நற்றிணை 1/185
185. யான் நோவேன்!
- பாடியவர் : ......
- திணை : குறிஞ்சி,
- துறை : (1) பாங்கற்குத் தலைவன் சொல்லியது. (2) சேட்படுக்கும் தோழிக்குத் தலைவன் சொல்லியதூஉம் ஆம்.
[(து–வி.) (1) சுற்றறிந்தானாகிய பாங்கன், தலைவனது களவுறவின் பொருந்தாமைக்குக் காரணமான பலவற்றையும் கூறி, அவ்வுறவைக் கைவிடுமாறும் வற்புறுத்துகின்றான். அவனுக்குத் தான் தலைவிபாற் கொண்டுள்ள காதற்பெருககினை நயமாக உரைத்து, அவளைத் தனக்குச் கூட்டுவிக்குமாறு கேட்கின்றான் தலைவன். (2) தோழிபால் குறையிரத்து நின்ற தலைவனை, அவள் அவனுக்கு உதவுவதற்கு மறுத்துப் போக்கவே, அவன் தானுற்ற காமநோயினை அவளுக்கு இப்படி உணர்த்துகின்றான்.]
ஆனா நோயோடு அழிபடர்க் கலங்கிக்
காமம் கைம்மிகக் கையறு துயரம்
காணவும் நல்காய் ஆயின் பாணர்
பரிசில் பெற்ற விரியுளை நல்மான்
கவிகுளம்பு பொருத கல்மிசைக் சிறுநெறி
5
இரவலர் மெலியாது ஏறும் பொறையன்
உரைசால் உயர்வரைக் கொல்லிக் குடவையின்
அகலிலைக் காந்தள் அலங்குகுலைப் பாய்ந்து
பறவை இழைத்த பல்கண் இறாஅல்
தேனுடை நெடுவரை தெய்வம் எழுதிய
10
வினைமாண் பாவை அன்னோள்
கொலைசூழ்ந் தனளால் நோகோ யானே.
பாடிச் செல்லும் மரபையுடையவரான பாணர்கள் விரிந்த புறமயிரை உடையவும் நல்ல இனத்தைச் சார்ந்தவுமான குதிரைகளைத் தமக்குரிய பரிசிலாகப் பெற்றுச் செல்வார்கள். அக்குதிரைகளின் கவிந்த குளம்புகள் பொருதுதலானே தடம்பட்டு விளங்குவது மலைமேலிடத்ததான சிறு நெறியாகும். அந் நெறிக்கண்ணே, இரவன்மாக்கள் உள்ளத்தே மெலிவற்றாராய் ஏறிச் செல்வர். கொல்லிக்கு இறைவனை நாடியே அவர்கள் அங்ஙனம் சென்றுகொண்டிருப்பார்கள். அக் கொல்லி மலையானது சான்றோரது வாக்குகளிலே உரைக்கப்பட்ட புகழுடையதாய், உயரமும் பெற்றிருப்பதாய் விளங்குவது. அக் கொல்லிமலையின் மேற்றிசைப் பக்கத்தே அகன்ற இலைகளையுடைய காந்தளது அசைந்தாடும் பூக்குலைகளிலே பாய்ந்துவந்த வண்டினங்கள் இழைந்திருக்கும் பலவாய கண்களைக் கொண்ட தேனடைகள் பலவாக நிறைந்து விளங்கும். தேனையுடயை நெடிதான அம் மலைப் புறத்தே தெய்வத்தாற் செய்துவைக்கப் பெற்றதான செய்வினைத் திறனால் மாண்புடைத்தாக விளங்கும் கொல்லிப்பாவையும் அமைந்திருக்கும். அப்பாவையைப் போன்றாள் என் தலைவியாவாள். என்னைக் கொல்விக்கும் சூழ்ச்சியினை அவளும் அன்று செய்தனள்! அதனாலே, அடங்காப் பெருநோயோடு பலபலவாக எண்ணியெண்ணிக் கழிகின்ற துன்பமிகுதியை யானும் உடையவனாயினேன்; என் நிலை கலங்கியவனுமாயினேன். காமமானது எல்லைகடந்ததாய்ப் பெருகிக்கொண்டு போதலினாலே, என் செயலாவன அனைத்தையும் கைவிட்டேனாய் நலிகின்றேனும் ஆயினேன். என் அந் நிலையைக் கண்டதன் அளவிலேயும், நீதான் அவளை எனக்குத் தருதற்கான முயற்சிகளைச் செய்யாது ஒழிவாயானால், யான்தான் யாது செய்வேன்? ஊழால் வந்துற்ற அழிபாடெனக் கொண்டேனாய், அதனையே நோவா நிற்பேன். வேறு யாது தான் செய்வேன்?
