உள்ளடக்கத்துக்குச் செல்

மலரும் உள்ளம்-1/நான்காம் பகுதி

விக்கிமூலம் இலிருந்து

இன்முகம் காட்டிடுமே—அதனால்
இன்பமும் ஊட்டிடுமே.
நன்மணம் வீசிடுமே—சுற்றி
நான்கு திசைகளுமே.

வண்டுகள் தேன்விரும்பி—நாடி
வந்திடும் மொய்த்திடவே.
கண்டவர் யாவரையும்—இதனது
காட்சி மயக்கிடுமே

ஈசன் திருவடியில்—இதுவே
என்றென்றும் நின்றிடுமே.
பாசமாய் மக்களுமே—இதனைப்
பறித்துச் சூடுவரே.

மணம் நடக்கையிலே—அங்கே
மணத்தை வீசிடுமே.
குணம் பெரிதாகும்—ஆனால்
குற்றம் எதுவுமில்லை.

மலர் எனஉள்ளம்—நமக்கு
மலர வேண்டுமடி.
பலரும் போற்றிடவே—உலகில்
பண்புடன் வாழ்வோமடி.

காந்தித் தாத்தா நம்தாத்தா.
கருணை மிக்க பெருந்தாத்தா.
சாந்த மூர்த்தி, என்றென்றும்
சத்திய மூர்த்தி நம்தாத்தா.

ராட்டை சுற்றி நூற்பதிலே
நாளும் சிலமணி போக்கிடுவார்.
நாட்டு மக்கள் நலமெண்ணி
நமது தாத்தா சிறைவாழ்ந்தார்.

உச்சிக் குடுமித் தலையுடனே,
உடுப்பது நாலு முழந்தானே.
பச்சைக் குழந்தை போலெண்ணம்
படைத்தவர் காந்திப் பெருந்தாத்தா.

வளரும் குழந்தைக் கிருபற்கள்
வாயின் நடுவே கண்டிடலாம்.
வளர்ந்த நமது தாத்தாவின்
வாயில் அவ்விடம் பல்லில்லை!

ஆட்டுப் பாலுடன் கடலையினை
அவரும் உண்டு அன்பாக
நாட்டின் விடுதலை எண்ணமொடு
நல்ல தொண்டு பலசெய்தார்.

மாலைப் பொழுது நடப்பாராம்.
மகிழ்ந்து திரும்பி வருவாராம்.
வேலை இன்றிச் சிறுபொழுதும்
வீணாய்ப் போக்க மாட்டாராம்.

கண்ணிற் சிறந்த விடுதலையைக்
கருதி வாழ்ந்தார் நம்தாத்தா.
மண்ணில் யாவர் வாழ்விற்கும்
வழிகாட் டிடுவார் நம்தாத்தா.

சத்தியம் பேசுதல் அவர்கொள்கை.
தருமம் காத்தல் அவர்கொள்கை.
இத்தல மக்கள் யாவர்க்கும்
இன்ப சுதந்திரம் அவர்கொள்கை.

அப்பா வைப்போல் பெரியவனாய்
ஆன வுடனே நானுமே,

மாட்டைக் கொண்டு கலப்பை பூட்டி.
மண்ணை நன்கு உழுவேனே.
நாட்டில் உள்ள பஞ்சம் போக
நானும் உதவி செய்வேனே.

அப்பா வைப்போல் பெரியவனாய்
ஆன வுடனே நானுமே,

நூற்று நெய்து வேட்டி, சேலை
நேர்த்தி யாகத் தருவேனே.
வேற்று நாட்டவர் தயவு ஏனோ?
வேண்டாம் என்று சொல்வேனே.

அப்பா வைப்போல் பெரியவனாய்
ஆன வுடனே நானுமே,

கொத்த னாகச் செங்கல் கொண்டு
கோயில், வீடு கட்டுவேன்.
மெத்தப் புகழும் தாஜ்ம ஹாலை
ஒத்தி ருக்கச் செய்குவேன்.

