நற்றிணை 1/181
181. கவின் பிழைத்தது!
- பாடியவர் : ......
- திணை : முல்லை.
- துறை : வினைமுற்றிப் புகுந்தது கண்ட தோழி மகிழ்ந்து உரைத்தது.
உள்ளிறைக் குரீஇக் கார்அணற் சேவல்
பிற்புலத் துணையோடு உறைபுலத்து அல்கி
வந்ததன் செவ்வி நோக்கிப் பேடை
நெறிகிளர் ஈங்கைப் பூவின் அன்ன
சிறுபல் பிள்ளையோடு குடம்பை கடிதலின்
5
துவலையின் நனைந்த புறத்தது அயலது
கூரல் இருக்கை அருளி நெடிதுநினைந்து
ஈர நெஞ்சின் தன்வயின் விளிப்பக்
கையற வந்த மையல் மாலை
இரீஇய ஆகலின் இன்னொலி இழந்த
10
தாரணி புரவித் தண்பயிர் துமிப்ப
வந்தன்று பெருவிரல் தேரே
உய்ந்தன் றாகும்இவள் ஆய்நுதற் கவினே!
உள் இறைப்பிலே குடியிருக்கும் குருவியது கரியமோவாயினையுடைய சேவலானது, வேற்றுப் புலத்தேயுள்ள மற்றொரு பேடையோடுஞ் சென்று கூடியின்புற்றது: அவ் விடத்தேயே சிலநாட்கள் தங்கியிருந்ததன் பின்னர் மீட்டும் தன் பேடையிடத்தேயும் வந்தது. அவ்வாறு வந்த சேவலது மேனியிடத்தே புணர்குறியால் உண்டாயிருந்த மாறுபாடுகளை அப்பேடையும் நோக்கியது. பலமான நெறிப்புக் கிளர்கின்ற ஈங்கைப் பூக்களைப் போலத் தோன்றும் தன் சிறு பிள்ளைகளோடும் கூடியிருந்த கூட்டினுள்ளே புகுதற்கும் விடாதாய், அச் சேவலைத் தடுத்தது. அதனால், மழையிலே நனைந்த புறத்தினை உடையதாகிய அச்சேவலானது கூட்டின் பக்கத்தேயான ஒருபுறத்தே குளிரால் நடுங்கியபடி இருந்தது. அதன் நடுக்கத்தைக் கண்டதும் பேடைக்கு அதன்பால் அருள் தோன்றியது. தான் செய்யத் தகுதியானதைக் குறித்து நெடும்பொழுது நினைந்தது. அதன்மேல் இரக்கங் கொண்ட நெஞ்சினதாகியது. தன், சேவலைத் தன்பால் வருமாறும் அழைத்தது. அதனைக் கேட்ட அக் குருவிச் சேவலும் தன் பிழையை நினைந்து வருந்திச் செயலற்றதாயிற்று. அங்ஙனமாக வந்த மயக்கத்தையுடைய மாலைபொழுதும் வந்திறுத்தது ஆகலின், இனிய ஒலியெழுப்பலை இழந்துபோன மணிகளை அணிந்த குதிரைகள், தண்ணிய பயிர்களை மிதித்துச் சிதைத்தபடியே வந்து கொண்டிருக்கப் பெருவெற்றியை உடைய தலைவரது தேரும் வந்து சேர்ந்தது. இனிமேல், இத் தலைவியது அழகிய நெற்றியிடத்தான பேரழகும் பசலை தீர்ந்ததாய்ப் பிழைத்துவிடும்!
கருத்து : 'தலைவன் வந்தானாதலின் இனி இவளுடைய அழகு கெடாமற் பிழைத்திருக்கும்' என்பதாம்.
சொற்பொருள் : கார் அணல் – கரிய மோவாய். அல்கி – தங்கி. நெறி – நெறிப்பு. பிள்ளை – குருவிக் குஞ்சு. துவலை – சிறு துளி. கூரிருக்கை – மழையால் நனைந்து நடுங்கியபடி இருக்கும் இருப்பு. ஈரநெஞ்சு – இரக்கங்கொண்ட நெஞ்சு. கையறல் – செயலறுதல். விறல் – வெற்றி; அதனையுடைய தலைவனைக் குறித்தது. ஆய் நுதல் – அழகிய நுதல்.
விளக்கம் : தலைவன் முன்பொரு காலத்தேயும் தலைவியைப் பிரிந்து சென்றிருந்தான். அப்போது காரணம் பரத்தையுறவாக இருந்தது. அவன் மீண்டும் வந்தபோது தலைவி அவனைச் சினந்து ஒதுக்கினாள். அவன் வருத்தமுற்றவனாய்ப் புறத்தே நிற்கவும், அவள் மனம் இரக்கமுற்றது. தன் அருள் மேலோங்கித் தன்னைச்செலுத்த அவனைத் தானே வலியச் சென்று அழைத்து ஏற்றுக்கொண்டாள். அந்த நிகழ்வின் எதிரொலி தோழியிடத்தே இப்போதும் தோன்றுகின்றது. ஆனால், இவ்வேளை அப்படிச் சினந்து ஒதுக்கமாட்டாள்; வெற்றி வீரனாக வரும் அவனை எதிரேற்று மகிழ்வோடு வரவேற்பாள். இவ்வாறு நினைத்தும் இன்புறுகின்றாள் தோழி.
உள்ளுறை : தன் சேவலது பரத்தமைச் செவ்வியைக் கண்டு சினமுற்று அதனை ஒதுக்கிய குருவிப்பேடையும், பின்னர் அதற்கு இரங்கியதாய் அதனை ஏற்றுக்கொண்டதைக் கூறினாள்; அவ்வாறே தலைவியும் முன்னர் நடந்துகொண்டாள்: இப்போதோ வினைமேற் சென்று வெற்றியோடு மீள்பவனாகலின், மகிழ்வுடன் விரும்பி ஏற்றுக்கொள்வாள் என்பதாம்.