றதா? கிறிஸ்தவ மதம், 'நான் சொல்வதை நம்பு; நீயாக ஆலோசிக்க உனக்கு அநுமதி இல்லை' என்கிறது. ஹிந்து மதம், 'நீ என்ன வேண்டுமானாலும் எண்ணு; ஆனால் சமூகக் கட்டுப்பாடு என்ற வேலியைத் தாண்டாதே!' என்கிறது. இவற்றில் எது பெரியது?
எப்படியாவது தாயைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை! ஆனால் அம்பியின் கோபத்திற்குப் பயம். ஜயா! அவள் அவன் தான்! இவன் நினைத்ததெல்லாம் அவளுக்குச் சரி.
❍❍
நாட்கள் கழிந்தன.
அம்பிக்குப் பெட்ரோல் கம்பெனியில் 15 ரூபாய் சம்பளத்தில் ஒரு வேலை.
மீனாக்ஷியம்மாளுக்குப் படுக்கை நிரந்தரம்; கிட்டுவின் நினைவு நிரந்தரம்.
அன்று சாய்ந்தரம் மீனாக்ஷியம்மாளின் நினைவு தடுமாறியது.
ஏதோ, தற்செயலாகக் கிட்டுவும் துணிந்து தன் மனைவியுடன் வந்தான்.
உள்ளே ஜயாவை அழைத்துச் செல்வதற்குப் பயம். அதற்குள் ஜயா முந்திக்கொண்டாள். "நான் வெளியில் நிற்கிறேன்; பார்த்துவிட்டு வாருங்கள்" என்றாள்.
கிட்டு உள்ளே சென்றதும் திடுக்கிட்டான். தாயின் சாயைதான் படுக்கையில் கிடந்தது.
அம்பி ஒன்றும் பேசவில்லை.
சற்று நேரம் பொறுத்து, "இதுதான் உன் வேலை, பார்த்தாயா?" என்றான்.
கிட்டுவிற்குக் கோபம் வந்தது.
"நான் எனது லக்ஷியத்தை அடைந்தேன். அதற்கு யார் தடை?" என்றான்.
"ஒரு பெண்ணுக்காக அசட்டுத்தனமான மதந்தான் உனது லக்ஷியமோ? தனது தர்மத்தைப் பற்றிக் கேட்டாவது இருக்க வேண்டும். லக்ஷியம் என்ன குட்டிச்சுவர்?" என்றான் அம்பி.
இருவருக்கும் வாக்குவாதம் வலுத்துவிட்டது.
மீனாக்ஷியம்மாள் விழித்தாள்.
"தெய்வமே! நீ இருக்கிறாயா? என் இரத்தம், என் குழந்தைகள்! இவைகள் இரண்டிற்கும் இப்படிச் சண்டையை உண்டுபண்ணிவிட்டதே, தர்மமா? அது நிஜந்தானா!" என்று பரபரப்புடன் எழுந்து உட்கார்ந்து பேசினாள். முகத்தில் தேஜஸ் இருந்தது; புதிய சக்தி இருந்தது. சொன்னவுடன் களைப்படைந்து சாய்ந்தாள்.
352
புதிய கூண்டு