அப்பா வைப்போல் பெரியவனாய்
ஆன வுடனே நானுமே,

தச்ச னாகக் கதவு, தூண்கள்
சன்னல் பலவும் பண்ணுவேன்.
மெச்சும் படியாய் வண்டி, கலப்பை,
மேஜை களையும் செய்குவேன்.

அப்பா வைப்போல் பெரியவனாய்
ஆன வுடனே நானுமே,

கருமா னாக இரும்பி னாலே
கம்பி, வளையம், கத்திகள்
அருமையான பூட்டு, சாவி,
அத்த னையும் பண்ணுவேன்.

ஐவரும்

ஒத்துச் சேர்ந்து எங்கள் தொழிலை
ஊக்க மாய் நடத்துவோம்.
சத்தி யத்தைக் கடைப்பி டித்துச்
சகல ருக்கும் உதவுவோம்.

தேனி ருக்கும் இடத்தினைத்
தேடி மொய்க்கும் வண்டுபோல்,
சீனி யுள்ள இடத்தினைத்
தேடி ஊறும் எறும்புபோல்,

பழம் நிறைந்த சோலையைப்
பார்த்துச் செல்லும் கிளியேபோல்,
வளம் நிறைந்த நாட்டிலே
வந்து சேரும் மக்கள்போல்,

பள்ள மான இடத்தினைப்
பார்த்துப் பாயும் வெள்ளம்போல்,
நல்ல நல்ல நூல்களை
நாடி நாமும் பயிலுவோம்.


முத்துப் போல மல்லிகை
முற்றும் அழகு காட்டுதே.
நித்தம் பெண்கள் தலையிலே,
நின்று நடனம் ஆடுதே!

எங்கு ஒளித்து வைப்பினும்,
எளிதில் அறியச் செய்யுதே,
‘இங்கு நானும் இருக்கிறேன்’
என்று மணத்தைப் பரப்புதே!

கண்ணைக் கவரச் செய்யுதே,
காற்றில் மணத்தைக் கலக்குதே,
பெண்கள் தலையில் அணிந்ததும்
பெருமை கொள்ளச் செய்யுதே.

‘கொண்டை தன்னில் அணியவே
கொடுத்து வைக்க வில்லையே’
என்று ஆண்கள் எண்ணியே
ஏங்கச் செய்யும் பூவிதே!

சோலை மகிமை பெறுவதே
சுகந்த வாச மலர்களால்

நாடு மகிமை பெறுவதே
நன்கு பெருகும் வளத்தினால்

நூல்கள் மகிமை பெறுவதே
நுட்ப மான கருத்தினால்

மனிதன் மகிமை பெறுவதே
மாண்பு மிக்க அறிவினால்!

வா

கடற்க ரைக்குச் சென்றிடலாம்
வா, தம்பி, வா—அங்கே
காற்று வாங்கி வந்திடலாம்,
வா, தம்பி, வா.

உடல் வளர நல்லதடா
வா, தம்பி, வா—அந்த
உப்பங் காற்றின் சக்தியடா
வா, தம்பி, வா.

வெள்ளை மணல் மீதிருப்போம்
வா, தம்பி, வா —சற்றே
விளை யாடித் திரும்பிடுவோம்
வா, தம்பி, வா.

பிள்ளை களும் வந்திடுவார்
வா, தம்பி, வா—அங்கே
பெரிய வரும் கூடிடுவார்
வா, தம்பி, வா.


பார்
கடலின் மீது செல்லும் கப்பல்

பார், தம்பி, பார்—அதைக்
காணப் பலர் வருவதையே
பார், தம்பி, பார்.

‘தடத’டென்று அலைகள் வந்து
பார், தம்பி, பார்—காலைத்
தழுவி விட்டுப் போவதையே
பார், தம்பி, பார்.

சங்கும் நல்ல கிளிஞ்சல்களும்
பார், தம்பி, பார்—இங்கே
சரள மாகக் கிடைக்குதடா
பார், தம்பி, பார்.

