உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை 1/198

விக்கிமூலம் இலிருந்து

198. பெயர் பொலிக!

பாடியவர் : கயமனார்.
திணை : பாலை.
துறை : பின் சென்ற செவிலி இடைச்சுரத்துக் கண்டார்க்குச் சொல்லியது.
[(து–வி) தலைமகன் தலைமகளையும் உடன்கொண்டானாகத் தன்னூர்க்குச் சென்றனன் அவரைத் தேடிச் சென்ற செவிலித்தாய், எதிரே வருவாரான தலைவனும் தலைவியுமாகிய வேற்றார் இருவரைக் கண்டு, தன் உள்ளத்துயரம் மேலெழ, அவர்க்கு உரைப்பதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]

சேயின் வரூஉம் மதவலி! யாஉயர்ந்து
ஓமை நீடிய கானிடை அத்தம்
முன்நாள் உம்பர்க் கழிந்த வென்மகள்
கண்பட நீர்ஆழ்ந் தன்றே தந்தை
தன்னூர் இடவயின் தொழுவேன் நுண்பல் 5
கோடேந்து அல்குல் அரும்பிய திதலை
வார்ந்திலங்கு வாலெயிற்று பொலிந்த தாஅர்
சில்வளை பல்கூந் தலளே அவளே
மையணல் எருத்தின் முன்பின் தடக்கை
வல்வில் அம்பின் எய்யா வண்மகிழ்த் 10
தந்தை தன்ஊர் இதுவே
ஈன்றேன் யானே! பொலிகநும் பெயரே!

சேய்மைக்கண்ணிருந்து வாராநின்ற பெருவலிமையினை உடையோனாகிய தலைவனே! யாமரங்கள் உயரமாக வளர்ந்தும், ஓமை மரங்கள் மிக நெடிதாக வளர்ந்தும் இருக்கின்ற காட்டிடையே செல்லும் வழியினூடாக, நேற்றைப் போதிலே அப்பக்கமாக என் மகளும் சென்றனள். அந்தக் காட்சி என் கண்ணுள்ளே தோன்ற, என் கண்கள் கண்ணீர் வெள்ளத்துள்ளே அமிழா நின்றன. நுண்ணிய பலவாகிய வரிகளோடு பொருந்திய அல்குல் தடத்தினையும், அதனிடத்தே தோன்றிய தேமற்புள்ளிகளையும் உடையாள் அவள். நேர்மையுற்று விளங்கும் வெள்ளிய பற்களையும் அவள் பெற்றுள்ளவள். அழகுசெய்யும் மாலையையும், சிலவாகிய வளைகளையும், பலவாகத் தழைத்த கூந்தலையும் அவள் உடையவள். அவளை வழியிடைக் கண்டீராகிய நும்மை அவளது தந்தையது இல்லத்திடத்தே அழைத்துச் சென்று விருந்தூட்டித் தோழுதும் போற்றுவேன். மைபோலும் கரிய அணலினையும் வளமிகுந்த பெரிய கையினையும், வலி செறிந்த வில்லிடத்தே அம்பினை வைத்துக் குறிபிழையாது எய்யும் ஆற்றலையும், வளவிய மகிழ்வைத் தரும் கள்ளுணவையும் உடைத்தான அவள் தந்தையது ஊர்தானும் இதுவேயாகும். அவளை ஈன்று காத்தவளும் யானே யாவேன். அவர்களை எதிர்கண்டு பேசிய வகையை எனக்குச் சொல்லீராயின் நும் பெயர் என்றைக்கும் புகழுடன் விளங்க வாழ்வீராக!

கருத்து : 'என் மகளைக் காணாது அலமரும் எனக்கு அவளது பேச்சினை நீவிர் சொல்வீராக; சொன்னால் நும்பெயர் புகழ்பெறும்' என்பதாம்.

சொற்பொருள் : சேயின் – தொலைவிடத்திருந்து, மதவலி – பெருவலிமை. யா – யாமரம் ஒமை – ஓமை மாம். தந்தை தன் ஊர் (முன்னது) இல்லம்; (பின்னது) ஊர். கோடு – வரை, தார் – மாலை.

விளக்கம் : 'மதவலி' எனச் சிறப்பித்துக் கூறிய செவ்வியினால். எதிர்வந்தவன் ஓர் தலைவன் எனக் கொள்ளலும் பொருத்தம் உடையதாகும். தன் மகளது பிரிவாற்றாமையினாலே வருந்தும் தாய், அவளை எதிரே கண்டு வருவாரது வாய்ச் சொற்களைக் கேட்டு மனவமைதி பெறுவதற்கு முயலுகின்றாள். வயதிற் சிறியராயினும் 'தொழுவேன்' என்றது, அவர் வாய்மொழியாலே பெறும் மனவமைதி பெரிதாதலான். 'அணல்' என்பது மோவாயிடத்தே விளங்கும் மயிர்; தாடியும் ஆம். எய்யா வண்மகிழ் – குறைதலற்ற வளவிய மகிழ்ச்சிப் பெருக்கம்: இது கள்ளூணால் வந்தடைவது 'ஈன்றேன் யானே' என்றது, பிறருக்காயின் அவர்தாம் கண்டாரைப்பற்றி யாதும் கூறார் ஆதலினால், பெற்ற தாயாகத் தன்னைப் படைத்துக் கூறியதும் ஆம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/198&oldid=1731879" இலிருந்து மீள்விக்கப்பட்டது