உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூரளைத் தோட்டத் துரைகளுக்கும் உயர்தரத் தோட்ட உத்தியோகஸ்தர்களுக்கும் க்ஷவரத் தொழில் செய்து, கை நிறையக் கொடுத்த பக்க்ஷிஸ், சம்பளம், உணவு இவற்றுடன், இடையிடையே தொல்லைப்படுத்திய மலைக்காய்ச்சலும் பெற்று, கடைசியாகத் தன் முப்பதாவது வயதில் கொழும்பில் ஸலூன் வைத்தான். அந்தக் காலத்தில் ஸலூன் தொழிலில் அவ்வளவு போட்டி கிடையாது. இந்தியாக்காரர்கள் அவனுக்கு ஆதரவு அளித்தனர். தொழில் வளர்ந்தது. எப்பொழுதோ ஒரு முறை செய்த அவனுடைய இந்தியப் படையெடுப்பும் கலியாணமும் இடையிடையே நடைபெற்ற சம்பவங்கள்.

ஸலூன் முயற்சியில் நல்ல பலன் ஏற்பட்டதோடு, சித்த வைத்தியசாஸ்திரத்தில் சிறிதளவு பரிச்சயம் பெற்றுக்கொள்ள அவகாசமும் கிடைத்தது. இதனுடன் சமீபகாலமாக, இலங்கை மருத்துவ குல அன்பர்களின் சர்ச்சைகளின் மூலஸ்தானமாக விளங்கும் இலங்கைத் தினசரி ஒன்றும் அவன் மன விசாலத்திற்கு உற்ற துணையாக இருந்தது.

மருத்துவனார் தம் ஐம்பதாவது வயதில் தாய் நாடு திரும்பும் இலங்கைக் குடியேற்ற விருதுகளுடன் திருநெல்வேலி ரயில்வே ஸ்டேஷனில் இறங்கிய பொழுது கையில் ரொக்கமாக ரூ.5,000 மும், மேற்கொண்டு அழகியநம்பியாபுரத்தில் மூன்று கோட்டை நன்செய்யும், கொழும்பு ஸலூனில் வாரிசாக அவர் புத்திரனும் உண்டு.

அழகியநம்பியாபுரத்திற்கு பஸ் வந்துவிட்டது என்பதற்கு ரஸ்தாவின் இடப்பக்கத்துப் புளியமரத்தடியில் இருக்கும் எட்டாவது மைல் கல், அதற்குப் பக்கத்தில் உள்ள வயிரவன் பிள்ளை வெற்றிலை பாக்குக் கடை, டாக்டர் விசுவநாத பிள்ளையின் நந்தவனம் என்ற புன்செய்த் தோப்பின் மூங்கில் கேட், இவை எல்லாவற்றிற்கும் எதிராக இருக்கும் மருதப்ப மருத்துவரின் இரண்டடுக்குக் காறை வீடு - யாவும் பறைசாற்றினாற்போல் அறிவிக்கும்.

ரஸ்தாவில் இரு புறமும் மிகவும் நெருக்கமாக வளர்ந்த புளிய மரங்கள்; பஸ் நிற்கும் ஸ்தானத்துக்கு அருகில் எப்போதோ ஒரு காலத்தில் நிறுத்திவைக்கப்பட்ட சுமைதாங்கிக் கல்; அதன் குறுக்குக் கல் யதாஸ்தானத்தைவிட்டுக் கீழே விழுந்து எத்தனை காலமாயிற்றோ! பொதுவாக, நம்மில் பலர் தம்மை எந்த ஹோதாவில் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளுகிறார்களோ, அதே உரிமையில் அதற்குச் சுமைதாங்கி என்ற பெயர் கிடைத்திருக்கிறது.

நேரம் நல்ல உச்சி வெய்யில், ஆனாலும், சாலையில் இம்மிகூடச் சூரிய வெளிச்சம் கிடையாது. பலசரக்குக்கடைச் சுப்புப் பிள்ளை பட்டறையில் உட்கார்ந்து, சுடலைமாடன் வில்லுப்பாட்டுப் புஸ்தகம் ஒன்றை ரஸமாக உரக்கப் பாடி, கடைச் சாய்ப்பின் கீழ் துண்டை விரித்து முழங்காலைக் கட்டி உட்கார்ந்திருக்கும் இரண்டொரு தேவமாரை (மறவர்) மகிழ்வித்துக் கொண்டிருக்கிறார். தம்பலத்தால் வாயில் எச்சில் ஊற்று நிறைய நிறைய, வாசிப்புக்கு

புதுமைப்பித்தன் கதைகள்

409