வட்டு விளையாட முயலுகிறது. அதற்கு கட்டம் போடத் தெரியவில்லை. இஷ்டம்போல் கோணல்மாணலாக இரண்டு மூன்று கோடுகள் கீச்சிவிட்டு தூரத்தில் வந்து நின்றுகொள்ளுகிறது.
கையிலிருக்கும் ஒட்டாஞ்சில்லியைக் கோட்டுக்குள் வீசுகிறது.
நொண்டியடிப்பதுபோல ஒற்றைக் காலைத் தூக்கிக்கொள்ளுகிறது. வராததனால் படபடவென்று இரண்டு காலையும் வைத்து ஓடி விழுந்து கிடந்த சல்லியின்மேல் 'பட்' என்று காலை வைத்துக் கொண்டு, நொண்டியடித்து வந்ததுபோல ஒற்றைக் காலைத் தூக்கிக் கொண்டு சிறிது நிற்கிறது. அதற்கு இந்த 'சில்லாட்டம்' தெரியாது. எப்பவோ ஒரு தடவை ராஜாவுடன் விளையாடியிருக்கிறது.
இப்படி நின்றுவிட்டால் ஒரு ஆட்டம் ஜயித்தாச்சு என்பது அதன் சித்தாந்தம். சில சமயம் வேறு யாரையோ ஆடச் சொல்லுவது போல் பாவனை செய்து அந்தக் கற்பனை நபராகத் தன்னை ஆக்கிக்கொண்டு விளையாடும்.
இப்படி இது விளையாடிக்கொண்டிருக்கையிலே, கருத்த தாடியும் மீசையும், கையிலே திருவோடுமாக ஒரு ஆண்டி அந்தப் பக்கமாக வருகிறான். அவன் கட்டியிருக்கும் உடை தூய வெள்ளையாக இருக்கிறது. பரதேசிக் கோலத்தில் காணப்பட்டாலும் பிச்சைக்காரன் அல்ல என்று தெரிகிறது. நல்லவன் என்று சொல்லும்படியாக கண்ணிலே ஒரு குளுமை தேங்கி நிறகிறது. சிறிது எடுத்த மூக்கு, எடுத்த நெற்றி, சிறிது தடித்த உதடு, மீசைக்குப்பின், மேகப் படலத்திற்குப் பின்னால் பாறை தோன்றுவதுபோல வெளுத்த ஆனால் சிறிது எடுப்பான பல். ஒரு கையில் இலையால் மூடிய திருவோடு மறு கையில் சிறு மூட்டை. நிழலுக்காக உள்ளே நுழைகிறான். குழந்தை நின்ற இடத்திற்குப் பின்புறமாக மரத்தடியில் வந்து உட்கார்ந்து திருவோட்டிலிருந்த ஜலம்விட்ட சாதததை எடுத்துச் சாப்பிட ஆரம்பிக்கிறான். துணைக்கறியாக ஒரு துண்டு இலையில் இரண்டு மிளகாய் வற்றல்களும் கொஞ்சம் உப்புக்கல்லும் வைத்துக் கொண்டிருக்கிறான். குழந்தை அவன் வந்ததைக் கவனிக்கவில்லை.
விளையாடிக்கொண்டிருக்கிறது...
வட்டை எடுத்துப் போடுகிறது. குழந்தைக்கு ஒரு பொருளை வாட்டமாக முன்பக்கம் விட்டு எறிவதில் பழககம் கிடையாது. உள்ளங்கையில் வைத்துக்கொண்டு கீழிருந்து மேல்வாட்டமாக எறியும்; அல்லது தலைக்குமேல் ரொம்ப உயர்த்திக்கொண்டு வேகமாகக் கையை வீசிப் பின்புறமாகக் கொண்டுவரும். இந்த முயற்சிகளால் சில சமயங்களில் வட்டு பின்புறமாகப் பார்த்துப் பறந்துவிடும்.
அப்படிச் சம்பவிக்கவே குழந்தை பின்பக்கம் திரும்புகிறது. நாடோடியைப் பார்த்துவிடுகிறது.
"ஐயோ! பூச்சாண்டி... " என்று உச்ச ஸ்தாயியில் கிரீச்சிட்டுவிட்டு பிரமித்து நின்றுவிடுகிறது. குழந்தையின் கண்கள் பயத்தில் வெளியே தள்ளுகிறது.
புதுமைப்பித்தன் கதைகள்
707