பொங்கு கின்ற பாலினைப்போல்
பார், தம்பி, பார்—இங்கு
தங்கி நிற்கும் நுரையுமுண்டு
பார், தம்பி, பார்.


கேள்

முத்து நல்ல முத்துக்களாம்
கேள், தம்பி, கேள்—உள்ளே
முழ்கி, மூழ்கி எடுத்திடுவார்
கேள், தம்பி, கேள்.

எத்த னையோ மீன்வகைகள்
கேள், தம்பி, கேள்—இங்கே
எண்ண யாரால் முடியுமென்றே
கேள், தம்பி, கேள்.

மழையே பெய்யா திருந்திடினும்,
கேள், தம்பி, கேள்—கடல்
வறண்டு போவ தில்லையடா
கேள், தம்பி, கேள்.

அலைகள் போடும் சத்தமடா
கேள், தம்பி, கேள்—அதை
அடக்க யாரால் முடியுமென்றே
கேள், தம்பி, கேள்.

மாடு இல்லை; குதிரை இல்லை;
மனிதன் வண்டி இழுக்கிறான்.
பாடு பட்டு உடல் வளர்க்கப்
பாவம், இதுபோல் செய்கிறான்.

மனிதன் மீது மனிதர் ஏறி
மாப்பிள் ளைபோல் செல்கிறார்.
குனிந்து வண்டி இழுக்கும் அவனைக்
குதிரை யாக நினைக்கிறார்!

மேடு பள்ளம் வந்த போது
மாடு போல இழுக்கிறான்.
‘ஓடு, ஓடு’ என்று அவனை
ஓட ஓட விரட்டுவார்.

சென்னை போன்ற பெரிய நகரத்
தெருக்கள் தோறும் பார்க்கிறோம்.
இன்னும் இந்த மனித வண்டி
இருப்ப தேனோ, ஏனோதான்!

வண்ணச் சோலை தன்னிலே
வளரும் செடிகள் நிச்சயம்.
வளரும் செடிகள் மீதிலே,
மலர்கள் உண்டு நிச்சயம்.

மலர்கள் தம்மைத் தேடியே
வண்டு வருதல் நிச்சயம்
வண்டு தேனை வாரியே
கொண்டு போதல் நிச்சயம்.

கொண்டு சென்ற தேனையே
கூட்டில் சேர்த்தல் நிச்சயம்.
கூடு தன்னை மாந்தர்கள்
குலைத்து விடுதல் நிச்சயம்.

அழகு மிக்க கூட்டினை
அழித்து, நல்ல தேனையே
அடைய வேண்டின் அழியுமே,
ஆயிரம் உயிர், நிச்சயம்!

கொட்டி டுவாய் மழையே—நாங்கள்
குதூகல மெய்திடவே.
சொட்டுச் சொட்டாய்த் தொடங்கி—மழையே
‘சோ’வெனப் பெய்திடுவாய்.

வளைவு கட்டி வைத்தே—பெரியார்
வருகை நோக்குதல்போல்
வளைந்த வான வில்லும்—உனது
வருகை காட்டிடுமே.

காரிருள் மேக மதாய்—அலைபோல்
காற்றினில் சென்றிடுவாய்.
மீறியே சென்றி டாது—மலைகள்
மோதிடப் பெய்திடுவாய்.

நெற்றியில் நீர் சொரிய—உழவர்
நிலம் உழுதபின்பும்
வற்றிய குட்டை கண்டால்—உடனே
மாமழை பெய்திடுவாய்.

சூரிய வெப்ப மதால்—வாடிச்
சுருண்ட உயிர்களெல்லாம்
நேரிய உன்செயலால்—நன்கு
நின்று தலைதூக்கும்.

வாரிப் பொருளை யெலாம்—நன்கு
வழங்கி நிற்போரை,
மாரி போலப் பொழிவார்—என்றே
வாழ்த்தும் மனிதகுலம்.

