உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சரியாகத்தான் நடந்துகொண்டது, அதை வெள்ளையனிடம் சேர்த்து விட்டது.

துரையவர்கள், சீமைக்குத் தனது புதிய ஆங்கிலக் காதலியுடன் செல்லுமுன் மருதிக்குக் கொடுத்த பரிசு - பரங்கிப் புண். அதனுடைய ஆதிக்கம் அதிகமாக வளர ஆரம்பித்தது.

அடுத்த துரை வந்ததும் - அவருக்கு சுகாதாரம் ஒரு பெரிய பைத்தியம் - மருதிக்குத் தோட்டக்காரி என்ற அந்தஸ்துப் போய் மறுபடியும் அவள் தேயிலைக் கூலியாகிவிட்டாள். ஆனால் முன் போல் பெரிய தெய்வங்கள் இவளை ஏறெடுத்துப் பார்ப்பதும் கிடையாது; அதற்குப் பதிலாக வசைமொழிகள் கிடையாது போனால் அவள் அதிர்ஷ்டம்.

அங்கிருக்கும் கூலிகளில் பலர் அவளுக்குக் கள்ளுத் தண்ணி வாங்கிக் கொடுத்து அவளுடைய தயவை எதிர்பார்ப்பது என்ற நிலைமை ஏற்பட்டுவிட்டது.

சில சமயம் மருதிக்கு, ஊரைப் பார்த்துப் போய்விடலாமா என்ற எண்ணம் தோன்றும். ஊருக்குப் போனால் அப்பன் வீட்டில்தான் இருக்கவேண்டும். வெள்ளையனிடம் செல்வதற்கு மனத்தில் எவ்வளவு ஆசை இருந்தும், அங்கு செல்வதற்கு மனம் ஒப்பவில்லை.

இங்கு வந்த சில காலத்திற்குள் அவளுடைய உருவம் அதன் யௌவனக் களை எல்லாம் மாறிவிட்டது. பழைய மருதியல்ல; வாசவன்பட்டியில் இருந்த அவளுடைய சிரிப்பும் பேச்சும் பழங்கதையாகிவிட்டது.

அன்று விடியற்காலம் வெள்ளையன் குழந்தையை எடுத்துக் கொண்டு சென்ற காட்சி அவள் கண் முன் அடிக்கடி தோன்றும். குழந்தை, குழந்தை, குழந்தை! இதுதான் எப்பொழுதும் நினைப்பு. வெள்ளைச்சி இப்பொழுது என்ன செய்து கொண்டிருப்பாள், பேசுவதற்குப் படித்திருப்பாளா? - என்பதெல்லாம் கனவு.

உள்ளூரப் பூச்சியரித்தது மாதிரி நினைவுகள் குடைய ஆரம்பித்துவிட்டால் பொக்கான தேகம் என்னதான் எதிர்த்து நிற்க முடியும்? செத்தால் வாசவன்பட்டியில் தான் சாக வேண்டும் என்ற ஆசை அதிகரித்துவிட்டது.

இப்பொழுது மருதிக்குக் கால் கைகளில் புண். அத்துடன் குத்திருமலும் சேர்ந்து கொண்டது. ஆஸ்பத்திரி மருந்துத் தண்ணியை எத்தனை நாள் குடித்தும் பயன் இல்லை. வைத்தியர் மருந்தூசி குத்த வேண்டும் என்றார். அது கொஞ்சநாள் கங்காணிச் சுப்பன் தயவில் நடந்தது; அதுவுமல்லாமல் அவளுக்குப் பக்கத்து வீட்டில் இருந்த பேச்சியும் கூட இருந்து உதவி செய்தாள்.

அது எப்படியிருந்தாலும் காலையில் தேயிலைக் கொழுந்து பறிக்கச் செல்வது தடைப்பட்டுவிடக்கூடாது. அதில் கங்காணிச்

296

துன்பக் கேணி