ஸ்ரீ சுப்பையா பிள்ளை தாம்பரம் ஸ்டேஷன் மாடிப் படிகளில் கால் வைப்பார். எதிரில் நிற்கும் டிக்கெட் பரிசோதகன் புது ஆசாமியாக இருந்தால் பாஸை எடுத்துக் காண்பித்துவிட்டு மேலேறுவார். இல்லாவிட்டால், சிந்தனைகளுடன், படிகளில் கால் உயர்ந்தேறிச் செல்லும்; கண்கள் தெற்கு நோக்கி ரெயில் வண்டி வரும் திசையைத் துழாவும்; திருநெல்வேலையிலிருந்து தமக்குத் தெரிந்த யாரும் வந்தால் பார்க்கலாமே என்ற ஆசைதான். 'எக்ஸ்பிரஸ்' புறப்பட்ட பிறகுதான் மின்சார ரெயிலும் புறப்படும். ஆகையால் அந்த நேரத்தில், 'எக்ஸ்பிரஸ் பிளாட்பார'த்திற்குச் சென்று இரவு முழுவதும் கொசுக்களுடன் மல்லாடிய சிரமத்தைச் செங்கற்பட்டு அவசரக் காப்பியில் தீர்த்துக் கொண்ட பாவனையில் ஜன்னல் வழியாகத் தலை நீட்டுபவர்களைப் பார்ப்பதில் ஒரு நாட்டம் பிள்ளையவர்களுக்கு எப்பொழுதும் உண்டு.
இடுப்பில் நாலு முழம் மல், தோளில் ஒரு துவர்த்து, மடியில் சம்புடம் வகையறா, கையில் போசன பாத்திரம் - இந்தச் சம்பிரமங்களுடன் பிள்ளையவர்களை எப்பொழுதும் - மழையானாலும் வெயிலானாலும் பார்க்கலாம். எப்பொழுதும் ஒரு வாரமாக க்ஷவரம் செய்யாத முகம், நெற்றியில் பளிச்சென்ற விபூதி, நனைந்துலரும் தலை மயிரைச் சிக்கெடுக்கும் வலக்கை - இவைகளை நினைத்துக் கொண்டால் சுப்பையா பிள்ளையின் உருவம் வந்து நின்றுவிடும். மழைக் காலமானால் கையில் குடை ஒன்று எப்பொழுதும் விரித்துப் பிடித்தபடி போசன பாத்திரத்துடன் அதிகமாகக் காணப்படும்.
தெற்கு ரதவீதி ஜவுளி வியாபாரிகள் இவரிடம் தப்பித்துக் கொண்டு நேரடியான வியாபாரம் நடத்திவிடுவது துர்லபம்; அப்படி எப்பொழுதாவது நடத்த முயன்றிருந்தால் பிள்ளையவர்களுக்குத் தேக அசௌக்கியம், ரெயிலுக்கு வரத் தாமதமாயிற்று என்பதுதான் கணக்கு. இதனால் பிள்ளையிடம் கடை முதலாளிக்கு வெளிக் காட்டிக் கொள்ளப்படாத தனி வாஞ்சை - 'சுப்பையா இல்லாட்ட நம்ம கையொடிஞ்ச மாருதி' என்பார் முதலாளிப் பிள்ளை. இவ்வளவிருந்தும் பண விஷயத்தில் என்னவோ அவர் வெகு கறார்ப் பேர்வழி.
பிள்ளையவர்கள் ரெயிலில் ஏறுவதே ஒரு தினுசு. நடுமைய வண்டியில், வாசலுக்கு அருகில் உள்ள வலது பக்கத்து 'ஸீட்டில்', எஞ்சினுக்கு எதிர்ப்புறமாகத்தான் உட்காருவார். அது அவருடைய 'ஸீட்'. புறப்படுகிற இடத்தில் ஏறிக் கடைசியாக நிற்கிற இடத்தில் வந்து இறங்குகிறதால் இந்த இடத்துக்கு அவரிடம் யாரும் போட்டிக்கு வந்ததே இல்லை. வந்திருந்தாலும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்க மாட்டார்கள். தாம்பரத்திலிருந்து 'பீச்' வரையில் உள்ள பாக்கங்களிலும், பேட்டைகளிலும் இரண்டிரண்டு நிமிஷம் வண்டி நிற்கும்பொழுதுதான் அவருடைய நிஷ்டை கலையும். வண்டி 'பீச்' ஸ்டேஷனில் வந்து நின்றுவிட்டது என்றவுடனேயே இறங்குவதில்லை. வெளியில் இறங்கியதும் வேஷ்டியை உதறிக் கட்டிக் கொண்டபின் துவர்த்து முண்டை உதறி மேலே போட்டுவிட்டு பிறகு ஜன்னல் வழியாக வண்டிக்குள் தலையையும் கையையும் விட்டு
புதுமைப்பித்தன் கதைகள்
573