கப்பல்கள் விட்டி டவே—நாங்கள்
காகிதம் சேர்த்து வைத்தோம்.
தப்பியே ஓடி டாதே—கொஞ்சம்
தயவுடன் பெய்திடுவாய்.

வண்டு இங்கே பாரடா.
மலரைத் தேடி வருதடா.
உண்டு, உண்டு தேனையே
ஒலிக்கும் பாட்டுக் கேளடா.

(வண்டு பூவிடம் சொல்லுகிறது.
 என்ன சொல்லுகிறது தெரியுமா?)

தேனைத் தந்து பசியினைத்
தீர்க்கும் பூவே, உன்னையே
ஏனோ மனிதர் பறிக்கிறார்?
எளிதில் வாடச் செய்கிறார்.

சேர்த்து வைத்தேன் நீதந்த
தேனை நானும் கூட்டிலே.
பார்த்து விட்டார், அதனையும்
பறித்துக் கொண்டு விரட்டினர்.

இனிக்கும் தேனைச் சேர்த்ததால்
என்னை மனிதர் பிரிக்கிறார்.
மணத்தை வாரி இறைத்ததால்
மலரே உன்னைப் பறிக்கிறார்.

பசு

சத்து நிறைந்த பாலினையே
தந்து நம்மைக் காத்திடுமே
இத்தனை சாதுப் பிராணிதனை
எங்கே னும்நீ கண்டாயோ?

காளை

அண்டை ஊர்கள் சென்றிடவே
வண்டி யிழுத்துச் சென்றிடுமே.
மண்டிப் பயிர்கள் வளர்ந்திடவே,
மண்ணை நன்கு உழுதிடுமே.

நாய்

நன்றி உள்ள உயிர்களிலே
நல்ல மிருகம் இதுவொன்றாம்.
வெற்றி கொண்ட வீரன்போல்
வீட்டைக் காத்து நின்றிடுமே.

ஆடு

காந்தித் தாத்தா முதல்யார்க்கும்
கறக்கும் நல்ல பாலினையே
சாந்தம் மிக்கது தாத்தாபோல்.
தஞ்சம் நம்மை அடைந்ததுவே.

சேவல்

கழுத்தை நீட்டிக் கூவிடுமே
காலைப் போதில் சிறகடித்தே
‘எழுந்திரு, விழித்திடு’ என்றதுவும்
எழுப்பித் தூக்கம் ஓட்டிடுமே.

பூனை

பாலைக் குடித்தும் சாதுவைப்போல்
பஞ்சுக் காலால் நடந்திடுமே.
வேலை அதற்கு வேறில்லை.
வீட்டில் எலிகள் பிடிப்பதுதான்!

காக்கை

உற்றார் உறவினர் அனைவரையும்
உண்ண அழைத்து உண்டிடுமே.
செத்தால் ஒன்று அவைகளிலே
சேர்ந்து யாவும் அழுதிடுமே.

எலி
நமக்கென வைத்த பண்டமெலாம்

நாடித் தேடித் தின்றிடுமே.
நமக்கெனத் தைத்த சட்டைகளை
நாசம் ஆகக் கடித்திடுமே.

சிங்கம்
மிரண்டு அஞ்சி நடுங்கிடுவர்

மிருக ராஜன் என்றிடுவர்.
தரணியில் அதற்குக் காடொன்றே
தகுதியென் றீசன் வைத்தனனோ!

இனிப்பில் லாத கரும்பினை
எவரும் விரும்பித் தின்பரோ?

இசையில் லாத பாட்டினை
எவரும் விரும்பிக் கேட்பரோ?

மணமில் லாத மலரினை
மகிழ்ந்து எவரும் அணிவரோ?

நிழல்த ராத மரத்தின்கீழ்
நிற்க எவரும் வருவரோ?

தண்ணீ ரில்லாக் குளத்திலே
தாகம் தீர்க்கச் செல்வரோ?

அன்பில் லாத மனிதரை
யார்தான் விரும்பப் போகிறார்?

பட்டை போடப் போடத்தான்
பளப ளக்கும் வைரமே.

