

விளக்கம் : 'ஊறிலர் ஆகுதல் உள்ளாமாறே' என்றது, பிரிவினை நினைத்து வருந்திய வருத்த மிகுதியினாலே, தன் காதலனின் நன்மையை நினைக்கும் தன்மையினையும் இழந்தனள் என்பதாம். 'நன்று செய்தனர்' என்றது. அவன் ஈட்டிக் கொணர்ந்த பொருளின் மிகுதியை நோக்கிச் சொல்லியதாகும். பிணங்களினின்றும் வீசிய படுமுடை பசியோடிருந்த நரியையும் பிணத்தை உண்பதற்குச் செல்லாவாறு செய்தது என்க. அன்றி, அதுவும் கொலை மறவர்க்கு அஞ்சியதாய் அகன்றது என்பதும் கொள்ளப்படும்; இதனாற் காட்டது கொடுமை மேலும் சுட்டப்பட்டது. நரிகள் பிணந்தின்னும் இயல்பினவாதலைப் 'பிணந்தின் குறுநரி' (புறம்.359) என வருவதனாலும் அறியலாம்.

இறைச்சி : முடைநாற்றத்தால் அறிந்து உயிரிழந்த பிணத்தை தின்னவந்த நரியும் அதனையுண்ண மாட்டாதாய் அகன்றது என்பது, அவ்வாறே தலைவனைப் பிரிந்து தளர்ந்த தலைவியைப்பற்றி உண்ண வந்த பசப்பும், தலைவனை வரக்கண்டதும் அஞ்சிப் பற்றமாட்டதாய் அகன்றது என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/164&oldid=1731790" இலிருந்து மீள்விக்கப்பட்டது