நற்றிணை 1/182
182. கண்டு வருவோம்!
- பாடியவர் : .........
- திணை : குறிஞ்சி.
- துறை : வரைவு நீட்டிப்பத் தலைமகள் ஆற்றாமையறிந்த தோழி நிறைப்புறவாகச் சொல்லியது.
[(து–வி) வரைந்து வருவதாகத் தலைவன் குறித்துச்சென்ற காலம் கடந்துகொண்டே போயிற்று. அதனால், தலைவி பெரிதும் ஆற்றாமை உடையவளாயினான் அதனைத் தோழியும் அறிந்தாள். அந்த ஆற்றாமையினைத் தீர்க்கும் வகையினை நாடினாள். தலைமகளை விரைந்து வரைந்து வருதற்குத் தூண்டுதற்கும் நினைத்தாள். ஒரு நாள், அவன் குறியிடத்திற் சிறைப்புறமாக வந்து நிற்பதை அறிந்தவள், தான் தலைவிக்குச் சொல்வாளைப் போல, அவன் உள்ளத்திலும் பதியுமாறு இப்படிக் கூறுகின்றாள்.]
நிலவும் மறைந்தன்று இருளும் பட்டன்று
ஓவத்து அன்ன இடனுடை வரைப்பின்
பாவை அன்ன நிற்புறங் காக்கும்
சிறந்த செல்வத்து அன்னையும் துஞ்சினள்
கெடுத்துப்படு நன்கலம் எடுத்துக்கொண் டாங்கு
5
நன்மார்பு அடைய முயங்கி மென்மெலக்
கண்டனம் வருகம் சென்மோ தோழி!
கீழும் மேலும் காப்போர் நீத்த
வறுந்தலைப் பெருங்களிறு போலத்
தமியன் வந்தோன் பனியலை நீயே!
10
கருத்து : 'களவின்பத்திற்கு உண்டாகும் இடுக்கண்களை உணர்ந்து அவன் நின்னை மணத்து கொள்ளானோ?' என்பதாம்.
சொற்பொருள் : இடனுடை – இடத்தையுடைய; இடம் அகன்ற, வரைப்பு – எல்லை: வீட்டின் உட்புறம் பாவை – சித்திரப்பாவை; பேச்சொழிந்திருந்த நிலையைக் குறித்தது. அடைய – சேர: அழுந்த. முயங்கி – தழுவி. வறுந்தலை –அணியிழந்த தலை; சிறிய தலையும் ஆம். பனி – பனித் துளிகள், அலை நிலை – அலைத்த நிலை; அலைத்தல் – வருத்துதல்.
விளக்கம் : 'நிலவிலே வெளிப்போந்தால் பிறர் அறியக் கூடுமென்னும் அச்சத்தை உடையோம்' என்பாள், 'நிலவு மறைந்தன்று' என்று அது நீங்கினமை கூறினாள். 'இருளும் பட்டன்று' எனக் களவிற்கான செவ்வி தோன்றினும் மீண்டுசெல்லும் தலைவனுக்கு வழியிடை ஏதம் வந்துறுமோவெனத் தாம் அஞ்சுவதைக் குறிப்பாகக் கூறினாள். 'ஓவத் தன்ன' என்றது. இல்லத்தவர் அனைவரும் கண்ணுறங்குதலால் விளங்கிய அமைதி சூழ்ந்த நிலையினைக் குறித்துச் சொன்னதாம்.'புறங் காக்கும்' என்றது. சிறை காவலைக் கூறியது. 'சிறந்த செல்வத்து அன்னை' என்றது, குடிப் பெருமையைச் சொன்னதாம். 'கெடுத்துப்படு நன்கலம்' எனக் குறிப்பாக உரைத்தது, மெலிவினாலே தளர்ந்து சோர்ந்த வளைகளை. 'நன்மார்பு' என்றது நலந்தரும் மார்பு என்பதனால்; நலமாவது தளர்வகற்றி மீளவும் பொலிவைத் தருதல். 'மென்மெல' என்றது, உறங்குவார் விழித்துக் கொள்ளாமைப் பொருட்டு. 'கீழும் மேலும் காப்போர்' என்றது, கீழிருந்து நடத்திச் செல்வோனும், மேலிருந்து செலுத்திச் செல்வோனுமாகிய இருவரையும்; 'அவரை நீத்த' என்றமை, யானைக்கு மதம் பற்றியதனை அறிவுறுத்துவதாம். இரவுக்குறி இடையீடுபடுதற்கான பலவகைக் காரணங்களையும் கூறி, அவன்மீது தாம் கொண்டுள்ள மாறாத காதலையும் உரைத்து, அவனை மணவினைக்கு முற்படுமாறு தூண்டுகின்றாள் தோழி.
'கெட்ட நன்கலனை எடுத்துக் கொண்டாற் பெறும் மகிழ்ச்சி போலக் களவு இடையீடுபட்டதனால் இழந்த களவின்பத்தை மீளவும் பெற்றுக் கொள்ளலாம்' என்பது, அவனைப் போன்றே தாமும் அவனைப் பெரிதும் விரும்பியிருக்கும் நிலையினைக் கூறுவதாம்.'காப்போர் நீத்த களிறு போல்வான்' என்றது. மூத்தோர்க்கு அடங்கி நடப்பவனாயின், வரைந்து கொள்ளுமாறு வற்புறுத்தப்பட்டிருப்பான்; அஃதன்றிக் களவையே நாடுதலால் 'காப்பார் நீத்த களிறுபோலத் தன் மனப்போக்கின்படியே எதிர்விளைவுகள் எவற்றையும் கருதிப் பாராதே நடப்பானாயினான்' என்பதாம்.
மேற்கோள் : 'நன்னயம் பெற்றுழி நயம்புரி இடத்தினும் தோழிக்குக் கூற்று நிகழும்' என்பதற்கு இச்செய்யுளை எடுத்துக் காட்டுவர் இளம்பூரண அடிகள். களவொழுக்கம் நிகழா நின்றுழித் தலைவன் வந்தான் எனக் கூறியது எனவும் உரைப்பர் (தொல்–களவியல். சூ. 112); மெய்ப்பாட்டியலுள் 'இன்புறலாவது நட்டாராகிப் பிரிந்து வந்தோரைக் கண்டவழி வருவதோர் மனநிகழ்ச்சி போல்வது' எனக் கூறி; இச்செய்யுளின், 'கெடுத்துப்படுநன்கலம் எடுத்துக்கொண்டாங்கு' என்பதனையும் இளம்பூரணர் காட்டுவர்.
தொல்காப்பியக் களவியலுரையுள் (சூ. 114) இச்செய்யுளைக் காட்டி, 'இது. தலைவனைக் கண்டு முயங்குகம்வம்மோ" என்றது என்பர் நச்சினார்க்கினியர்(சூ. 114 உரை).
பாடபேதம் : நிற்புறம் காக்கும்