மெருகு கொடுக்கக் கொடுக்கத்தான்
மினுமி னுக்கும் தங்கமே.

அரும்பு மலர மலரத்தான்
அளிக்கும் மணத்தை மலருமே.

அன்பு பெருகப் பெருகத்தான்
அமைதி அடையும் உலகமே.

சின்னச்சின்னப் பறவையான
சிட்டுக்குருவி,
தேடித்தேடித் திரிவதென்ன?
சிட்டுக்குருவி.
என்னவேண்டும்? என்னவேண்டும்?
சிட்டுக்குருவி.
என்னிடம்நீ சொல்லவேண்டும்,
சிட்டுக்குருவி.

உணவுதேடித் திரிகின்றாயோ?
சிட்டுக்குருவி.
ஊக்கமது கைவிடாத
சிட்டுக்குருவி.
பணமும் வேண்டாம்; காசும்வேண்டாம்
சிட்டுக்குருவி.
பச்சை நெல்லை நான்தருவேன்,
சிட்டுக்குருவி.

கூடுகட்டி வாழ்வதற்கோ
சிட்டுக்குருவி.
குச்சிகளைத் தேடுகின்றாய்?
சிட்டுக்குருவி.
பாடுபட்டு வேலைசெய்ய,
சிட்டுக்குருவி.
பாடமெல்லாம் கற்றுத்தரும்
சிட்டுக்குருவி.

வீட்டுக்குள்ளே எந்தஇடம்
சிட்டுக்குருவி.
வேண்டுமோநீ சொல்லிடுவாய்.
சிட்டுக்குருவி.
கூட்டைஅங்கே கட்டிக்கொள்வாய்
சிட்டுக்குருவி.
கொடுக்கவேண்டாம் வாடகையும்,
சிட்டுக்குருவி.

கூட்டைநாங்கள் கலைக்கமாட்டோம்
சிட்டுக்குருவி
குஞ்சுகளைத் தொடவுமாட்டோம்
சிட்டுக்குருவி.
சேட்டையொன்றும் செய்யமாட்டோம்
சிட்டுக்குருவி,
திண்ணம்இது திண்ணமாகும்
சிட்டுக்குருவி,

குழந்தை பிறந்தது, பிறந்ததுமே,
‘குவாக்குவா’ சத்தம் எழுந்ததுவே.

அம்மா அந்தக் குழந்தையினை
ஆர்வத் துடனே பார்த்தனளே.

கண்ணைப் பார்த்தாள், ஆசையுடன்,
கண்டாள் அதனில் ஒளியினையே.

‘என்றன் குழந்தை குருடல்ல’
என்றே அம்மா மகிழ்ந்தனளே.


முகத்தைப் பார்த்துச் சிரித்திடுமாம்.
மூன்று மாதக் குழந்தையினைக்

கையைத் தட்டி அழைத்திடுவாள்.
காதால் கேட்டுத் திரும்பிடுமாம்.

‘என்றன் குழந்தை செவிடல்ல’
என்றே அம்மா மகிழ்ந்திடுவாள்.


ஒன்பது மாதம் சென்றதுமே
'உப்புப் புப்'பெனக் கூறிடுவாள்.

அம்மா சொல்வதை அழகாக
அந்தக் குழந்தையும் கூறிடுமாம்.

‘என்றன் குழந்தை ஊமையென
எவரும் கூறார்’ என்மகிழ்வாள்.


பத்து மாதம் ஆனதுமே
தத்தித் தத்தித் தவழ்ந்திடுமாம்.

அத்துடன் நிற்கப் பழகிடுமாம்.
அம்மா அதனைக் கண்டதுமே,

‘என்றன் குழந்தை சப்பாணி
இல்லை’ என்றே மகிழ்ந்திடுவாள்.


அப்புறம் ஒருசில மாதங்கள்
ஆனதும், அந்தக் குழந்தையுமே,

நன்றாய் நின்று, நேராக
நடக்கப் பழகிடும்; அதுகண்டு,

‘என்றன் குழந்தை முடமல்ல’
என்றே அம்மா மகிழ்ந்திடுவாள்.


