சிலகாலம் பலசரக்கு வியாபாரம் நடத்தியது. அந்த வியாபாரத்தில் ஸ்ரீ சுப்பையா பிள்ளையும் பண வசூல், கணக்கு, வியாபாரம் என்ற நானாவித இலாகாக்களையும் நிர்வகித்தார், அதாவது 'மான்ட் போர்ட்' சீர்திருத்தக் காலத்து மாகாண மந்திரிகள் மாதிரி. பிறகு 'தனலட்சுமி ஸ்டோ ர்ஸ்' ஜவுளிக் கடையாக மாறி, திருநெல்வேலி மேலரத வீதி ஜவுளி வர்த்தகர்களில் சில்லறைப் பேர்வழிகளுக்கு மொத்தச் சரக்குப் பிடித்துக்கொடுக்கும் இணைப்புச் சங்கிலியாகி, பெரிய வர்த்தகம் நடத்துவதற்குக் காரணம் கம்பெனிக்கு ஆரம்பத்தில் கிடைத்த ஆதரவினால் ஏற்பட்ட லாபம் என்பதுடன், எதிரில் திறக்கப்பட்ட 'மீனாட்சி பிரொவிஷன் அன்ட் பயர்வுட் ஸ்டோ ர்ஸ்' என்பதை மறந்துவிடலாகாது. இது தஞ்சாவூர் ஐயர் ஆரம்பித்த கடை. சர்க்கரையாகப் பேசுவார்; பற்று வரவும் சௌகரியத்திற்கு ஏற்றபடி இருந்தது. அவர் கடையில் கணக்கு வைத்ததால், குடும்பத் தலைவர்கள் வீட்டுத் தேவைகளுக்கு என்று தனி சிரமம் எடுத்துக் கொண்டு வெளியில் காலடி எடுத்து வைக்க வேண்டிய அவசியமில்லாது போயிற்று. மேலும் 'தனலட்சுமி ஸ்டோ ர்ஸ்' முதலாளி, தமக்கு அந்தப் பகுதி 'திருநெல்வேலிச் சைவர்களுடன்' ஏற்பட்ட நெருங்கிய தொடர்பால் கடையில் நேரடியாக வந்து வாங்குகிறவர்களுக்கு ஒரு மாதிரி, வீட்டில் இருந்துகொண்டு கணக்குச் சிட்டையை அனுப்பி மாசாமாசம் பாக்கி வைப்பவர்களுக்கு ஒரு மாதிரி என்று நடக்க ஆரம்பித்ததும் இதற்கு ஒரு துணைக் காரணம். விசேஷமாக மண்பானைச் சமையல் என்ற விளம்பரங்களுடன் சைவச் சாப்பாட்டு ஹோட்டல் ஒன்றும் மூடப்பட்டது. அதாவது 'தனலட்சுமி ஸ்டோ ர்ஸி'ல் மொத்த வியாபாரம் நடத்திய ஹோட்டல் பிள்ளை, ஊரோடு போய்ச் சௌகரியமாக வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன் 'ரிட்டயராகி' விட்டார்; சாத்தூர் 'டிவிஷ'னில் அவருடைய மகன் 'ரெவின்யூ இன்ஸ்பெக்டர்' உத்தியோகம் பார்த்ததால் அவருக்கு ஹோட்டல் நடத்துவது அகௌரவமாக இருந்தது. நிலபுலன்களைப் பார்க்கப் போவதாகச் சென்னைக்குச் செலவு பெற்றுக்கொண்டார். இப்படியாகத் 'தனலட்சுமி ஸ்டோர்ஸ்' ஜவுளிக்கடையாக மாறியது.
இந்த மாறுதலால் ஸ்ரீ சுப்பையா பிள்ளைக்கு அந்தஸ்தும் உயர்ந்தது; சம்பளமும் உயர்ந்தது. திருநெல்வேலிக் கடைப்பிள்ளைகள் வரும்போதும் போகும்போதும் காட்டும் சிரத்தையால் உபவருமானமும் ஏற்பட்டது. உடை, நாட்டு வேஷ்டியிலிருந்து மல்வேஷ்டியாயிற்று. பாங்கியில் பணமும் கொஞ்சம் சேர்ந்தது. அதனுடன் அவருடைய குடும்பமும் பெருகியது. குடும்ப 'பட்ஜட்'டில் வீட்டு வாடகை இனம் பெரும் பளுவாக இருந்தாலும் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற வசதி அளிப்பதாக இல்லை.
தேச விழிப்பின் முதல் அலையான ஒத்துழையாமை இயக்கம், பின்னர் அதன் பேரலையான உப்பு சத்தியாக்கிரகம் - இவருடைய வாழ்விலோ, மனப்போக்கிலோ மாறுதல் ஏற்படுத்தவில்லை. வீரபாண்டியன்பட்டணத்தின் ஒரு சிறு பகுதியாகவே அவர்
புதுமைப்பித்தன் கதைகள்
571