ஒரு டம்ளரை எடுத்து அண்டாவில் இருக்கும் தண்ணீரை மொண்டுவந்து புழக்கடை வெராண்டா ஓரத்தில் நின்றுகொண்டு ஊற்றி, தாரையாகத் தரையில் சுர் என்ற சப்தத்துடன் விழுவதை ரசித்துக்கொண்டிருக்கிறது.
ஒரு டம்ளர் ஆனதும் மறு டம்ளர், மறு டம்ளர், மறு டம்ளர்...
இந்த விவகாரத்தில் குழந்தையின் உடம்பும் பாவாடையும் நனைந்துவிடுகிறது.
பால்காரன் அந்தச் சமயம் பார்த்து புழக்கடை வெராண்டாவில் 'அம்மா' என்று பால் கொண்டுவந்து நிற்கிறான்.
'அம்மா தூங்கறாங்க" என்று தண்ணீர் விடுவதை ரசித்துக் கொண்டே பதிலளிக்கிறது குழந்தை.
"ஏம்மா இப்படி தண்ணியை கொட்றெ?" என்கிறான் பால்காரன்.
"இங்கே வந்து பாரு, சுர்ர் என்னுக்கிட்டு விழுது" என்று அவனையும் ரசிக்கும்படி அழைக்கிறது குழந்தை.
"ஊத்தாதெ அம்மா, ராஜால்லெ" என்கிறான் பால்காரன்.
"அப்படித்தான் ஊத்துவேன்" என்று மறுபடியும் டம்ளரை அண்டாவில் முக்குகிறது.
"நான் பால் குடுக்கணமே, முருவன் எங்கெம்மா?" என்கிறான் பால்காரன்
குழந்தை டம்ளரைக் கீழே வைத்துவிட்டு, இரண்டு கைகளையும் நீட்டி விரித்துக்கொண்டு "அவன் போக்களிஞ்சே போனானே!" என மரகதத்தைக் காப்பியடித்துக் காண்பிக்கிறது.
இந்த நடிப்பைக் கண்டு ரசித்து ஒரு 'பாட்டம்' சிரித்து ஓய்ந்த பால்காரன், "நீ அந்தச் சொம்பை எடுத்தாம்மா, நான் பாலை ஊத்தித் தாரேன், ஊட்லெ கொண்டு வச்சி, அந்த ஜோடுதாலையைப் போட்டு மூடிப்போடு" என்கிறான்.
குழந்தை பாலை வாங்கிக்கொண்டு உள்ளே வைத்து மூடிவிட்டுத் தாயாரை எழுப்ப ஓடுகிறது.
அது தாயாரை அணுகும் சமயம், ஹால் கடிகாரம் மணி மூன்று அடிக்கிறது.
"அம்மா அம்மா" என்று தோளைப் பிடித்து உலுப்புகிறது.
"இன்னும் என்னடி?" என்கிறாள் மரகதம்.
"அம்புட்டு மணியும் அடிச்சாச்சு" என்கிறது.
"போடி போ" என்கிறாள் மரகதம்.
"இல்லெம்மா நெசமா அம்புட்டு மணியும் இப்பத்தாம்மா அடிச்சுது; நான் கேட்டேனே" என்று துடிக்கிறது குழந்தை.
"அப்பா வாரத்துக்கு. நேரமாகும், நீ போ" என்று விட்டு மறுபுறம் புரண்டுகொள்ளுகிறாள்.
700
சிற்றன்னை