கருத்து : 'தலைவியை அடையப் பெறினன்றித் தனக்கொரு உயிர் வாழ்வென்பதுதானும் இல்லை' என்பதாம்.
சொற்பொருள் : ஆனா நோய். அமையாதாய்ப் பெருகி நிற்கும் நோய்; அது காமம். அழிபடர் – அழிவைத் தருகின்ற படர்; நொடிக்குநொடி படரும் துயரினை விளைத்தலாற் காமமும் 'படர்' எனப்பட்டது. கைம்மிகல் – தடைசெய்யும் ஆற்றலை மீறிப் பெருகுதல்; கைகடந்து போதல். கையறுதல் – செயலறுதல். நல்குதல் – அருளுதல்; அது தலைவியைத் தலைவனோடு கூட்டுவித்தல். மெலியாது – உள்ளம் தளராது; பொறையன்பாற் பெறப்போகும் பெரும்பரிசிலின் நினைவு நடையின் தளர்வைப் பொருளாகக் கொள்ளாமற்படிக்குச் செய்யும் என்க. உரைசால் – புகழுரையாலே மேம்பட்ட. கொல்லி – கொல்லி மலை; சேரர்க்கு உரியது. பொறையன் – சேரன்: இரும்பொறை மரபினனாகிய சேரமானும் ஆம். கொல்லிக்கு இறைவனை 'வல்விள் ஒரி' எனவும் சொல்வர். பறவை – அறுகாற் பறவை; வண்டு. பாவை – கொல்லிப் பாவை. கொலை சூழ்தல் –கொல்லுவதற்குச் சதி புரிதல்.
விளக்கம் : 'கொல்லிப் பாவை' என்பது, தேவத்தச்சனால் சிறப்பாக நிறுமிக்கப் பெற்றது; அம்மலையிடத்து வாழ்வோரை வருத்துதற்கு முயலும் அவுணர் முதலியோரைத் தன் நகையாலும் அழகாலும் மயக்கிக் கொல்லக் கூடியது அது என்பர். நகைத்துக் கொல்லும் பாவை அதுவென்பதைப் பிற்காலத்துச் சான்றோரும், 'திரிபுரத்தைச் செற்றவனும் கொல்லிச் செழும்பாவையும் நகைக்க' என்று கூறுவர் (சித்திர மடல்). இதனாற் குறுநகை தோற்றுவித்துத் தலைவியும் தலைவனைக் கொலை செய்யச் சூழ்ந்தனள் என்று தலைவன் உரைக்கின்றதாகக் கொள்க.
இறைச்சிகள் : (1) 'பாணரின் பரிசிற்பொருளான குதிரைகளின் குளம்படித் தடங்களாற் செப்பமான சிறுநெறியில், இரவலர் மெலியாது ஏறிச் செல்வதைப் போல, நின்னால் இசைவித்துக் கூட்டப் பெறும் தலைவியுடன் யானும் உள்ளம் மெலியாது நெடிது கூடி இன்புறுவேன்' என்பதாம்.
(2) 'காந்தளின் தேனை ஈட்டிக் கொண்டுபோய்க் கொல்லிப் பாவையிருக்கும் வரையிடத்தே இறாலிழைத்திருக்கும் வண்டுகளைப்போல, அழகையெல்லாம் ஒருங்கே கூட்டிச்சமைத்த அவளது நலமும் எனக்கு எட்டாதான ஓர் இடத்தே இருக்கின்றது' என்பதாம்; தலைவியின் அழகுச் செவ்வியும் குடியுயர்வும் இதனால் நன்கு விளங்கும்.
மேற்கோள் : களவியலுள், 'பரிவுற்று மெலியினும். தலைவனுக்கு கூற்று நிகழுதற்கு' இச்செய்யுளைக் காட்டி. 'இது பகற்குறியிற் பரிவுற்றது' என்பர் நச்சினார்க்கினியர். (தொல். களவு 12 ஆம் சூத்திர உரை).