கூனாய்க் குருடாய் இல்லாமல்,
கூப்பிடும் குரலைக் கேட்பவனாய்

இருந்தும் நல்ல குணம் எதுவும்
இல்லா திருந்தால் என்னபயன்?

அம்மா மகிழ்ச்சி கொள்ளுவளோ?
அதிகத் துயர்தான் அடைந்திடுவாள்.


‘பத்து மாதம் சுமந்தென்ன?
பாடு பட்டு வளர்த்தென்ன?

எத்தனை கஷ்டப் பட்டென்ன?
இதுபோல் பிள்ளை இருக்கிறதே!’

என்றே எண்ணி வருந்திடுவாள்;
என்றும் கவலை கொண்டிடுவாள்.

உண்ண உணவு தந்திடும்
உழவர் வாழ்க, வாழ்கவே,
மண்ணை உழுது பயிர்களை
வளர்க்கும் உழவர் வாழ்கவே.

ஒன்றை நூறு நெற்களாய்
உண்டு பண்ணித் தருபவர்;
நன்கு உழுது வியர்வையால்
நனைந்து போக உழைப்பவர்;

கண்ணைப் போலப் பயிர்களைக்
காத்து உயிர்கள் காப்பவர்
உண்ண உணவு இன்றியே
உடல் வருந்தல் நீதியோ?

பாடு பட்டு உழுபவர்,
பலனும் கண்டு தருபவர்,
நாடு வளர வாழ்பவர்.
நன்கு வாழ்க, வாழ்கவே!

சின்னப் பாப்பா தன்னைநாம்
சேர்த்த ணைத்துத் தூக்கலாம்.
நன்கு வளர்ந்த மனிதனை
நம்மால் தூக்க முடியுமோ?

கன்றுக் குட்டி தன்னைநாம்
கட்டிப் பிடித்து நிறுத்தலாம்.
நன்கு வளர்ந்த காளையை
நம்மால் அடக்க முடியுமோ?

சின்னச் செடியை எளிதிலே
சிரம மின்றிப் பிடுங்கலாம்.
நன்கு வளர்ந்த மரத்தினை
நம்மால் அசைக்க முடியுமோ?

வளர விட்டு எதையுமே
வசப்ப டுத்தல் சிரமமே.
எளிது அல்ல! ஆதலால்,
இதனை நாமும் உணர்ந்துமே,


கெட்ட செய்கை யாவையும்
கிள்ள வேண்டும், முளையிலே.
விட்டோ மானால் வளரவே
மிகுந்த சிரமம் ஆகுமே!

அம்மா, அம்மா, விளையாட
அழைக்கிறார்கள் தோழர்கள்.
சும்மா சும்மா இருந்தாலே
சோம்பல் அதிகம் ஆகிடுமே!

கூட்டை விட்டுப் பறந்தோடிக்
குருவிக் குஞ்சு திரிவதுபோல்
வீட்டை விட்டு நாங்களுமே
விளையா டிடவே சென்றிடுவோம்.

வெளியில் சென்றே எல்லோரும்
விளையா டிடுவோம் மகிழ்வுடனே.
மழலைச் சொற்கள் கேட்டிடவே
வழியில் செல்வோர் கூடிடுவர்.

மண்ணால் நல்ல வீடுகளை
மகிழ்ந்து நாங்கள் கட்டிடுவோம்.
பண்ணும் அந்த வீட்டினிலே
பறவைக் கூடும் கட்டிடுவோம்.

வெண்ணி லாவும் வந்தங்கே
விளையாட் டதனைக் கண்டிடவே
எண்ணி மேலே நிற்பதனால்
இப்போ தேநான் சென்றிடுவேன்.

ஆடல், பாடல் செய்திடுவோம்.
அதனால் நன்மை பெற்றிடுவோம்.
தேட வேண்டாம் என்னையுமே,
சீக்கிர மாக வந்திடுவேன்!