உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/573

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சென்னையில் நடமாடினார். ஜீவனோபாயம், பிறகு சௌகரியப்பட்டால் பிறருக்கு உதவி, சமூகத் தொடர்புகளுக்குப் பயந்து பணிதல் - எல்லாம் சேர்ந்த உருவம் ஸ்ரீ சுப்பையா பிள்ளை. காலணாப் பத்திரிகைகள் காங்கிரஸின் சக்தியை அவரிடம் கொண்டுவந்து காட்டவில்லை என்றால், பவழக்காரத் தெரு, திருநெல்வேலி மேற்கு ரதவீதி, அப்புறம் நினைவிலிருக்கும் வீரபாண்டியன்பட்டணம் என்ற மூன்று சட்டங்களுக்குள்ளாகவே அவருடைய மனப் பிரதிமை அடங்கிக் கிடந்தது என்று வற்புறுத்துவது அவசியமில்லை.

மின்சார ரெயில் வண்டி அவருடைய வாழ்வில் ஒரு பெரிய மாறுதலை ஏற்படுத்தியது. அவர் வேலை பார்த்த கடையின் பூர்வாசிரமத்தில், அவர் பற்று வரவு நடத்திய பெங்களூர் நாயுடு, ஒரு முழு வாழ்விலும் சம்பாதித்த ஏமாற்றத்தின் சின்னங்களுடன் பழையபடி சொந்த ஊருக்குப் போய்விட விரும்பினார். அவருக்குத் தாம்பரத்தில் ஒரு சின்ன வீடு இருந்தது. ஸ்ரீ சுப்பையா பிள்ளைக்கு அவருடைய வார்த்தைகள் மீது நம்பிக்கை இருந்தது. அதன் விளைவாகப் பிள்ளையவர்களுக்குத் தாம்பரம் - பீச் யாத்திரை பிரதி தினமும் லபித்தது. ஊருக்கெல்லாம் மின்சாரம் வந்தாலும் அவருக்கு அந்தப் பழைய மண்ணெண்ணை (கிரோசின்) விளக்குத்தான்; குழாய் வந்தும் அவருக்குத் தாம்புக் கயிறும் தவலையுந்தாம்.

பிள்ளையவர்கள் இத்தனை காலம் வீட்டு வாடகைக்குச் செலவு செய்தது, இப்பொழுது தனக்கும் தன் மூத்த பையனுக்கும் - அவன் படிக்கிறான் - ரெயில் பாஸுக்குச் செலவாயிற்று. விடியற்காலம் கிணற்றுத் தண்ணீர் ஸ்நானம். பழையது, கையில் பழையது மூட்டை, பாஸ், வெள்ளி விபூதிச் சம்புடத்தில் உள்ள இரண்டணாச் சில்லறை - இந்தச் சம்பிரமங்களுடன் பவழக்காரத் தெருவை நோக்கிப் புறப்படுவார்.

இரவு கடைசி வண்டியில் காலித் தூக்குச் சட்டி, பாஸ், வெள்ளி விபூதிச் சம்புடத்தில் உள்ள இரண்டணாச் சில்லறை, பசி, கவலை - இவற்றுடன் தாம்பரத்திற்குத் திரும்புவார். 'பெண்ணுக்குக் கல்யாணம் காலாகாலத்தில் செய்யவேணும். மூத்தவனுக்குப் பரீக்ஷைக்குப் பணம் கட்ட வேணும். தோற்றுப் போய் வீட்டோ டு இருக்கும் சின்னவனை ஏதாவது ஒரு தொழிலில் இழுத்துவிட வேணும். நாளைக்குப் பால்காரனுக்குத் தவணை சொல்லாமல் பணம் ஏதோ கொஞ்சம், கூடக் குறையவாவது கொடுக்க வேணும்...'

பிள்ளையவர்கள் அநுட்டானாதிகள் முடித்துக்கொண்டு, சாப்பிட்டு முடித்து 'முருகா' என்று கொட்டாவி விட்டபடி திண்ணையில் சரிவதற்குமுன் மணி பன்னிரண்டாகிவிடும். இப்படியே தினந்தோறும்...

2

காலை ஏழு மணி சுமாருக்குத் திருவனந்தபுரம் 'எக்ஸ்பிரஸ்' விசில் சப்தம், 'அவுட்டர் சிக்னல்' அருகில் கேட்கும்பொழுது

572

சுப்பையா பிள்ளையின் காதல்கள்